2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹென்றீசியன் சவால் கிண்ணம்: இறுதியில் ஞானமுருகன், டயமன்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 03 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண ரீதியில் அழைக்கப்பட்ட 36 முன்னணிக் கழகங்களுக்கிடையில், இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தி வரும் ஹென்றீசியன் சவால் கிண்ணம் 2016இன் இறுதிப் போட்டிக்கு மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக கழகம், வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்கும் முல்லைத்தீவு சென். யூட் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஞானமுருகன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரரான ஆர்.ஜெகதீஸ், அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களின் மூலம் ஞானமுருகன் முன்னிலை பெற்ற நிலையில், பதில் கோல்களைப் பெற்று போட்டியைப் சமப்படுத்த சென். யூட் போராடிய போதும், ஞானமுருகன் கோல்காப்பாளர் இலாவகமாக செயற்பட்டு பல கோல் வாய்ப்புகளை தடுத்திருந்தார். எனினும் இரண்டாவது பாதியில் பெனால்டி ஒன்றின் மூலம் சென். யூட்ஸின் பகிரதன் கோலொன்றினைப் பெற, போட்டியை சமப்படுத்தும் முனைப்புடன் துடிப்பாக சென். யூட் ஆடியது.

எனினும் இரண்டாவது பாதியில் ஞானமுருகனின் ஆர்.ஜெகதீஸ், மீண்டுமொரு கோலைப் பெற்று, தனது ஹட்ரிக் கோலைப் பூர்த்தி செய்ததுடன், அதன்பின்னர் அவ்வணியின் வகின்சன் மேலுமொரு கோலினைப் பெற, இறுதியில் 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஞானமுருகன், இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியின் நாயகனாக ஞானமுருகனின் ஆர்.ஜெகதீஸ் தெரிவானார். 

இதேவேளை, வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் சென்.ஹென்றீஸ் கல்லூரி அணிக்குமிடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் சென்.ஹென்றீஸ் கல்லூரியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றிருந்தது.

குறித்த போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே, தனது அணியின் நட்சத்திரவீரர் பிறேம்குமார் மூலம் கோலொன்றினைப் பெற்ற டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், சென்ஹென்றீஸ் கல்லூரி அணியை அழுத்தத்துக்குள்ளாக்கியிருந்தது. அதன்பின்னர், இரண்டாவது பாதியில், அவ்வணியின் துஷிகரன் பெற்ற கோலின் மூலம் 2-0 என்ற கோல்கணக்கில் டயமன்ஸ் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, கோல்களைப் பெற்று போட்டியைச் சமப்படுத்த சென். ஹென்றீஸ் கல்லூரி அணி முயற்சித்த நிலையில், போட்டியின் 80ஆவது அவ்வணியின் ஆர். மதுசன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி ஊக்கம் பெற்று ஆடியபோதும், அதற்கு பிறகு கோலெதனையும் பெறமுடியாததால், இறுதியில் 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றது. குறித்த போட்டியின் நாயகனாக ஹென்றீஸ் கல்லூரி அணியின் ஆர். மதுசன் தெரிவானார். 

இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், ஹென்றீசியன் கிண்ணம் யாருக்கு என வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகமும் பலப்பரிட்சை நடாத்தவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .