2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜெயலலிதாவின் உரைக்கு புளொட் வரவேற்பு

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈழத்தமிழர்களுக்கான ஆட்சி குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா  பேசியமை ஈழத் தமிழர்களுக்கு தமது எதிர்கால வாழ்வில் நல்ல நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் சர்வதேச பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதர் ஆட்சிக்கு வந்ததும், ஈழத்தமிழர்களுக்கான ஆட்சி குறித்து பேசியமை ஈழத் தமிழர்களுக்கு தமது எதிர்கால வாழ்வில் நல்ல நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் கொடிய யுத்தத்திற்கு தமது உறவுகளை பலி கொடுத்துவிட்டு, பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் முடக்கப்பட்டு உபாதைகளுக்கு உள்ளாகி, மீள் குடியேற்றம் என்ற பெயரில் இடிபாடுகளுக்கு இடையில் அநாதரவாக விடப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்து எதுவித நம்பிக்கையும் இல்லாது ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தவேளையில், இவர்களின் எதிர்காலம் குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் ஆற்றியிருந்த உரை அவர்களுக்கு பாரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கின்றது.

பிரித்தானிய அரசிடம் இருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திருந்தாலும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக கருதப்பட்டனர் என்பதினையும், இதனையடுத்து இலங்கை தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதினையும் சட்டசபையில் நீங்கள் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தீர்கள். ஏனைய தமிழக தலைவர்களைப் போல் அல்லாது ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும், வன்முறைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தினை விரிவாக ஆராய்ந்து இருக்கின்றீர்கள்.

யுத்தத்தின் பின்னர் தமிழர் தரப்பு மேலும் பலவீனம் அடைந்திருப்பதோடு, ஈழத் தமிழ் தலைவர்களின் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் கேட்பார் இன்றி தாம் அநாதரவாக விடப்பட்டதாக உணரப்பட்ட அந்த மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் குரல் கொடுத்தமை அவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

அந்த மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும், தமது கலை கலாச்சாரங்களை பேணி பாதுகாப்பதற்கும் ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும், மத்திய அரசுடன் இணைந்து நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதினை திடமாக தெரிவித்து கொள்கின்றோம்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .