2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

நிலத்தடி பொர்டெள அணு நிலையத்தில் செயற்பாடுகளை அதிகரித்த ஈரான்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நிலத்தடி பொர்டெள அணு நிலையத்தில் செயற்பாடுகளை இன்று அதிகாலையில் ஈரான் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் பிரச்சினைக்குரிய அணுப் பணியைக் கட்டுப்படுத்திய உலக நாடுகளுடனான ஈரானின் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த ஒப்பந்தத்திலிருந்து விலக ஈரான் திட்டமிட்டுள்ளதை குறித்த நகர்வு காண்பிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு சக்தி முகவரகத்தின் கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துடன் பொர்டோவிலுள்ள மையநீக்கிகளும் யுரேனிய வாயுவை உட்செலுத்த ஈரான் ஆரம்பித்தாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையை உறுதிப்படுத்திய ஈரானின் அணு சக்தி முகவரகம், நடாஸ் அணு நிலையத்திலிருந்து பொர்டோவுக்கு 2,000 கிலோ கிராம் யுரேனியம் ஹெக்ஸாபுளோரைட்டைக் கொண்ட 2,800 கிலோ கிராம் கொள்கலன் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இரண்டு மணிக்கு குறித்த நடவடிக்கை ஆரம்பமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொர்டோவில் 1,044 மைய நீக்கிகள் நிறுவப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த நகர்வானது அணு ஒப்பந்தத்தின் மீறலொன்று அல்ல என ஈரான் வலியுறுத்தியுள்ளதுடன், ஒப்பந்தத்தின் 26, 36ஆம் சரத்துக்களை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அணுக் கண்காணிப்பகத்தின் கண்காணிப்பாளரொருவரை குறிப்பிட்ட நேரத்துக்கு தடுத்து வைத்திருந்ததாகவும், அவரின் பயண ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் இராஜதந்திரிகள் நேற்று  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .