2025 ஜூலை 05, சனிக்கிழமை

இராகுலன், உத்தமனால் சம்பியனாகிய கே.சி.சி.சி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

கருணாமூர்த்தி இராகுலன் மற்றும் சிவகுருநாதன் உத்தமன் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நடத்திய முக்கோண வெற்றிக்கிண்ணத்தை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணி கைப்பற்றியது.

சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் 50 ஓவர்கள் கொண்ட இந்த முக்கோண வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்குபற்றும்.

அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஜொலிஸ்ரார்ஸ் அணி ஆகியன அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

முதலாவது போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி ஜொலிஸ்ரார்ஸ் அணி 3 விக்கெட்;களால் வென்றது. 2 ஆவது போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஜொலிஸ்ரார்ஸ் அணி 66 ஓட்டங்களால் வென்றது. 3 ஆவது போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 8 ஓட்டங்களால் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை வென்றது. இதில் இரண்டு போட்டிகளில் வென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும், 1 போட்டியில் வென்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

இறுதிப்போட்டி கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கே.சி.சி.சி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது. 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக தங்களுக்கிடையில் 137 ஓட்டங்களை உத்தமன் மற்றும் இராகுலன் ஆகியோர் பகிர்ந்தனர். இராகுலன் 72 ஓட்டங்களையும், உத்தமன் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பாக கே.வைகுண்டன் 5, ஏ.சுஜன்தன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 234 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக அணி இறுதிவரையில் போராடிய போதும், வெற்றிபெற முடியவில்லை. 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 223 மாத்திரம் பெற்றது.

2 ஆவது விக்கெட்டுக்காக 131 ஓட்டங்களைப் பகிர்ந்த தாரகா சோமதிலக, எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் முறையே 79, 49 ஓட்டங்களைப் பெற்றனர். ஜே.சிறிகுமரன் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இராகுலன் 3 விக்கெட்களையும், எஸ்.சாம்பவன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இறுதிப்போட்டியின் நாயகனாக இராகுலன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தச் சுற்றுப்போட்டியின் கடந்த வருடப் போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .