Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.வித்தியா
போர்க்குற்ற விசாரணை இலங்கையில் நடத்தப்படாவிட்டால் இராணுவ கெடுபிடிகளுக்குள் சிக்கி தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த 2014ஆம் ஆண்டு சபையின் முன்வைக்கப்பட்டு இதுவரையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாதிருந்த இன அழிப்பு தொடர்பான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரேரணையை சமர்ப்பித்து வைத்ததன் பின்னர் முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பல சட்டத்தரணிகளினதும் பேராசிரியர்களினதும் நண்பர்களினதும் உதவியின் பேரில் உருவாகியதே இந்தப் பிரேரணை. தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாஷைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன. அரசியல் குளிர்காய்தலில் ஈடுபட வேண்டும் என்ற குறுகியகால சிந்தனைக்கு நாம் இதுகாலும் பலியாகி வந்துள்ளோம்.
எமக்கு நேர்ந்த அவலங்கள், அல்லல்கள், அடிபிடிகள், அனர்த்தங்கள் பற்றி வெளிநாட்டு மக்கள் உணர்ந்துள்ள அளவுக்கு எமது உள்நாட்டு பெரும்பான்மையினத்தினர் அறிந்து கொள்ள நாம் இடமளிக்கவில்லை. ஆகவே எமது நாட்டு மக்கள் யாவரும் எமக்கு இதுவரை நேர்ந்த கதியை கரிசனையோடு கருத்தில்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பிரேரணை கொண்டு வரப்படுகின்றது.
தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிககளுக்காக நீதி தேடுவோருக்கு இந்தத் தீர்மானம் உறுதியாக இருக்கும் என்று நம்புவதோடு இது இலங்கையில் நிலையான அமைதியையும் மீள் நல்லிணக்கத்தையும் உருவாக்க வழிசமைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். அடக்குமுறையும் உரிமைப் புறக்கணிப்பும்; நீதி மறுப்பும் பக்கச்சார்பும் நிலையான சமாதானத்துக்கு மீள் நல்லிணக்கத்துக்குமான சூழலை உருவாக்க இடமளிக்கமாட்டா.
இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சியல்ல. மாறாக யாவருக்கும் நீதியானது பொதுவானது. யாவருக்கும் நீதி மறுக்கப்படக்கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இது. இதுவரை காலமும் இலங்கையில் நடந்த சதிக் காரியங்கள் எவ்வாறு சர்வதேச சட்டத்தின் சரத்துக்களின் கீழ் சந்தேகமில்லாமல் இன அழிப்பு என்று ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பதை இந்தப் பிரேரணையானது எடுத்தியம்புவதாய் அமைந்துள்ளது.
ஏமாற்றுதலை அரசியல் கலாசாரமாக வளர்க்காமல் உண்மையையும் உரிய உள்ளன்பையும் உலகத்துக்கு எடுத்துக்காட்டும் ஒரு உயர்ந்த கலாசாரமாக அரசியலை நாங்கள் மாற்றி அமைக்க முடியாதா?. இதனால் தான் அவசரப் பட்டு, அல்லல் பட்டு, அசதியான உடல் நிலையிலும் இந்தப் பிரேரணையை கொண்டு வந்துள்ளேன். இந்தப் பிரேரணை உண்மையை உலகுக்கு உணர்த்தும் பிரேரணை. உள்நாட்டு மக்களின் உன்மத்தங்களால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்துக்கு எடுத்துரைக்கும் பிரேரணை.
இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படாவிடில், ஜெனீவாத் தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தப் பிரேரணையை இந்த மதிப்பு சபை முன்னே பிரேரிக்கின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago