2021 ஜூலை 31, சனிக்கிழமை

லிபியா மீதான தாக்குதலுக்கு தலைமை வகிக்க நேட்டோ சம்மதம்

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவில் விமானப் பறப்பு தடை வலயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான தலைமையை அமெரிக்காவிடமிருந்து பொறுப்பேற்க நேட்டோ (வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு)  இணக்கம் தெரிவித்துள்ளது.

லிபியாவில் ஐ.நா.வின் தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு தலைமை வகிக்க அமெரிக்க ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்தது. எனினும் இதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பாத்திரத்தையே அமெரிக்கா வகிக்கும் எனவும் விரைவில் தலைமைப் பொறுப்பை மற்றவர்களிடம் கையளிப்பதற்கு விரும்புவதாகவும்  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'இவ்விடயத்தில் நேட்டோவுக்கு பரந்தளவிலான பொறுப்புகள் கொடுக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும்' என நேட்டோ செயலாளர் நாயகம் அன்ட்ரெஸ் போக் ரஸ்முசென் கூறினார்.

லிபியாவில் கேணல் கடாபியின் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தரைப்படைகளும் பங்குபற்ற வேண்டுமா இல்லையா என்பது குறித்து தாக்குதலில் பங்;குபற்றும் நாடுகளிடையே வித்தியாசமான அபிப்பிரயாங்கள்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துருக்கி உட்பட நேட்டோவில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் லிபியா மீதான நடவடிக்கைகளுக்கான தலைமையை நேட்டோ ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன என ரஸ்முசென் கூறினார்.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடான துருக்கி இம்மாற்றத்திற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டியது. எனினும் இதுதொடர்பாக இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் நேற்று அறிவித்தது.

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அஹ்மட் தவுடோக்லு இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலான நர்டுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனான தொலைபேசி மூலமான மாநாட்டின்போது இது குறித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளுக்கான பொறுப்புகள் விரைவில் முழுமையாக நேட்டோவிடம் கையளிக்கப்படும். ஓரிரு நாட்களில் இம்மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .