2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்தார்

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.

தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாக சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை மாலை 3.05 மணியளவில் கிங் பிஸர் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான விமானத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தாம் 4.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தாக சிவாஜிலிங்கம் எம்மிடம் கூறினார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் தமக்கு சென்னை விமான நிலையத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாலை 5 மணியளவில் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகள் தம்மை இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியாது எனக் கூறினர்.அதற்குரிய காரணத்தை தாம் வினாவியபொழுது தமக்கு இடப்பட்ட உத்தரவு என்றும், தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதுவாக இருப்பினும் புதுடில்லியில் உள்ள உள்துறை அமைச்சுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.பிறகு 9.15 மணியளவில் தம்மை ஏயார்லங்கா விமானத்தில் ஏற்றிவிட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பீர்களா என தமிழ்மிரர் இணையதளம் வினவியது.
இன்று புதன்கிழமை புத்தாண்டு விடுமுறை என்பதால் நாளை  இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தில் தமது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாக அவர் பதிலளித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதாகவும்,அந்த அடிப்படையிலேயே தமது பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

என்ன காரணத்திற்காக இந்தியா சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பியபொழுது,மருத்துவ பரிசோதனைக்காக தாம் சென்றதாகவும் சிவாஜிலிங்கம் பதிலளித்தார்.

இந்தியாவுடன் யுத்தம் செய்த முஷர்ரபுக்கே அனுமதி வழங்கும் போது,தமக்கு ஏன் வழங்க முடியாது என்றும் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .