இலங்கையில் உள்ள அனுபவம் வாய்ந்த மற்றும் தனித்துவம் பெற்ற கார்ப் பந்தய வீரரான தினேஷ் ஜயவர்தன, பன்னல விளையாட்டு திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இடம்பெற்ற கார் பந்தய போட்டியில் முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார். இந்த போட்டியை ஏசியன் மோட்டர் ரேசிங் கழகம் (AMRC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
SLGT (Super Car) மற்றும் SLH (Honda) எனும் இரண்டு பிரிவுகளில் இடம்பெற்ற இந்த போட்டியில் தினேஷ் அனைத்து பிரிவுகளிலும் வெற்றியீட்டியிருந்தார். போட்டி நிறைவடையும் வரை போட்டியாளர்களிடமிருந்து கடுமையான சவால்களை தினேஷ் எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி தொடர்பாக தினேஷ் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் 'இந்த போட்டியில் வெற்றியீட்டுவது என்பது இலகுவான விடயமல்ல. ஆனாலும் 2013ஆம் ஆண்டில் நான் எதிர்பார்த்ததை விட என்னால் சிறப்பாக எனது திறமைகளை வெளிக்காட்ட முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இளஞ் சிவப்பு வர்ணத்தில் அமைந்த காரை செலுத்திய ஒரே பெண் வீராங்கனையான ஷிஹாரா ஜயவர்தன, SLN (Nissan March) சுற்றில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார். கடுமையான போட்டிக்கு முகங்கொடுத்திருந்த இவர், Avon டயர்களுக்கான வர்த்தக நாம தூதுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.