2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்க முடியாது’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பா, தனது விதியை, தனது கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள ஜேர்மன் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், பிரெக்சிற்றுக்குப் பின்னரான பிரித்தானியா, டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதிப் பதவியின் கீழான ஐக்கிய அமெரிக்கா ஆகியனவற்றில், இனிமேலும் தங்கியிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜி7 என அழைக்கப்படும் செல்வந்த நாடுகளின் கூட்டம், நேட்டோ நாடுகளின் கூட்டம் ஆகியவற்றில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனித்துக் காணப்பட்டிருந்த நிலையில், ஒருமித்த கருத்தொன்றை எட்ட முடியாமல் போனது.

இதில், நேட்டோ கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேட்டோ நாடுகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். இந்நிலையில், தனது கருத்தின்போது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், அவர் மீதான விமர்சனங்களை, மேர்க்கெல் முன்வைத்தார்.

ஐரோப்பா, ஏனைய நாடுகளில் முழுவதுமாக தங்கியிருக்கக்கூடிய நாட்கள், ஓரளவுக்கு முடிவடைந்துவிட்டன என்று தெரிவித்த மேர்க்கெல், “கடந்த சில நாட்களாக, இதை அனுபவித்தேன். இதனால் தான் ஐரோப்பியர்கள், தங்கள் சொந்தத் தலையெழுத்தை, தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டுமென நான் கூறுகிறேன். ஐக்கிய அமெரிக்காவுடனான நட்பு, அயலவர்களாக பெரிய பிரித்தானியாவுடனான நட்பு, முடியுமான போது ஏனைய நாடுகளுடனும் கூட - ரஷ்யாவுடனும் கூட நட்புக் காணப்பட வேண்டும். ஆனால், எங்களுடைய எதிர்காலத்தை, நாங்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜி7 நாடுகளின் மாநாட்டில், காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தில், கடுமையான ஏமாற்றத்தை, மேர்க்கெல் சந்தித்திருந்தார். அதில் 7 நாடுகளில் ஐ.அமெரிக்கா மாத்திரம், காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்படிக்கைக்கு முழுமையான உறுதியை வழங்க மறுத்திருந்தது. இதை, “ஆறுக்கு எதிராக ஒன்று” என வர்ணித்திருந்த மேர்க்கெல், “மிகவும் கடினமானது. மிகவும் அதிருப்திகரமானது என்பதைச் சொல்லத் தேவையில்லை” என்று அதைக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான ஐக்கிய அமெரிக்கா, பிரெக்சிற் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்குப் பின்னரான பிரித்தானியா ஆகியவற்றைத் தாண்டி, ஏனைய நாடுகள் ஒன்று சேர வேண்டுமென்ற தனது கோரிக்கையை, அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சுதந்திர உலகின் தலைவராக வழக்கமாக ஐ.அமெரிக்க ஜனாதிபதிகளே கருதப்பட்டுவந்த நிலையில், ஐ.அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்வானதைத் தொடர்ந்து, அவரின் போக்குகள் காரணமாக, முதன்முறையாக அங்கெலா மேர்க்கல், சுதந்திர உலகின் தலைவராகச் சிலரால் கணிக்கப்பட்டார். அவரது தற்போதைய கருத்துகள், ஜேர்மனியை மையப்படுத்திய, புதிய அதிகார மையமொன்று உருவாகுவதைக் காட்டி நிற்பதாகக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .