2025 நவம்பர் 05, புதன்கிழமை

’பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பு குறித்து விசாரணை’

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதந்தரித்த அதிகாரிகளுடன் நேற்று (27) அதிகாலை இடம்பெற்ற முரண்பாட்டைத் தொடர்ந்து இறந்த நபரொருவர், 50 பேரைக் கொன்ற பள்ளிவாசல் தாக்குதல்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தாரா என்பது குறித்து கண்டுபிடிப்பதற்காக அவசரமான விசாரணையொன்றை கிறைஸ்ட்சேர்ச் பொலிஸார் நேற்று ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான நடவடிக்கை குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த துப்பையடுத்து, 54 வயதான குறித்த நபரின் வீட்டில் நேற்று முன்தினமிரவு சோதனை நடாத்திய பொலிஸார் ஆயுதங்களைக் கண்டெடுத்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய கிறைஸ்ட்சேர்ச்சுக்கு சற்று வெளியேயுள்ள றிச்மன்ட் பூங்கா பகுதியில் குறித்த நபரை அவரது காரில் நிறுத்திய பொலிஸார், மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்த பேரம்பேசல்களை ஆரம்பித்துள்ளனர்.

பின்னர் வாகனத்தை பொலிஸார் அணுகியபோது, அவரது உயிரைப் பின்னர் பறித்த மோசமான கத்திக்குத்து காயத்துடன் குறித்த நபரை கண்டுபிடித்திருந்தனர். எவ்வாறெனினும், அவர் எவ்வாறு காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்களால் அவரது வாகனம் சோதனை செய்யப்பட்டநிலையில், வாகனத்தில் ஆயுதங்கள் எவையும் இருந்திருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காக தேசிய துக்க தினத்தை நாளை நியூசிலாந்து அனுஷ்டிக்கவுள்ளநிலையில், அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலைத் தொடர்ந்து ஊடுருவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள புலனாய்வு முகவரகங்களை தான் அனுமதித்துள்ளதாக நியூசிலாந்தின் புலனாய்வு அமைச்சர் தெரிவித்த நிலையிலேயே மேற்கூறப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X