2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தமிழக அரசியல் கெட்டுவிட்டது: ரஜினிகாந்த்

Gavitha   / 2017 மே 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் அரசியல் கெட்டுப்போய்விட்டது என்று தெரிவித்துள்ள, இந்திய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால், மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியது, இவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களால், “சூப்பர் ஸ்டார்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு, கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வருகின்றது.

1990களில், ஜெயலலிதாவுடன் அரசியல் செய்வதாக கசிந்த தகவலையடுத்து, “உன் வருகைக்காக காத்திருக்கின்றோம்” என்று, தமிழ்நாடு முழுவதும், பதாதைகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதையடுத்து வந்த சட்ட சபை, நாடாளுமன்றத் தேர்தல்களில், ரஜினி குரல் கொடுத்து வந்தார். அதற்கு, தனி முக்கியத்துவம் கிடைத்தது. எனினும், அவர் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர், தமிழக அரசியலில், பெரியத் தலைவர்கள் யாரும் இல்லாததால், ரஜினி, அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

அதுவும் ரஜினி, தனது ரசிகர்களை 2 கட்டமாக சந்தித்து பேச முடிவு எடுத்ததுமே, அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதை அதிகரிக்கச் செய்யும் வகையில், கடந்த 15ஆம் திகதி, இரசிகர்களுடனான சந்திப்பின் முதல் நாளன்று அவரது பேச்சு அமைந்தது.

முதல்நாள், இரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால், நேர்மையாக இருப்பதாக உரையாற்றியதையடுத்து, அவர் அரசியலுக்கு வருவார் என்று, அவரது இரசிகர்களும், அரசியல் கட்சியினரும் கருத்துத் தெரிவித்தனர்.

அவரு​டைய உரைக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்தும் எதிர்ப்பு கருத்தும், பரவலாக அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த்- இரசிகர்களுடனான சந்திப்பின் இறுதி நாளான இன்று (19) மீண்டும், அரசியல் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கம் நன்றி தெரிவித்த அவர், இரசிகர்கள் மத்தியில் உரையாற்றியதாவது,

“ஒழுக்கம்தான், வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் இல்லை என்று சொன்னால், எந்தக் காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. நான், 4, 5 வார்த்தை கூறினாலே, அது பெரிய சர்க்சை ஆகிவிடுகின்றது. எனவே, இன்னும் மேலும் ஏதும் கூறினால், மீண்டும் சர்ச்சையில் போய் முடிந்துவிடும். ஆனால், நேரம் வரும் போது, கூற வேண்டியதை கூறுவேன். என்னுடைய இரசிகர்களுக்காக, நான் அரசியலுக்கு வந்தால், நீங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறிய நான்கு வார்த்தை, இவ்வளவு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.

“நான் உரையாற்றுவதற்கு, எதிர்ப்போ, ஆதரவோ கிடைப்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் சமூக வலைதளங்களில், பேஸ்புக், வலைப்பூ ஆகியவற்றில், சிலர் என்னைப் பற்றி விமர்சித்து, அவர்கள் கீழ்த் தரமாக போய்விட்டார்கள் என்பதை நினைத்தால், வேதனையளிக்கின்றது.

“ரஜினிகாந்த் தமிழனா என்கின்ற கேள்வி எழுகின்றது. எனக்கு இப்போது 67 வயது ஆகிறது. 23 ஆண்டுகள் மட்டுமே கர்நாடகத்தில் இருந்தேன். அதைவிட, 44 ஆண்டுகள் தமிழகத்தில், தமிழனாகத்தான் இருந்திருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும், என்னை மக்கள் ஆதரித்து அன்பு கொடுத்து, பேரும், புகழும், பணம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்து, என்னை நீங்கள் தமிழனாகவே ஆக்கி விட்டீர்கள்.

“தளபதி மு.க. ஸ்டாலின், எனது நீண்டகால நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவரைச் சுதந்திரமாக விட்டால், நன்றாக செயற்படுவார். ஆனால், செயற்பட விடமாட்டேன் என்கிறார்கள்.

“அன்புமணி ராமதாஸ் நன்றாகப் படித்தவர். நல்ல விடயங்களை அறிந்து வைத்துள்ளார். நவீனமானச் சிந்தனை கொண்டவர். நல்ல கருத்துக்கள் சொல்கிறார். திட்டங்கள் வைத்திருக்கிறார்.

“திருமாவளவன், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். சீமான் போராளி. அவருடைய பல கருத்துக்களைப் பார்த்து, கேட்டு பிரமித்து போயிருக்கிறேன். ஆனால்,  சிஷ்டம் (அமைப்பு) கெட்டு போய் இருக்கிறதே? ஜனநாயகமும் கெட்டு போய் இருக்கிறதே? அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி, மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. மக்களின் மனதை மாற்ற வேண்டும். அமைப்பை மாற்ற வேண்டும். அப்போது தான் நாடு நன்றாக இருக்கும்.

“எனக்கும் கடமைகள் இருக்கிறன. அதுபோல் உங்களுக்கும் கடமைகள் இருக்கிறன. ஊருக்குச் செல்லுங்கள்.  குடும்பத்தைக் கவனியுங்கள். 'போர்' என்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .