Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 07 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
ரஜாஸ்கான், தங்கப்பதக்கத்தைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு செக்கன் வித்தியாசத்தில் முதலாமிடத்தை இழந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதில், தென் மாகாணத்தைச் சேர்ந்த கே.எஸ்.எல்.விக்ரமசிங்க, போட்டித் தூரத்தை 21.8 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். மூன்றாமிடத்தை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.எச்.எல்.மினிமுத்து 22.0 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில், ரஜாஸ்கான் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருப்பாராயின் தேசிய விளையாட்டு விழாவில் ஹட்-ரிக் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். 2012ஆம் ஆண்டு, 2014ஆம் ஆண்டுகளில் தங்கப்பதக்கத்தை ராஜாஸ்கான் வென்றடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான், தேசிய பயிற்றுவிப்பாளர் சுனில் குணரத்னவின் பயிற்சியின் கீழ் தனது ஓட்டத்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.
கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ச்சியாக பல பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்துவரும் ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான் தனது வெற்றி குறித்து கருத்துக்களைத் தெரிவித்தார்.
“பாடசாலைக் காலத்தில் பல போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக, வெளிக்கழகங்களுக்காக என்னை அழைத்து போட்டிகளில் பங்குபற்றச் செய்தார்கள். அந்த வகையில் 100, 200, 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மாகாண மட்டப்போட்டிகளில் பங்குகொண்டேன். இந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக இருந்த எஸ்.எல்..தாஜூதீன் அவர்கள் எனக்குப் பயிற்சிகளை வழங்கினார்.
“பின்னர், இலங்கை இராணுவத்தில் நான் இணைந்து கொண்டதன் பிற்பாடு, கடந்த ஆறு வருடங்களாக, சுனில் குணவர்த்தன, எனக்குப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். எனது வெற்றிகள் மூலம் நான் பிறந்த மண்ணும் பிரதேசமும் மாகாணமும் பெறுமையடைவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
“அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மெய்வல்லுநர் வீரா் ஒருவர், சுமார் 35வருடங்களுக்குப் பிறகு தங்கப்பதக்கத்தைப் பெறுகின்ற வாய்ப்பு 2012ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்ததையிட்டு என்னைப்படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். எனது மாவட்டத்தின் நீண்டகால ஏக்கம் இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
“இந்த முறை எப்படியாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது. இறைவன் நாட்டம், வெள்ளிப்பதக்கம் பெறவே முடிந்தது. ஓட்ட நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம்.தொடர்ந்தும் வெல்ல வேண்டும் என்கின்ற உறுதியும் விடாமுயற்சியும் பயிற்சியும் இருக்குமாயின் ஓட்ட நிகழ்ச்சியில் பல வருடங்களுக்கு நிலைத்து நின்று பதக்கங்களைப் பெறக்கூடிய சூழ்நிலை காணப்படும். அந்த வகையில் எனது வெற்றியில் பங்கடுத்துள்ள எனது பயிற்சியாளர்கள், எனது குடும்பம்,நண்பர்கள் அனைவரக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில், 21.3 செக்கன் பெறுதியில் ஓடி தங்கப்பதக்கத்தையும் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 21.9 செக்கன் பெறுதியில் தங்கப்பதக்கத்தையும் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில், 21.0 செக்கன் பெறுதியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ள ரஜாஸ்கான் இம்முறை இடம்பெற்ற போட்டியில், 21.9 செக்கன் பெறுதியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அதேபோன்று, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற 91ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்திலும் ஏ.ஆர்.எம். ரஜாஸ்கான் 21.29 செக்கன் பெறுதியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
அட்டாளைசசேனை பிரதேச ஒலுவிலைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், தேசிய வீரராக மிளிர்ந்து வருவது அம்பாறை மாவட்டத்துக்கு மட்டுமல்லாது முழு கிழக்கு மாகாணத்துக்குமே பெருமை தரும் விடயமாகும்.
அட்டாளைச்சேனை பிரதேசம் சார்பாக, பல போட்டி நிகழ்ச்சிகளில், தேசிய ரீதியில் கலந்து கொண்ட ரஜாஸ்கான் பல வெற்றிகளை ஈட்டியிருக்கின்றார். தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பாடசாலைக விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் என பல போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டியிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், 2012ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில், இலங்கை சார்பாக கலந்து கொண்ட ரஜாஸ்கான், 200 மீ்ற்றர் ஓட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை சுவிகரித்திருந்தார் என்பது விசேட அம்சமாகும்.
2013ஆம் ஆண்டு சீனாவில், மெகா சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ரஜாஸ்கான், வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பகிரங்க சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார். அதேபோன்று தென்கொரியாவில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில், இலங்கை அஞ்சல் ஓட்ட அணியில் இடம்பெற்ற ரஜாஸ்கான் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறான அதிசயமிக்க திறமையான விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த அனுசரனைகளை வழங்குவதற்கு பிரதேச தனவந்தர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் அவரினால் தொடர்ச்சியாக பிரகாசிக்க முடியும்.
நாட்டுக்காக சாதனைகள் படைக்க புறப்பட்டுள்ள கிழக்கின் இளம் சிங்கம் ரஜாஸ்கான் மென்மேலும் வெற்றிகளைத் தர வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago