2021 மே 14, வெள்ளிக்கிழமை

சுழிபுரம் விக்டோரியா சம்பியனாகியது

குணசேகரன் சுரேன்   / 2017 மே 31 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில், பெண்களில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியும், ஆண்களில், மானிப்பாய் இந்துக் கல்லூரியும் சம்பியனாகின.  

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், பெண்கள், ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.  

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மைதானங்களில்,  இந்தப் போட்டிகள் நடைபெற்றன.  

பெண்களுக்கான இறுதிப் போட்டியில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியும், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் மோதின. இந்தப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக்டோரியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 64 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பண்டத்தரிப்பு அணி, 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று, 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  

மூன்றாமிடத்துக்கான போட்டியில், வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயமும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணியும் மோதவிருந்தன. எனினும், நெல்லியடி மத்திய கல்லூரி அணியில், பாடசாலையை விட்டு விலகிய மாணவி ஒருவர் இடம்பெற்றிருப்பதாக, புதுக்குளம் மகா வித்தியாலய அணியால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டி, உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் நடத்தப்படும் என, ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டது.  

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், மானிப்பாய் இந்துக் கல்லூரியும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதின. இந்தப் போட்டியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 6 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்கு, 28 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து அணி, 2.2 ஓவர்களில், எவ்வித விக்கெட் இழப்புமின்றி வெற்றியிலக்கை அடைந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .