2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிரெக்சிற் ஒப்பந்தம் மீதான நான்காவது தடவையாக வாக்கெடுப்பை எதிர்பார்க்கும் மே

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்தை நான்காவது தடவையாக நாடாளுமன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பான பல்வேறு தெரிவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் மூலமொன்று பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தெரிவித்துள்ளது.

பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது தடவையாக நிராகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் 12ஆம் திகதி பிரித்தானியா வெளியேறவேண்டியுள்ளது.

பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு எதிராக இரண்டு தடவை வாக்களித்திருந்த, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவான சில ஆளும் கன்சவேர்ட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாவது வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்திருந்தபோதும், தொழிலாளர் கட்சியும், ஜனநாக தொழிற்சங்க கட்சியின் எதிராகவே வாக்களித்திருந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்படுகின்ற மிகவும் பிரபலமான தெரிவுக்கும், பிரதமர் தெரேசா மேயின் ஒப்பந்தத்துக்கும் இடையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்க அதிகாரிகள் நிராகரிக்கவில்லை எனவும் பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், நீண்டகால பிரெக்சிற் தாமதமொன்றை பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்க்கும் என்ற நிலையில், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிர்வரும் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரித்தானியா கலந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், பிரெக்சிற் நீண்ட காலத் தாமதத்துக்கு, பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய ஒன்றிய 27 நாடுகளிலிருந்தும் ஒருமித்த ஆதரவு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முற்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலொன்றை பிரதமர் தெரேசா மே கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரதமர் தெரேசா மே எதிர்பார்த்தால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான குறைந்தது ஆறு சிரேஷ்ட அமைச்சர்கள் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்வர் சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X