2025 மே 09, வெள்ளிக்கிழமை

சிசுவை கழிவுநீர் கால்வாயில் வீசிக் கொன்ற தாய் கைது

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதுரை பெத்தனியாபுரத்தில் திருமணத்தை மீறிய உறவில் பிறந்த பெண்சிசுவை கழிவுநீர் கால்வாயில் வீசிக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை பெத்தனியாபுரம் பகுதியில், கடந்த புதன்கிழமை காலை கழிவுநீர் கால்வாயில் பெண்சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிமேடு காவல் துறையினர், குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குழந்தையை வீசிச் சென்றது யார் என்று அக்கம் பக்கத்தினரிடம் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே பகுதியில் உள்ள அகத்தியர் தெருவில் வசித்து வரும் ரேவதிதான் சிசுவை வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேவதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், திருமணமான ரேவதி கணவனை பிரிந்து தனது தாய் மற்றும் 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்ததும், தெருவோரங்களில் உள்ள கழிவு போத்தல்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பலருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதில் கர்ப்பமாக இருந்த அவருக்கு கடந்த புதன்கிழமை காலை வீட்டில் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் ரேவதியின் தாய் தனலெட்சுமி ‘குழந்தை வேண்டாம்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் பெண் சிசுவை அவர் தூக்கி வீசி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரேவதி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரேவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நன்கு உடல்நிலை தேறியவுடன் மதுரை பெண்கள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X