Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.
மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி, போட்டிகள் இடம்பெற்ற நிலையிலேயே, குருநகர் பாடுமீன் அணியும் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறவில்லை. இரண்டாவது பாதியின் 38ஆவது நிமிடத்தில், பாடுமீன் அணியின் மயூரன், கோலொன்றினைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மேலுமொரு கோலைப் பெற்ற மயூரன், தனது அணிக்கு 2-0 என்ற கோல் கணக்கில் உறுதியான முன்னிலையை வழங்க, இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில் பாடுமீன் வெற்றிபெற்றது.
போட்டியின் நாயகனாக, இரண்டு கோல்களைப் பெற்ற பாடுமீன் அணியின் மயூரன் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக, பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் கலிஸ்ரர் தெரிவானார். தொடரின் சிறந்த கோல்காப்பாளராக, பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் பிரதீபன் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரில், சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக, திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டது.
இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், 6-0 என்ற கோல் கணக்கில், கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தைத் தோற்கடித்த நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம், மூன்றாமிடத்தை தனதாக்கியது.
கடந்த வருடத்துக்கான மைலோ கிண்ணத்தினை, நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago