2021 மே 14, வெள்ளிக்கிழமை

வெள்ளவத்தைக் கட்டடம் சொல்லிச்சென்ற ‘எக்செலன்சி’ தகவல்

Menaka Mookandi   / 2017 மே 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்று மே 18ஆம் திகதி. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவிய யுத்தம், படையினரின் மனிதாபிமான(மற்ற) இராணுவ நடவடிக்கைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியாகிய நாள்.

அன்று, எல்லோருடைய அவதானமும், முள்ளிவாய்க்கால் பக்கம் இருந்தது. காரணம், வடமாகாண சபையின் ஏற்பாட்டில், யுத்தத்தால் உயிரிழந்த பொதுமக்களை நினைகூரும் வகையிலான அஞ்சலி நிகழ்வொன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

அங்கு கூடியிருந்த சொந்தங்களின் கண்ணீருடனான ஒப்பாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் சக்தி, மனித ஜென்மங்களாகப் பிறவியெடுத்த எமக்கு இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் இயற்கைக்கு அந்தச் சக்தி இல்லை என்பதற்கு, சாட்சி ஒன்றல்ல இரண்டல்ல, பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 

யுத்தத்தின் இறுதி நாட்களின் போது, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டு, உயிரிழந்த பொதுமக்களின் நினைவுதினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் ஏனைய பகுதிகளின் ஏதாவதொரு இடத்தில், இயற்கையும் தனது வேலையைக் காட்டிவிடுவது வழமையாகிவிட்டது. இது, எத்தனை பேரது கவனத்தை ஈர்த்தது என்று தெரியாது.

ஆனால், இதே காலப்பகுதியில் தான், அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய பகுதிகளிலுள்ள மலைகள் சரிந்து, உயிர்களைக் காவுகொண்டது மாத்திரமன்றி, கொழும்பிலும் மாபெரும் வெள்ளப்பெருக்கொன்று ஏற்பட்டு, பல மில்லியன் கணக்கான பொதுமக்களின் சொத்துகள் அழிவடைந்தன. இதன் தொடர்ச்சியாக இவ்வருடம், வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் கட்டடமொன்று சரிந்துவிழுந்தது.  

அன்றைய தினம், வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் பற்றி, புதிதாகப் பேசுவதற்கில்லை. ஆனால், அந்த அனர்த்தத்துக்கு வழிசமைத்து, இயற்கையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த மாபெரும் பாக்கியம், எம்மனித குலத்தையே சாரும் என்பதால், சில விடயங்களைப் பற்றிப் பேசாமல் இருந்துவிடவும் முடியாது. அது, இன்னுமொரு அனர்த்தத்துக்கே வழிகோளும்.

சம்பவ தினம் முற்பகல் 10.45 மணியிருக்கும். காலி வீதியின் வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள சவோய் திரையரங்குக்குப் பின்னால் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருந்த ‘தி எக்செலென்சி’ உற்சவக் கட்டடத்தின் பின்பகுதி, திடீரென உடைந்து விழுந்தது.

இதனால், மூன்று பேர் உயிரிழந்ததுடன், 21பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள், மேற்படி கட்டடத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

கட்டடம் உடைந்து விழுந்த இடத்துக்கருகில், தினந்தோறும் தனது பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தைத் தரித்து வைக்கும் சாரதியொருவரும், காயமடைந்தவர்கள் பட்டியலில் அடங்குகின்றார். 

“நாங்கள், தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த மாதம் 29ஆம் திகதி தான், நாங்கள் இங்கு வேலைக்குச் சேர்ந்தோம். இந்தக் கட்டடத்தின் 5ஆம் மாடியில், போர்ட்கள் சிலவற்றைப் பொருத்திக்கொண்டிருந்தோம். எங்களுடன் ஐந்து பேர் இருந்தனர். முற்பகல் 10.45 மணியிருக்கும். நாங்கள் இருந்த ஸ்லெப்பின் பின்பகுதி, ஒரேயடியாகச் சரியத் தொடங்கியது. நாங்கள் இருக்கும் பகுதி சரியும்போதே, ஓடிப்போய் கயிறொன்றில் தொற்றி கீழே இறங்கி, உயிரைக் காத்துக்கொண்டோம். எங்களுடைய வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி, உடைந்துவிழுந்த கட்டடத்தின் அறையொன்றிலேயே இருந்தார். அவரை எப்படியோ காப்பாற்றி, வைத்தியசாலையில் சேர்த்துவிட்டனர். உடைந்துவிழுந்த பகுதியிலும், சிலர் பணியாற்றிக்கொண்டிருந்தனர்” என்று, கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கட்டுமானப் பணியாளர்கள் இருவர் தெரிவித்தனர். 

