Editorial / 2018 மே 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்தில், கருக்கலைப்புக்குக் காணப்பட்ட தடையை நீக்குவதற்கு, அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், கருக்கலைப்புக்கான தடையை நீக்குவதற்கு, 66.4 சதவீதமானவர்கள் ஆதரவாகவும், 33.6 சதவீதமானவர்கள் எதிராகவும் வாக்களித்தனர் என, நேற்று முன்தினம் பின்னிரவு வெளியான முடிவுகள் தெரிவித்தன.
இவ்வாறு பெறப்பட்ட முடிவு, எதிர்பார்க்கப்பட்டதை அதிகமான ஆதரவைப் பெற்றிருந்தது. சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னரான கருத்துக் கணிப்புகளில், 55 சதவீதத்துக்கு அண்மையான ஆதரவே, “ஆம்” என்ற தரப்பினருக்குக் கிடைக்குமென எதிர்வுகூறப்பட்டிருந்தது.
கத்தோலிக்கத்தை ஆழமாகப் பின்பற்றும் நாடுகளுள் ஒன்றான அயர்லாந்தில், தற்போது காணப்படும் சட்டத்தின்படி, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, வன்புணர்வின் காரணமாக ஏற்பட்ட கரு, குடும்பத்துக்குள் ஏற்பட்ட உறவால் ஏற்பட்ட கரு, மோசமான பாதிப்புகளைக் கொண்ட கரு போன்றவற்றைக் கலைப்பதற்கு, அந்நாட்டில் அனுமதி காணப்படவில்லை.
அந்நாட்டு அரசமைப்பின் 8ஆவது திருத்தத்தின்படி, தாய்க்கும் கருவுக்கும், சமமான உரிமை வழங்கப்படுகிறது. அத்திருத்தமே, இவ்வாக்கெடுப்பின் மூலம் இல்லாமல் செய்யப்படுகிறது.
இவ்வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புத் தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்து, அதை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு, அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட நாடாக விளங்கிய அயர்லாந்து, அண்மைக்காலத்தில் முற்போக்கான திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில், சமபாலுறவுத் திருமணங்களுக்குச் சட்டரீதியான அங்கிகாரம் வழங்குவதற்காக, அந்நாடு வாக்களித்திருந்தது.
இந்தியாவைச் சேர்ந்த சவிதா ஹலப்பனவர் என்ற, பல் வைத்தியர், 2012ஆம் ஆண்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, கருக்கலைப்புக்கு ஆதரவான கருத்துகள், அயர்லாந்தில் மேலெழத் தொடங்கின. அவரது கர்ப்பக் காலத்தின் 17ஆவது வாரத்தில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக, கருச்சிதைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்திருந்தார். கருத்திதைவு ஏற்படுவது நிச்சயம் என்ற நிலை உருவான பின்னர், கருக்கலைப்புக்கு அனுமதி கோரி, சவிதா விண்ணப்பித்திருந்தார். எனினும், வைத்தியர்களால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தார்.
39 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
9 hours ago