2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடக்கின் போர் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், எஸ்.குகன்


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போரின் 12 ஆவது ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (05) சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இரு கல்லூரி அதிபர்களும் இன்று (03) அறிவித்துள்ளனர்.

இரு கல்லூரிக்கும் இடையில் கடந்த 13 ஆம் திகதி முதல் நடைபெற்ற 108 ஆவது வடக்கின் மாபெரும் போர் இறுதிநாளான 15 ஆம் திகதி நடுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினையடுத்து நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இரு அணிகளின் சார்பானவர்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வராத காரணத்தினால் போட்டி  கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியினைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற நோக்குடன் இரு கல்லூரி அணிகளைச் சார்ந்தவர்களும் பல கலந்துரையாடல்களினை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பயனாக போட்டியில் வெற்றிபெறக்கூடிய அதிக சந்தர்ப்பங்கள் இருந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றதாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இதனடிப்படையில் இன்று (03) காலை சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றதாக அவ்வணிக்குரிய வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசில் என்பன வழங்கப்பட்டன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியினை நடத்துவது தொடர்பான ஊடவியலாளர் கலந்துரையாடலொன்று இன்று (03) சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா, எதிர்வரும் சனிக்கிழமை (05) ஒருநாள் போட்டியினை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஒருநாள் போட்டிக்கும் எயார்டெல் நிறுவனம் அனுசரணை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வர்ண உடை அணிந்து நடைபெறும் இந்த ஒருநாள் போட்டியில் வெள்ளைப்பந்து பயன்படுத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

இதுவரையிலும் நடைபெற்ற 11 போட்டிகளில் 6 போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் 5 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் வெற்றிபெற்றிருந்தது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தது.
இதுவரையிலும் நடைபெற்ற போட்டிகளில் 2009 ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 273 ஓட்டங்களைப் பெற்றமை அதிகூடிய ஓட்டங்களாக இருக்கின்றது. அத்துடன் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் அதிககூடிய ஓட்டங்களாக அதே ஆண்டில் பெற்ற 185 ஓட்டங்கள் இருக்கின்றது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆர்.எட்வேர்ட் எடின் 2010 ஆம் ஆண்டு பெற்ற 95 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாகவிருக்கின்றது. அத்துடன், சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக 2011 ஆம் ஆண்டு வி.ஹரிவதனன் பெற்ற 71 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாகவிருக்கின்றது அவ்வணி சார்பாக இருக்கின்றது.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரன் வி.ரஜீவ்குமார் 2003 ஆம் ஆண்டு 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றியமை சிறந்த பந்துவீச்சுப் பரிதியாகவிருக்கின்றது.


இம்முறை ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பி.துவாரகசீலன் தலைமையிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கே.யூனியஸ் கலிஸ்ரன் தலைமையிலும் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X