2025 ஜூலை 05, சனிக்கிழமை

பரிதி வட்டம் எறிதலில் தங்கம் வென்ற ஆஸீக்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று முடிந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதி வட்டம் நிகழ்ச்சியில் 42.34 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், குண்டு போடுதலில் 13.78 மீற்றர் பெறுதியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவில் இரண்டாவது நாளில் இடம்பெற்ற பரிதி வட்டம் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பான முறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய இஸட்.ரீ.எம்.ஆஸீக் பல முன்னணி வீரா்களை பின்னுக்குத்தள்ளி 42.34 சிறந்த பெறுதியுடன் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அதேபோன்று குண்டு போடுதல் நிகழ்ச்சியிலும் 13.78 பெறுதியில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரா் ஒருவர், இரண்டு போட்டிகளில் பதக்கம் பெறுகின்ற வாய்ப்பு ஆஸீக்குக்குக் கிடைத்தது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பரிதி வட்டம் நிகழ்ச்சியில் இஸட்.ரீ.எம். ஆஸீக், 40.53 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இவ்வருடம் 2016 இடம்பெற்ற 94ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் கலந்து கொண்ட இஸட். ரீ.எம். ஆஸீக், பரிதி வட்டம் நிகழ்ச்சியில் 43.77 மீற்றர் தூரம் எரிந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ரீ.எம்.ஆஸிக் பாடசாலை மட்டப் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று தனது பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமையை தேடிக்கொடுத்த வீரராவார்.
குறிப்பாக 2012ம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பரிதி வட்டம் நிகழ்ச்சியில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

நிந்தவுர் அல்-மதீனா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான ரீ.எம்.ஆஸீக் நிந்தவுர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் வீரருமாவார். வெற்றிபெற்று தேசிய வீரராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரீ.எம்.ஆஸீக்குக்கு ஆரம்பகால பயிற்றுவிப்பாளராக அம்பாறை மாவட்ட பயிற்றுவிப்பாளர் அனஸ் அஹமட் பயிற்சிகளை வழங்கியுள்ளார். தற்போது, தில்றுக் அவர்கள் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.

தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள ஆஸீக் கருத்துத் தெரிவிக்கையில், "தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற வெண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறியதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. இறைவனின் நாட்டம் எனக்கு வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றிக்காக முழுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஸிப் போட்டியில் தங்ப்பதக்கம் பெற்றிருந்ததால் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெறலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. எதிர்காலத்தில் இலங்கை சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன். குறிப்பாக தெற்காசிய விளையாட்டுப் போட்டியைக் குறிப்பிடலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்ற தில்றுக் மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், ஆரம்ப பயிற்றுவிப்பாளராகவும் உள்ள அனஸ் அஹமட் மற்றும் மதீனா விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுக்கும், எனது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

(அண்மையில் நிறைவடைந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசித்த சிறுபான்மையின வீரர்களை, தமிழ்மிரரின் உள்ளூர்க் களம் பக்கத்தில் அறிமுகப்படுத்துவதற்கு, தமிழ்மிரர் தயாராக இருக்கிறது. இவர்கள் பற்றிய விவரங்கள், தொடர்ந்துவரும் நாட்களில் வெளிவரும்.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .