2021 ஜூன் 19, சனிக்கிழமை

நான்கு ஆண்டுகளுக்கு பின் நியமனம் இந்திய சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி நியமனம்

Super User   / 2010 மார்ச் 26 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தில் புதிய பெண் நீதிபதி பதவியேற்கவுள்ளார். இவர் உச்ச நீதி மன்றத்தின் நான்காவது பெண் நீதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைக் கொண்டிருப்பவர் பாத்திமா பீவி. இவர் தமிழகத்தில் ஆளுநராகவும் இருந்தவர்.

அதன் பின்னர் சுஜாதா மனோகர், ரூமா பால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பதவியை வகித்த பெண்கள் ஆவர்.

 

இவர்களில் கடைசியாக ஓய்வு பெற்றவர் ரூமா பால். கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பெண் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது புதிய பெண் நீதிபதியாக கியான் சுதா மிஸ்ராவின் பெயரை உச்சநீதிமன்ற காலேஜியம் மத்திய சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

கியான் சுதா மிஸ்ரா ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது உள்ளார்.

இதேபோல சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவின் பெயரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்து காலேஜியம் சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயரும். மொத்த இடங்கள் 31. எனவே மேலும் 2 இடங்கள் காலியாக இருக்கும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின்போது பெண்களுக்கு முன்னுரிமை தரப்படாதது குறித்து சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்தே தற்போது பெண் நீதிபதி ஒருவரை உச்சநீதிமன்ற காலேஜியம் பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது.

கியான் சுதா மிஸ்ரா பீகாரைச் சேர்ந்தவர். பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .