2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

‘30க்கு முன் பதிவதை தவறவிடாதீர்கள்’

Ilango Bharathy   / 2021 ஜூலை 27 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கு இன்னும் இரண்டொரு தினங்களே இருக்கும் நிலையில், புதிய வாக்காளர்கள் இந்தக் காலக்கெடுவைத் தவற விட்டுவிடவேண்டாமென தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைத் தேர்தல்கள் ஆணையம், புதிய வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ளவர்கள், தங்கள் பெயர்களைத் தேருநர் இடாப்பில் சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை, ஜுலை 30ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளவேண்டுமென அறிவித்துள்ளது.

கொரோனாப் பேரிடர் காரணமாக அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவங்களை விநியோகித்து வாக்காளர்களைப் பதிவு செய்யும் வழமையான நடைமுறை இந்த ஆண்டு நடைபெறாது என்றும் தகுதி பெற்ற வாக்காளர்கள், தாமாகவே கிராம சேவையாளரிடம் சென்று படிவங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர்
மகேசன் கஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது, “வாக்குரிமை இலங்கைக் குடிமகனாகவுள்ள ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையாகும். இலங்கையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் ஜூன் 01ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்த இலங்கைக் குடிமகனாகவுள்ள எவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்வதன் மூலம் மாத்திரமே இவ்வாக்குரிமை
உறுதி செய்யப்படும். “ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

தீர்மானிக்கப்படும். வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடையும் போது தேர்வாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.“வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைவரும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்தல் ஒரு தேசிய கடமையாகும்.

எனவே, இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பாக புதிய வாக்காளர்கள் அனைவரும் தமது பகுதிக் கிராமசேவையாளரிடம் சென்று தவறாது பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .