Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூன் 27 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
சட்டப்படி இவ்வருடம் செப்டம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாததால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அத்தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று கடந்த வருட ஆரம்பத்தில் இருந்தே பலர் மத்தியில் இருக்கும் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார வெளியிட்டுள்ளார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவி ல் மே 28 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ரங்கே பண்டார, குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலத்தை நீடித்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் செய்து கொள்ளப்பட்டு இருக்கும் உடன்படிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதிக்கு மேலும் இரண்டு வருடங்களாவது கொடுக்க வேண்டும். அதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமாயின் அதனையும் நடத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அன்றே இந்தக் கூற்றுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவர் தலைமையிலான ஐதேகவின் ஏனைய சில தலைவர்களும் அக்கருத்தை நிராகரித்தனர். ஆயினும், தாம் தமது விருப்பத்தையே தெரிவித்தாகவும் அதற்கு அரசியலமைப்பில் தடை ஏதும் இல்லை என்றும் ரங்கே பண்டார கடந்த திங்கட்கிழமை கூறினார்.
அவரது வாயிலிருந்து வந்தாலும் இது அவரது எஜமானின் குரல் (his master’s voice) என்றே பலரும் நினைக்கின்றனர்.
அதாவது, தோல்விக்கு பயந்து தேர்தலை நடத்துவதா, இல்லையா, போட்டியிடுவதா, இல்லையா என்று இரு மனதுடன் இருக்கும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திப்போடும் கருத்தை மற்றொருவர் மூலம் வெளியிட்டு அதற்கு வரவேற்பு இருக்கிறதா? என்று பார்க்கிறார் என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.
அதற்கு வரவேற்பு இல்லை என்பது அன்றே விளங்கவே ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட படி நடக்கும் என்று ஜனாதிபதியும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கூறியிருந்தனர்.
ஆனால்? ஐ.தே.க இக்கருத்தை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கூறி வருகிறது என்பதை கருத்தில்கொள்ளும் போது இது ரங்கேயின் சொந்தக் கருத்து என்பதை நம்ப முடியாது. நாட்டை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதைப் பற்றி விக்ரமசிங்கவுடன் போட்டியிடப் போகும் ஏனைய கட்சித் தலைவர்களிடம் எவ்விதக் கருத்தும் இல்லாத நிலையில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என்று ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கூறினார்.
அதனை அடுத்து சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டதைப் போல் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் இல்லாமல் மேலும் 12 ஆண்டுகள் நாட்டை ஆள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கடந்த வருடம் ஜூன் 14 ஆம் திகதி காலியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கூறினார்.
ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்கள் அல்ல, 12 வருடங்கள் வழங்க வேண்டும் என்று அன்று வஜிர தெரிவித்த கருத்துக்கு இப்போது போல் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
அதனை அடுத்து மீண்டும் கடந்த வருடம் ஒக்டோபர் 24 ஆம் திகதி கருத்து தெரிவித்த வஜிர, ஜனாதிபதித் தேர்தலுக்காக 1,300 கோடி ரூபாய் செலவாகும் என்றும் ஏனைய வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி ரணிலை ஏகமனதாக ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அப்பணத்தை மின்சார கட்டணத்தை குறைக்கவும் ஏனைய நிவாரணங்களுக்காகவும் உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.
ஐதேகவின் தவிசாளரும் பொதுச் செயலாளரும் தேர்தலின்றி ரணிலின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்தை கடந்த வாரம் வரை ஐதேகவின் எந்தவொரு தலைவரும் மறுக்காமை அக்கருத்து எங்கிருந்து வருகிறது என்பதை ஊகித்துக்கொள்ள எமக்கு உதவுகிறது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ரணிலைத் தவிர வேறு எவரும் இல்லை என்று உண்மையிலேயே ஐ.தே.க தலைவர்கள் நம்பி இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சி தோல்வியடையும் என்ற பயமே அவர்கள் இக்கருத்துக்களை வெளியிடுவதற்கான உண்மையான காரணமாகும்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பொருளாதார நிலைமை சற்று சீரடைந்ததைப் போல் தெரிகிறது என்பது உண்மைத் தான். ஆனால் அது பொருளாதார மீட்சியும் அல்ல. அதற்கு காரணம் ரணிலும் அல்ல. உண்மையிலேயே என்ன நடந்திருக்கிறது என்றால் பொருளாதாரத்தை மிக மோசமாக அழித்தவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே சர்வதேச நாணய நிதியத்துடன் அரம்பித்த வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து அந்நிதியத்திடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் ஒரு பில்லியன் டொலருக்கு மேல் கடன் கிடைத்திருக்கிறது.
இந்தியா தவிர வேறு எவருமே உதவியளிக்காதிருந்த இலங்கைக்கு அதன் மூலம் எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்ய முடிந்தது. அதன் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகளை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. எரிபொருள் தட்டுப்பாடு நீங்கவே போக்குவரத்தும் ஓரளவுக்கு சீரடைந்து பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஓரளவுக்கு தீர்ந்தது. அதைத் தவிர 2022 ஆம் ஆண்டு மும்மடங்காக ஏறிய பொருட்களின் விலை இதுவரை குறையவில்லை. எதிர்க்காலத்தைப் பற்றிய மக்களின் அச்சமும் நீங்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச நாணய நிதியம் தற்காலிகமாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள உதவுகிறதேயல்லாமல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தை வழிநடத்துவதில்லை.
எனவே, முன்னர் பெற்ற கடன்களையும் நாணய நிதியத்தின் உதவியில் தற்போது பெறும் கடன்களையும் திருப்பிச் செலுத்தும் வழிமுறைகளை இலங்கை ஆட்சியாளர்களே கண்டுபிடிக்க வேண்டும். அரசாங்கத்திடம் அவ்வாறானதொரு திட்டம் இல்லை.ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மூலம் அதனைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி அடிக்கடி கூறுகிறார். அது பாடப்புத்தகங்களில் இருக்கும் கருத்தாகும். குறிப்பிட்ட திட்டமொன்றை அது குறிக்கவில்லை.
2022 ஆம் ஆண்டில் எந்தவொரு நாடும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு கடன் வழங்காத நிலைமையே இருந்தது. எனவே எவர் அதிகாரத்தில் இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்பதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியே இருக்கவில்லை.
அதன் பிரகாரம் அந்நிதியம் இலங்கைக்காக ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. எவர் அதிகாரத்தில் இருந்தாலும் அதனூடாக பொருளாதாரத்தை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்துகொள்ள வேண்டும். அந்தக் கட்டத்தைத் தான் நாம் தற்போது கடந்து செல்கிறோம்.
தேர்தல் மூலம் மற்றொரு கட்சி பதவிக்கு வந்தால் நாணய நிதியத்தின் இந்தத் திட்டம் சீர்குழைந்துவிடும் என்றும் எனவே, தேர்தலின்றி ரணிலுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதும் ஐ.தே.க தலைவர்களின் மற்றொரு வாதமாகும். ஆயினும் அதுவும் தவறான வாதமாகும். ஏனெனில் தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
அக்கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தியானது நாணய நிதியத்தை அணுகி உதவி கேட்க வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ அந்நிதியத்தை அணுக முன்னரே கூறி வந்த கட்சியாகும். அதேபோல் அக்கட்சியானது ஐதேகவிலிருந்து பிரிந்த கட்சியாகும். அதன் தலைவர்கள் கொள்கை வேறுபாடு காரணமாக அவ்வாறு ஐதேகவிலிருந்து பிரியவில்லை.
ரணிலின் தலைமையில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்று கூறியே அவர்கள் பிரிந்து சென்றார்கள். எனவே சஜித் பிரேமதாச, நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தை மாற்றப் போவதில்லை.
அண்மையில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆரம்பத்திலேயே நாணய நிதியத்திடம் செல்லாது வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் ஆயினும் தற்போது அந்நிதியத்தின் திட்டத்தை மாற்ற முடியாது என்றும் கூறினார்.
எனவே நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ரணில் தான் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஒரு நாடு ஜனாதிபதித் தேர்தலுக்காக 1300 கோடி ரூபாய் செலவழிப்பது முறையாகாது என்று ஐதேக தலைவர்கள் வாதிடுகிறார்கள்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதாக இருந்தால் அதற்காக அரசியலமைப்பை திருத்த வேண்டும். அத்திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பும் நாடு முழுவதிலும் நடைபெறும் வாக்கெடுப்பு என்பதால் அதற்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவுத் தொகையையே செலவழிக்க வேண்டும்.
அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால் அதன் பின்னர் மற்றுமொரு தொகை பணத்தை செலவழித்து ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த வேண்டும். எனவே ஐதேகவின் ஆலோசனை எவ்வகையிலும் பொருத்தமற்றதாகும்.
37 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago