Editorial / 2018 மே 25 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட நவாஸ் ஷரீப், தனது பதவி நீக்கத்துக்கு, புலனாய்வுப் பிரிவுகளும் இராணுவமும் காரணமெனக் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலேயே இவ்விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளதோடு, அதன் பின்னர் ஊடகச் சந்திப்பிலும் அவ்விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக 3 தடவைகள் பதவி வகித்த ஷரீப், ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் தகுதியிழப்புச் செய்யப்பட்டு, பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் புலனாய்வு முகவராண்மையொன்றின் பிரதானியொருவரிடமிருந்து தனக்குச் செய்தியொன்று கிடைத்ததாகவும், தான் பதவி விலக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீண்ட விடுமுறையில் செல்ல வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தாரெனவும் கூறினார்.
அதேபோல், இராணுவம் மீதும் நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தனது வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாகவும், முன்னாள் இராணுவச் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாராப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கைக் கைவிடாமையின் காரணமாகவும், பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இராணுவத்தினரின் அதிகாரம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால், நவாஸ் ஷரீப்பின் ஆட்சியில் -- குறிப்பாக, அவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் -- இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பாகிஸ்தானால் எதிரி நாடாகப் பார்க்கப்படும் இந்தியாவுடன், சுமுகமான உறவுகளைக் கொண்டிருக்க ஷரீப் விரும்பினாரெனவும், அதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன என்றும் கருதப்படுகிறது. அதேபோல், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் கொண்டிருக்க வேண்டிய உறவு தொடர்பாகவும், கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன எனக் கருதப்படுகிறது.
தன்னைப் பதவி விலகுமாறு கோரியமை அல்லது நீண்ட விடுமுறையில் செல்லுமாறு கோரியமை ஆகியன, பர்வேஸ் முஷாராப்புக்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளே எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
38 minute ago
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
9 hours ago