உடைந்துவிழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட நிலையில் மூவர் காணப்படுவதாக, அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்த இராணுவத்தினர், அவ்வாறு கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்குண்டிருந்த மூவரில் ஒருவருடன் அலைபேசியில் தொடர்புகொண்டனர். முற்பகல் 11 மணியிலிருந்து 7 மணிவரை, அவரைக் காப்பாற்றும் மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

தன்னுடைய இடுப்புக்குக் கீழான பகுதி, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகவும் அதனால் தன்னால் நகர முடியாதிருப்பதாகவும் அலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்த அந்த ஊழியர், தன்னை எவ்வாறேனும் காப்பாற்றுமாறும் கோரியிருந்தார்.

சம்பத் என்றழைக்கப்படும் அந்த நபர், இரவு 7.35 மணியளவில் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டார். 

“கட்டடத்தில் அமைந்துள்ள திருமண மண்டபம் புகை மண்டலமாகியது. மண்டபத்துக்கு அருகில் பணியாற்றிக்கொண்டிருந்த கட்டுமானப் பணியாளர்கள், ‘இங்கே இருக்கவேண்டாம். ஓடிப்போய்விடுங்கள்’ என்று கூறினர். இந்தக் கட்டடம், 5 மாடிகளைக் கொண்டது. அடித்தட்டில் வாகனத் தரிப்பிடமும் அதற்கடுத்த மாடியில் திருமண மண்டபமும் இருந்தன. கடைசியிரண்டு மாடிகளிலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன” என்று, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டு உயிர்பிழைத்த, மண்டபத்தின் சமயலறைப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். 

“என்னுடைய தம்பி நிரோஷன், கடந்த ஒரு மாதகாலமாக, இங்குள்ள ஹோட்டலில், துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகின்றான். எங்களுடைய ஊர் ஹட்டன். அவருடன் இணைந்து, பெண்ணொருவரும் பணியாற்றி வருகின்றார். அவர்கள் இருவர் தொடர்பிலும் எந்தவொரு தகவலும் இல்லை. தம்பியின் அலைபேசி, அவருடைய காற்சட்டைப் பைக்குள் தான் எப்போதும் இருக்கும். இன்று, எத்தனையோ முறை அழைப்பை ஏற்படுத்திவிட்டேன், ஆனால், அது வேலைசெய்யவில்லை” என, நிரோஷனின் சகோதரர், சம்பவ தினத்தன்று தெரிவித்தார். 

“இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில், சவோய் திரையரங்கு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கூலிங் டவருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் உரிமையாளர், கட்டடத்தை உரிய தரத்தில் நிர்மாணிக்கவில்லை. அதில், வெடிப்புகள் பல காணப்பட்டன. கட்டட நிர்மாணத்துக்கென, ஒப்பந்தக்காரர்கள் எவரும் இருக்கவில்லை. ஒவ்வொருத்தராக வந்து, அடிக்கடி இந்த நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதைக் கண்டுள்ளேன். ஐந்து வருடங்களாக இந்தக் கட்டடத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று, செவோய் திரையரங்கின் முகாமையாளர் கூறினார்.

எவ்வாறாயினும், கட்டடம் இடிந்து விழுந்ததில் காணாமற்போயிருந்த நிரோஷன் என்ற ஹட்டன் இளைஞரதும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மொரட்டுவையைச் சேர்ந்த பெண்ணினதும் சடலங்கள், சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டதை அடுத்து, படையினரால் அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. 

இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த கட்டட ஆராய்ச்சி மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள், அப்பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொறியியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த கட்டடம், உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் உடைந்து விழுந்த பகுதி, எவ்விதத் திட்டமிடலும் இன்றி, அனுமதியின்றிய முறையில் பல மாடிகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் கூறினார். 

இந்தக் கட்டடத்திலுள்ள உற்சவ மண்டபத்தில், கடந்த சனிக்கிழமையன்று (20) திருமண நிகழ்வொன்று நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்தின் போது, இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்குமாயின், பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரிட்டிருக்கும். 

இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சட்டவிரோத நிர்மாணங்கள் காரணமாக, பல பிரச்சினைகளை, காலத்துக்குக் காலம் நாம் அனுபவித்துக்கொண்டு தான் வருகின்றோம். வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தக் கட்டடம் உடைந்து விழுந்தமையும், ஓர் உதாரணமாகும்.

அதனால், சட்டவிரோதக் கட்டடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சம்பவ தினத்துக்கு மறுதினமே சூளுரைத்திருந்தார். 

அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த 2009ஆம் ஆண்டிலேயே, இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், தொடர்மாடி வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிப்பதற்கென்றே, அதற்கான அனுமதியை, அதன் உரிமையாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால், கட்டடத்துக்கான இணக்கச் சான்றிதழொன்றை அவர் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அத்துடன், அனுமதிக்கேற்ப இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதா? மக்கள் குடியிருப்புக்கு இது ஏற்றதா என்பது தொடர்பில், நகரசபையினால் பெற்றுக்கொள்ளவேண்டிய அனுமதிப் பத்திரங்களை, கட்டடத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டிருக்கவில்லை.

ஆனால், அவ்வனுமதிப் பத்திரங்கள் இன்றியே, அக்கட்டடத்தில் மக்கள் குடியிருப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அத்துடன், இந்தக் கட்டடத்துக்கும் வெள்ளவத்தை கழிவுநீரோடைக்கும் இடையில், 21 அடிகள் இடைவெளி காணப்பட வேண்டும். ஆனால், அவ்வாறான இடைவெளியை விடாது, முழுப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில், கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது, முழுமையாகவே சட்டத்தை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. அதுமாத்திரமன்றி, எந்தவொரு திட்டமிடலோ அதற்கான அனுமதியோ இன்றி, திருமண மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இரு தொடர்மாடிக் கட்டடங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று, 8 மாடிகளைக் கொண்டதாகவும் மற்றொன்று 5 மாடிகளைக் கொண்டதாகவும் நிர்மாணித்துள்ளனர்.

இதில், 5 மாடிகளைக் கொண்ட கட்டடமே இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தால், பிரதேசத்திலுள்ள அனைத்துக் கட்டடங்கள் தொடர்பிலும், அனைவரதும் அவதானம் திரும்பியுள்ளது. 

அந்த வகையில், 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதற்கொண்டு, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட அவசர ஆய்வு நடவடிக்கைகளின் போது, வெள்ளவத்தை முதல் பம்பலப்பிட்டி வரையான பிரதேசத்துக்குள் மாத்திரம் 1,800 சட்டவிரோதக் கட்டடங்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக, தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. 

எது எவ்வாறாயினும், வெள்ளவத்தைப் பிரதேசத்தின் கொள்ளளவு, அதன் அமைவிடம் மற்றும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்.

காரணம், இந்தப் பிரதேசத்தின் கொள்ளளவைக் காட்டிலும் அதிகமான கட்டடங்கள் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு, ‘தி எக்செலென்சி’ கட்டடம் உடைந்து விழுந்தது தான் முதல் உதாரணமல்ல. இதற்கு முன்னர் பலமுறை, வெள்ளவத்தை றொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான காலிவீதியின் ஒரு பகுதி, அடிக்கடி தாழிறங்கி வந்தமை அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இது, அருகிலுள்ள நீரோடை காரணமாகவே இடம்பெற்று வந்ததாக, அக்காலத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில், அது காரணமல்ல என்று, பிரபல பொறியியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

நிலத்துக்கடியில் காணப்படும் நீரூற்றுகள், தன்பாட்டுக்கு தங்களது திசையறிந்துப் பயணித்துக்கொண்டிருப்பது வழமை. அவ்வாறு பயணிக்கும் நீரூற்றுகளை, அவற்றின் வழமையான பயணத் திசையைத் திருப்பிவிட்டுத் தான், கட்டுமானப் பணியாளர்கள், தங்களது கட்டடங்களை நிர்மாணிக்கின்றனர். வெள்ளவத்தை பிரதேசத்தைப் பொறுத்தவரையில், கட்டடங்கள் அற்றப் பகுதியென்று ஒன்றை குறிப்பிட்டுக் கூற முடியாது. எங்கும் எல்லாத் திசைகளிலும் கட்டடங்கள். இதனால், நீரூற்றுகளின் திசைகள் மாற்றப்பட்டு, அவற்றுக்கென்றதொரு திசையே இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இதனால், அவை அடைப்புக்குள்ளாகி, ஓரிடத்தில் வெடிக்கத் தொடங்கி விடுகின்றன. இவ்வாறான வெடிப்பினால் ஏற்பட்டதே, வெள்ளவத்தை தாழிறக்கம் என்று, அந்தப் பொறியியலாளர் விளக்கியிருந்தார். 

அந்தப் பொறியியலாளர் கூறிய விடயத்தில் உண்மை இருக்கின்றதோ இல்லையோ, ஆனால், றொக்ஸி திரையரங்குக்கு முன்னால் அடிக்கடி ஏற்பட்டு வந்த தாழிறக்கம், நீரூற்றுக்கென்று சரியான திசையொன்றை ஏற்படுத்திக்கொடுத்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிரந்தர அபிவிருத்திப் பணிகளின் பின்னரே, அவ்விடத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினை, தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இதேபோன்றே, வெள்ளவத்தை ‘தி எக்செலன்சி’ கட்டடம் உடைந்து விழுந்தமைக்கும், இவ்வாறான நீரூற்றுப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. காரணம், அக்கட்டடத்துக்கு அருகிலும்  கழிவு நீரோடையொன்றும் அமைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து, உரிய அதிகாரிகள் தான் ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும்.  

எவ்வாறாயினும், இன்று இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்கள் காரணமாக, பாரிய இன்னல்களைச் சந்திக்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் கொழும்பில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்குக்கும், இவ்வாறான சட்டவிரோத நிர்மாணங்களே காரணமாக அமைந்தன என்று கண்டுபிக்கப்பட்டது.

நீர் வடிந்தோடக்கூடிய தாழ்நிலப் பிரதேசங்கள் முடக்கப்பட்டும், மண்களைக் கொண்டு நிரப்பப்பட்டும் வீடுகள், கட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலேயே, கொழும்பில் நிரம்பிவழிந்த வெள்ளநீர் இறங்கிச் செல்வதற்கு வழியின்றி, சில தினங்கள் தேங்கியிருந்து பல அழிவுகளை ஏற்படுத்தின.

இவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அப்போது குரலெழுப்பிய அதிகாரமிக்கவர்கள், வெள்ளம் வழிந்தோடியதோடு, வழங்கிய வாக்குறுதிகளையும் அந்த வெள்ளத்திலேயே கரைத்துவிட்டனர். 

ஓரிடத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெறுமாயின், அது தொடர்பில் தேடிக் கண்டறிவதற்கான பல நிறுவனங்கள், இலங்கையில் இயங்கி வருகின்றன. இருப்பினும், அந்த நிறுவனங்கள் தொடர்பான நம்பிக்கையீனங்களும், வலுப்பெற்றுதான் வருகின்றன. இருப்பினும், ஓரிரு பொறுப்புவாய்ந்த நிறுவனங்களேனும் முன்வந்து, சட்டரீதியான முறையில், சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மாத்திரமல்ல, கொழும்பு நகரில் அதிக சனத்தொகை குடியிருக்கும் தெஹிவளை, கல்கிஸை, மட்டக்குளி மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பல பிரதேசங்களிலுமுள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பிலான அவதானமும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பின்னர், அவற்றுக்கெதிரான நடவடிக்கைள் எடுக்கப்படல் வேண்டும். விசேடமாக, நீரோடைகளின் இருபுறங்கள், சதுப்பு நிலங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் வலயங்கள் போன்றவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில், விசேட அவதானம் செலுத்தப்படல் வேண்டும். இது, கொழும்பு எதிர்நோக்கிவரும் வெள்ளப் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .