2025 ஜூலை 05, சனிக்கிழமை

அக்கரைப்பற்று மென்பந்துக் கிரிக்கெட்டில் சம்பியனானது தம்பிலுவில் ரேஞ்சர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை அக்கரைப்பற்று "யங்பிளவர்" விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற, 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்.பி (RP) 2016 ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் தொடரில், தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் கழகம் சம்பியனாகத் தெரிவானது.]

கழகத்தின் மறைந்தவீரர்களான கிராம உத்தியோகத்தர் பரதேசி பத்மநாதன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் முத்தையா சாந்தசிறி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், லெவின் ஸ்டார் அணியை எதிர்கொண்ட ரேஞ்சர்ஸ் அணி, 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றுச் சம்பியனாகத் தெரிவானது.

மொத்தமாக 32 அணிகள் கலந்துகொண்ட, விலகல் முறையில் 6 நாட்கள் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்காக, இவ்விரு அணிகளும் தெரிவாகின.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரேஞ்சர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் வீரர் எஸ்.மதியின் அபாரத் துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட 38 ஓட்டங்களுடன், 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய லெவின் ஸ்டார் அணி, 10 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக, 38 ஓட்டங்களைப் பெற்ற ரேஞ்சர்ஸ் அணி வீரர் எஸ்.மதி தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடர் நாயகன் விருதை, லெவின் ஸ்டார் அணியைச் சேர்ந்த எஸ்.தயாளன் தட்டிச் சென்றார்.

இறுதிப் போட்டியின் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்ட கழக வீரர்கள், கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற அணிக்கான சம்பியன் கிண்ணத்தையும் 15,000 ரூபாய்க்கான காசோலையும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வழங்கி வைத்ததுடன், இரண்டாவது இடத்தைப் பெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணத்தையும் 10,000 ரூபாய்க்கான காசோலையும், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .