Editorial / 2025 நவம்பர் 10 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோட்டை இராஜதானி, இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வீர பத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் மற்றும் இராகு பகவான் திருத்தலம், ஆன்மீகப் பயணத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது.
இலங்கையில் கிரகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்கள் அரிது; அதிலும் இராகு பகவானை பிரதிஷ்டை தெய்வமாக வழிபடும் ஒரே ஆலயம் இதுவே. அதிசயமாக, இலங்கையின் நிருதித் திசையில், அதாவது தென்மேற்கு திசையில் இத்தலம் அமைந்துள்ளது என்பது ஒரு தெய்வீகச் சிறப்பு. இதன் சூட்சுமம் என்னவென்றால், இராகுவுக்குரிய திசை நிருதி என்பதே.
பாரம்பரிய வழிபாட்டு மரபு
அம்பாளின் அருளும் ஆணையும் பெற்று, 1991 ஆம் ஆண்டு இத்தலம் அருளாட்சியை ஆரம்பித்தது. பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி, குரு–சிஷ்ய பரம்பரையை உறுதியாகக் கடைபிடிக்கும் இத்தலம், அம்பாளின் தெய்வீக ஆணையின்படி பிரதிஷ்டை செய்த சுவாமிகளின் புத்திரர்கள் இன்றளவும் பக்தியுடன் பூஜைகளை நடத்தி வருகின்றனர். இத்தலத்தின் பூஜைகள் முழுமையாக தமிழில் நடைபெறுகிறவது மிகவும் சிறப்பானதாகும்.
தெய்வங்களின் திவ்ய சன்னிதிகள்
மூலஸ்தான தெய்வமாக ஸ்ரீ மஹா வீர பத்ரகாளி அம்மன் அருள்பாலிக்கிறார்.
அவருடன் இராகு பகவான் தேவிசமேதராக தனித்த சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இந்த இணைப்பு சக்தியின் ஆற்றலையும் கிரக சக்தியின் சமநிலையையும் பிரதிபலிக்கிறது. ஆலயத்தில் மஹா மேரு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.
இத்தலத்தில் சுலினி துர்க்கை, வராஹி அம்மன், பிரத்யங்கிரா தேவி, அஸ்வாரூடா துர்கை, மஹாலட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், முருகன், குபேரன், வைரவர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இராகு வழிபாட்டின் சூட்சுமம்
இத்தலத்தின் பிரத்யேக அம்சம் இராகு பகவானின் வழிபாடு. கலியுகத்தில் மிக வலிமையாகச் செயல்படும் கிரகமாக இராகு திகழ்கிறார். உலகப் பற்றை அனுபவிக்கச் செய்து, பின் அதிலிருந்து விடுவித்து உள்ளத் தெளிவை அளிப்பதே ராகுவின் லீலை.
அனுகூலமான இராகு, கீழான ஒருவரைச் சக்கரவர்த்தியாக உயர்த்தும் வல்லமை பெற்றவர். ஆனால் இராகு தோஷம் ஏற்பட்டால், காலசர்ப, கலாத்ர, நாக தோஷங்களால் திருமண தடை, குடும்ப பிரச்சினைகள், குழந்தைப் பாக்கியத்தடை, நிதி இழப்புகள், திடீர் பணக்கஷ்டங்கள், குழந்தைகளில் மனஅழுத்தம் மற்றும் அச்சம் போன்ற அனுபவங்கள் ஏற்படலாம்.
பூஜைகள் மற்றும் ஹோமங்கள்
அமாவாசை நாள்களில் நடைபெறும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி ஹோமம் மிகப் பிரபலமானது. சிவப்பு மிளகாய், மிளகு, ஜீரகம் போன்ற திரவியங்களால் நடைபெறும் இந்த யாகம், திருஷ்டி, பில்லி சூனியம், நோய், மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் சக்தி வாய்ந்தது. பௌர்ணமி நாளில், பக்தர்கள் தங்களின் கைகளால் இராகுவின் அம்சமான நாகத்துடன் வீற்றிருக்கும் மஹா மேரு ஸ்ரீ சக்கரத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் புனித வாய்ப்பைப் பெறுகின்றனர். அபிஷேகத்தின் போது பக்தரின் பெயர் மற்றும் நட்சத்திரமும் அர்ச்சிக்கப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இராகு கால வேளையில், துர்கை அம்மன் சிறப்பு பூஜையும் இராகு பகவான் வழிபாடும் நடைபெறுகிறது. இது இராகு–கேது தோஷங்களிலிருந்து விடுபடவும், மனத் தெளிவும் சக்தி நிலையும் பெறவும் வழிவகுக்கிறது.
சக்தியின் உயிரூட்டம்
இராஜகிரிய ஸ்ரீ மஹா வீர பத்ரகாளி அம்மன் தேவஸ்தானம் மற்றும் இராகு திருத்தலம், இது வெறும் கோயில் அல்ல, இது சக்தியின் உயிரூட்டம்.
இராகு பகவானின் அருளால் மனம் தெளிவடைந்து, தாயின் அருளால் வாழ்க்கை ஒளியுறும் புனிதத் தலம் இதுவாகும். சிறப்பு நாட்கள், வெள்ளிக்கிழமை ராகு காலம், அமாவாசை, பௌர்ணமி, ஆஷாட நவராத்திரி, நவராத்திரி, சிவராத்திரி. இத்தலத்தின் கும்பாபிஷேகம் மே 2026 இல் நடைபெறவுள்ளது.
5 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
13 Nov 2025