2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை “நிறுத்த உதவுங்கள்”

Janu   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

திருகோணமலையில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையின் அனைத்து பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளை கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவரும் உள்ளாகின்றனர். இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும் காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தவறு செய்கிறவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கிறது.

இருந்த போதும், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது.

இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டுதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பாரபட்சங்களையும் இல்லாது ஒழிக்கும் (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெறும் விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X