2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் துணையோடு அரசியல் நகர்வு

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி யுதாஜித்

எமது மக்களின் விடிவுக்கான வழி, இந்தியாவின் கைகளில் தங்கியிருக்கின்றது. போராளிகளாகிய எங்களை, இந்தியா தற்போது அங்கிகரிக்கும் நடைமுறைகளைக் கையாண்டு வருகின்றது. எனவே, இந்தியாவின் துணையோடு, தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வை, நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என். நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேசத்தில், கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பும் இணைப்பாளர்கள், இளைஞர் அணி உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர்களான யு.சதீஸ், க.லதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டு - அம்பாறை நிர்வாகப் பொறுப்பாளர் தீபன், மட்டக்களப்பு இணைப்பாளர் சுதாகர், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, கட்சியின் இளைஞர் அணிக்கான வாகரைப் பிரதேச பொறுப்பாளராக சி. துனேஸ்காந் நியமிக்கப்பட்டார்.

கட்சியின் உபதலைவர் என். நகுலேஸ் மேலும் தெரிவித்ததாவது; ஈழத் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவென, ஆயுதமேந்திப் போராடிய போராளிகள், ஆயுதம் மௌனிக்கப்படடதன் பின்னர், எமது போராட்ட வடிவத்தை மாற்றி, ஜனநாயக நீரோட்டத்தில், அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான நம்பகமான நடைமுறைகளை முன்னெடுக்கப் புறப்பட்டுள்ளோம். போராட்ட காலத்தில் தமிழ் மக்களின் ஆதரவு போராளிகளுக்கு எவ்வாறு இருந்ததோ, அதேவிதத்தில் தற்போதைய அரசியல் போராட்டத்திலும் எமக்கு மக்களின் ஆதரவுத் தளம் அமைய வேண்டும்.

இந்த நாட்டின் அரசாங்கங்கள், தமிழர்களின் உரிமையை வழங்க மறுத்ததன் காரணமாகவே போராட்ட வடிவங்கள் உக்கிரமடைந்தன. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மனதில் உள்ள உரிமைக் கோரிக்கையும் போராட்ட குணமும்  இன்னும் குறையவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X