2025 நவம்பர் 05, புதன்கிழமை

மேலவையின் உறுப்பினர்களாக வைகோவும், வேறு நால்வரும் பதவியேற்றனர்

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர் வைகோ, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) ஏ. முஹம்மத்ஜோன், என். சந்திரசேகரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) என். சண்முகம், பி. வில்சன் ஆகியோர் மேலவையின் உறுப்பினர்களாக நேற்று (25) தமிழில் பதவியேற்றனர்.

இம்மாத ஆரம்பத்தில் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முஹம்மத்ஜோன், என். சந்திரசேகரன், என். சண்முகம், பி. வில்சன் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து ஏகமனதாக மேலவைக்குத் தெரிவாகியிருந்தனர்.

இந்நிலையில், மேலவை நேற்று கூடியபோது புதிய உறுப்பினர்களை பதவியேற்க மேலவைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைத்த நிலையில், வைகோ, முஹம்மத்ஜோன், என். சந்திரசேகரன், என். சண்முகம், பி. வில்சன் ஆகியோர் நேற்று பதவியேற்றநிலையில் அன்புமணி ராமதஸ் நேற்று பதவியேற்றிருக்கவில்லை.

அ.இ.அ.தி.மு.கவின் ஆர். அர்ஜுனன், ஆர். லக்‌ஷ்மணன், வி. மைத்திரேயன், டி. ரத்தினவேல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் உருவான வெற்றிடங்களுக்கே குறித்த புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தி.மு.கவின் கனிமொழியின் பதவிக்காலமும் குறித்த ஐந்து உறுப்பினர்களோடு இம்மாதம் 24ஆம் திகதி முடிவடைந்திருந்தபோதும், கீழவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது மேலவை உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.

அந்தவகையில், தற்போது தமிழ்நாட்டிலிருந்து அ.இ.அ.தி.மு.கவின் 10 உறுப்பினர்களும், தி.மு.கவிலிருந்து ஐந்து உறுப்பினர்களும், ம.தி.மு.க, பா.ம.கவிலிருந்து தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் மேலவையில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், பதவியேற்ற பின்னர் நெசவு, பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இந்தியாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகளால் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பது குறித்து குறித்தும் சீனாவிலிருந்து ஆடைகளைப் பெறும் பங்களாதேஷ் அதனை சட்டவிரோதமாக இந்தியாவில் இறக்குமதி செய்வதே இந்தப் பின்னடவைக்குக் காரணமெனவும் இதனைத் தடுக்க மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் வைகோ வினவினார். இதற்குப் பதிலளித்த ஸ்மிருதி இரானி அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை எனப் பதிலளித்தபோதும் அவரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று வைகோ கூறினார்.

முன்னதாக “அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்பு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று வைகோ சொன்னவுடன் அவையில் அமர்ந்து இருந்த பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X