2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மோடி வலியுறுத்தல்

Freelancer   / 2026 மே 19 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் இராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நோர்வேக்கு உத்தியோகபூர்வ பயணமாக மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நோர்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சு, இராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு பிரச்சினையையும் இராணுவ மோதல் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்.

உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய நிறுவனங்களைச் சீர்திருத்துவது அவசியம் என்ற விஷயத்திலும் நாங்கள் உடன்படுகிறோம்.

மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரோடு ஒழிப்பது நமது பகிரப்பட்ட உறுதிப்படாகும். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நோர்வே இந்தியாவுக்கு அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.

நான் கடந்த ஆண்டே நோர்வே வருவதாக இருந்தேன். ஆனால், பஹல்காம் தாக்குதல் காரணமாக அந்த பயணத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று. அந்த இக்கட்டான நேரத்தில் நோர்வே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உறுதியாக நின்று, உண்மையான நட்பை வெளிப்படுத்தியது. இன்று நான் நோர்வேக்கு வருகை தரும்போது அந்த ஒற்றுமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா தலைமையிலான இந்தோ - பசுபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைய நோர்வே முடிவு செய்துள்ளது. இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளான இந்தியாவும் நோர்வேயும் கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, நோர்வே தனது உயரிய விருதான ரோயல் வார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட் இன் கிராண்ட் கிராஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. நோர்வே மன்னர் ஹரால்டு வி இவ்விருதை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பெறும் 32 ஆவது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X