Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 12 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவராஜா கனிஸ்ரனின் அதிரடியான சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன், நீலங்களின் சமரின் முதலாவது போட்டியை, மானிப்பாய் இந்து, இனிங்ஸ் வெற்றியாகச் சுவைத்தது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணிக்கும் இடையிலான முதலாவது நீலங்களின் சமர், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில், நேற்று முன்தினமும் (10) நேற்றும் (11) நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மானிப்பாய் இந்துவுக்கு ஆரம்பம், அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 44 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களம்புகுந்த வீரர்கள், அணியைத் தூக்கி நிறுத்தினர். சிவராஜா கனிஸ்ரன், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சதம் கடந்தார். கூடவே பவின்சன் அனோஜன், அரைச் சதம் கடந்தார்.
மானிப்பாய் இந்து அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கனிஸ்ரன் 103, அனோஜன் 58, துசிந்தன் 46, நிரோஜன் 24, சுலக்ஸன் 23, வதுசன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வாகீசன் 4, மதீசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்ததும், யூனியன் அணி, மேலும் 44 ஓட்டங்களைப் பெற்று, மிகுதி நான்கு விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், யூனியன் கல்லூரி அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், திவ்யநாத் 36, டிலோசன் 18, லவன்ராஜ் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சிவராஜா கனிஸ்ரன் 4, சுஜீபன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, ஃபொலோ ஒன் முறையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யூனியன் கல்லூரி அணி, விக்னேஸ்வரனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், துடுப்பாட்டத்தில் மீண்டும் தடுமாறியது. லவன்ராஜ் மாத்திரம் நம்பிக்கையளிக்கும் வகையில் அரைச்சதம் கடந்தார்.
யூனியன் கல்லூரி, தமது இரண்டாவது இனிங்ஸில், 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், லவன்ராஜ் 52, நிதர்சன் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜெயஸ்ரீ விக்னேஸ்வரன் 7, துசிந்தன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முதலாவது நீலங்களின் சமரின் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த சகலதுறை வீரராக, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் சிவராஜா கனிஸ்ரன், சிறந்த பந்துவீச்சாளராக, அதே அணியின் ஜெயஸ்ரீ விக்னேஸ்வரன், சிறந்த களத்தடுப்பாளராக, யூனியன் அணியின் சுப்பிரமணியம் தரன் மற்றும் போட்டியின் நாயகனாக, பவின்சன் அனோஜன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
நீலங்களின் சமரில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட, ஓய்வுபெற்ற வங்கியாளரும் யூனியன் கல்லூரியின் பழைய மாணவருமான, சின்னத்துரை விக்னராஜா, வெற்றிபெற்ற அணி, மற்றும் சிறந்த வீரர்களுக்கான கேடயங்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago