2025 ஜூலை 19, சனிக்கிழமை

200 ஓட்டங்களைக் கடந்த யாழ்.மாணவன்

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் துடுப்பாட்டப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வீரன் பரமானந்தன் துவாரகசீலன் 200 ஓட்டங்களைக் இன்று (22)  கடந்தார்.

யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான போட்டியில் துவாரகசீலன் ஆட்டமிழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

யாழ்.மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினால் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பதிவிடப்படுவதில்லை.

இருந்தும், சென்.ஜோன்ஸ் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவுகளின் அடிப்படையில் இந்த ஓட்ட எண்ணிக்கை சாதனையாகக் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் 1966 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் கனகையா சூரிஸ்குமார்ஸ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு எதிராக மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியில் பெற்றுக்கொண்ட 181 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இதுவரையும் காணப்பட்டது.

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயது, பிரிவு-3 அணிகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட இரண்டு நாட்கள் துடுப்பாட்டப் போட்டிகள் (2014) தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன்போட்டியொன்று நேற்று (21) செவ்வாய்க்கிழமை முதல் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி தனது முதல் இனிங்ஸில் 52 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்திருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பரமானந்தன் துவாரகசீலனின் 188 பந்துகளில் பெற்றுக்கொண்ட 202 (26 நான்கு, 2 ஆறு) ஓட்டங்களின் உதவியுடன் 9 இலக்குகளை இழந்து 482 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆட்;டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. மேலும் துடுப்பாட்டத்தில் அ.கானாமிர்தன் 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

430 ஓட்டங்கள் பின்னிலையில் பதிலுக்குத் தமது இரண்;டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி, 37.2 பந்துபரிமாற்றங்களில் 61 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. இதன் மூலம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 369 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ஆர்.லோகதீஸ்வரன் இரண்டு இனிங்ஸிலும் 10 இலக்குகளைக் கைப்பற்றினார். (முதல் இனிங்ஸ் 4 (7), இரண்டாவது இனிங்ஸ் 6 (24))



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X