Editorial / 2018 ஜூன் 11 , மு.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டான ஜி7 குழுவின் மாநாடு, குழப்பத்துடன் இவ்வாண்டு முடிவடைந்ததுடன், பூகோள ரீதியில் வர்த்தகப் போரொன்று ஏற்படுமென்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜி7 மாநாட்டின் 44ஆவது மாநாடு, கனடாவின் கியூபெக்கில், கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து, நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
ஐக்கிய அமெரிக்காவை முன்னிறுத்திய கொள்கையைக் கொண்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுடன் முரண்பாட்டை வெளிப்படுத்திவரும் நிலையில், இம்மாநாட்டிலும் அது வெளிப்பட்டது.
மாநாட்டின் முடிவில், 7 நாடுகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்ததோடு, மாநாட்டை நடத்திய கனடாவையும் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும், அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஏழு நாடுகளும் இணைந்த அறிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “[கனேடியப் பிரதமர்] ஜஸ்டினின் ஊடகச் சந்திப்பில் அவரது பொய்க் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும், எமது ஐ.அமெரிக்க விவசாயிகளிடமும் பணியாளர்களிடமும் நிறுவனங்களிடமும், கடுமையான அளவு கட்டணத்தை கனடா அறவிடுகிறது என்ற அடிப்படையிலும், அறிக்கையை அங்கிகரிக்க வேண்டாமென, ஐ.அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளதோடு, ஐ.அமெரிக்கச் சந்தையில் குவிந்துவரும் மோட்டார் வாகனங்களுக்குத் தீர்வைகளை விதிப்பது தொடர்பாகவும் ஆராய்கிறோம்” என்றார்.
கனேடியப் பிரதமர் ட்ரூடோ தொடர்பான விமர்சனங்களைத் தொடர்ந்த ஜனாதிபதி ட்ரம்ப், “ஜி7-இல் எமது சந்திப்பின் போது, பணிவாகவும் மென்மையாகவும் நடந்த, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நான் சென்ற பின்னர் வழங்கிய ஊடகச் சந்திப்பில், ‘அங்குமிங்கும் தள்ளப்பட மாட்டேன்’ என்று கூறினார். மிகவும் நேர்மையற்றவர், பலவீனமானவர்” என்று குறிப்பிட்டார்.
ஜி7 மாநாட்டின் இறுதியில், கனடாவுடனும் கனேடியப் பிரதமருடனுமே, தன்னுடைய முரண்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்திய போதிலும், மாநாடு முழுவதிலுமே, தனித்து விடப்பட்ட தலைவராக இருந்தார். ஐ.அமெரிக்காவை முன்னிறுத்தி, ஏனைய நாடுகளின் உற்பத்திகள் மீது அதிகமான தீர்வைகளை விதிப்பதற்கு அவர் எடுத்துவரும் நடவடிக்கைகள், தொடர்ச்சியாக விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.
இதனால், உலகளாவிய ரீதியில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கிடையில், வர்த்தகப் போரொன்று ஏற்படலாமென்றும், அதனால் உலகப் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படலாமென்றும் அஞ்சப்படுகிறது.
38 minute ago
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
9 hours ago