2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

Mayu   / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா 

நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்குச் சிவராத்திரி கொண்டாடுவது போல, புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.

இந்த ஆண்டு ஐப்பசி மாதம் முதல்நாள் ஒக்டோபர் 03ஆம் திகதி இன்று  வியாழக்கிழமை நவராத்திரி தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் அனுஷ்டித்து பத்தாம் நாள் 12 ஆம் திகதியன்று விஜயதசமியுடன் நிறைவடையும்.

 பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்துச் சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

உலகத்தின் இயக்கத்திற்கு எல்லாம் சக்தி தான் ஆதாரம். அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம்.

சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை.

நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்குத் தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

 அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி, செல்வம் வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். மூன்றும் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம்.

வாழ்க்கையில் மூன்றும் முக்கியம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம். இதன் மூலம் நமக்குச் சக்தி கிடைக்கும் அந்த சக்தியை நாம் நல்ல விசயத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.

 பிரதமை நவராத்திரியின் முதல் நாளில் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

 துவிதியை இரண்டாம் நாள் தேவி கவுமாரி தேவியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். 

திரிதியை மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

 சதுர்த்தி நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகைப் பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
 பஞ்சமி ஐந்தாம் நாளில் அன்னையை வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர்ச் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

 சஷ்டி ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம். 

 சப்தமி ஏழாம் நாளில் தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்குத் தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய  வேண்டும். எலுமிச்சை சாதம்  நிவேதனம் செய்து வழிபடலாம்.

அஷ்டமி எட்டாவது நாளில் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. இந்த நாளில் அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்.

இவளுக்கு உகந்த ரோஜா மலரைச் சூடி, சர்க்கரைப் பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

 நவமி ஒன்பதாம் நாளில் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

தாமரை மலர்களால் அலங்கரித்து விஜயதசமி பத்தாவது நாள் விஜய தசமி.

விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

 விரத பலன் நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.

இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள். இந்த ஆண்டு தீமைகள்  ஒழிய அம்பிகை அருள் புரிய வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்வோம்.


நவராத்திரி கொலு...

நவாத்திரி பொம்மைகளைச் செய்ய, ஒரே களிமண் மூலப்பொருளாகிறது. ஆனால், கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல பொம்மைகள் ஒரே மண்ணில் உருவாகிறது. பரப்பிரமம் பலவகை வடிவங்களை எடுத்து நம்மைக் கரையேற்றுவதை நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது. அப்படி மகத்தான நவராத்திரி விரதத்தை நாமும் அனுஷ்டித்து வாழ்வில் வளம் பெறுவோமாக.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .