2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சோமாலிய கடற்கொள்ளையரால் விடுவிக்கப்பட்ட இந்தியத்தமிழ் இளைஞர்கள் நாடு திரும்பினர்

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து கடந்த வாரம் மீட்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் சுரண்டை வாலிபர்கள் மும்பை வழியாக சொந்த ஊருக்கு நேற்று வந்து சேர்ந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ரஷ்யாவில் இருந்து கென்யாவுக்கு கோதுமை ஏற்றிக் கொண்டு அல் காலித் என்ற கப்பல் புறப்பட்டது.

இக்கப்பல் இந்திய பெருங்கடலில் சென்றபோது சோமாலியா கடல் கொள்ளையர்கள் கப்பலை அதிலிருந்த 26 மாலுமிகளுடன் கடத்தினர்.

இதில் 24 பேர் இந்தியர்கள். 2 பேர் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்க சோமாலியா கொள்ளையர்கள் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட 24 இந்தியர்களில் தூத்துக்குடியை சேர்ந்த வீரமோகன் மகன் விஜயகணேஷ், சுரண்டையை அடுத்துள்ள வேப்பநாடானூர் சேர்மன் மகன் மாணிக்கம் ஆகிய இருவரும் அடங்குவர்.

கடத்தப்பட்ட அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மூலம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. இதற்கிடையே அல் காலித் கப்பல் நிறுவனமும் கடற்கொள்ளையர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.

இதில் கொள்ளையர்களுக்கும், கப்பல் நிறுவனத்திற்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு கடந்த 9ம் தேதி 26 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் தங்கள் சொந்த ஊரான தூத்துக்குடி மற்றும சுரண்டைக்கு வந்து சேர்ந்தனர்.

கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி, 120 நாட்களுக்கு பின்பு பத்திரமாக வீடு திரும்பிய இருவரையும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆனந்தக்கண்ணீர் மல்க வரவேற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .