Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக நான்கு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நீண்ட போராட்டங்களின் பின்னர் திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்தை மூட முடிந்தது. இன்று ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற வகையில் அரசாங்கம் மீண்டும் அனல் மின் நிலையங்களை நோக்கி தனது கவனத்தைச் செலுத்துகிறது. அந்நான்கில் இரண்டு அனல் மின் நிலையங்கள் நுரைச்சோலையிலும் இரண்டு திருகோணமலையிலும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கத்தின் இம்முடிவு பல கேள்விகளை எழுப்புகின்றன.
முதலாவது அனல் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் அதை அண்டியுள்ள கடற்பரப்புக்கும் மீன் பிடிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும் சுகாதாரத்துக்கும் பாதகமானது என்ற தீர்ப்பை இலங்கையின் உயர் நீதிமன்றம் சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பான வழக்கில் வழங்கியிருந்தது. இதன் பின்னும் அரசாங்கம் நான்கு அனல் மின் நிலையங்களை அமைக்க திட்டமிடுவதன் பின்புலம் என்ன?.
சம்பூர் அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதன் பின்னர் அரசாங்கம் இனிமேல் அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தப்படாது என்றும் புதுப்பிக்கப்பட்ட சக்தியை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு காலம் எடுக்கும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக திரவப் பெற்றோலிய வாயு மூலம் மின் உற்பத்தி செய்வது என்று தீர்மானித்திருந்தது. இம்முடிவு திடீரென மாற்றப்பட்டது ஏன்?
இலங்கையில் மின் உற்பத்திக்கான மூலங்களை புதுப்பிக்கத்தக்க சக்தியில் இருந்து பெற்றுக் கொள்வது என்றும் 2050ம் ஆண்டில் 100% புதுப்பிக்கத்தக்க சக்தியில் இருந்தே மின்னுற்பத்தி என்பதை இலங்கை இலக்காக கொண்டுள்ளது. அதன் பின்புலத்தில் அனல் மின் நிலையங்களை உருவாக்குவது ஏற்கனவே எட்டப்பட்ட கொள்கை முடிவுக்கு முரணானது அல்லவா? இதை எவ்வாறு விளங்குவது?
தற்போது நடைமுறையில் உள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஏற்படுத்தியுள்ள சுகாதார சுற்றுச்சூழல் பாதிப்புகளை நாம் நன்கு அறிவோம் இருந்தும் அங்கு இன்னும் இரண்டு அனல் மின் நிலையங்களை உருவாக்க அரசு திட்டமிடுகிறது என்றால் நாட்டுமக்கள் குறித்து அரசாங்கத்தின் எண்ணம் என்ன?
இக்கேள்விகளுக்கான விடைகள் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. சத்தமில்லாமல் அரங்கேறப்போகும் இந்நிகழ்வுகளுக்கான எதிர்ப்பைப் பதிவுசெய்வதும் அதற்கெதிராகப் போராடுவதும் இலங்கையை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும்.
எமது சுற்றுச் சூழலையும் எதிர்காலத்தையும் அடகு வைப்பவர்கள் தான் ‘தேசப்பற்று’க் குறித்துப் பேசுகிறார்கள். ‘தாய்நாடு’ குறித்துப் பேசுகிறார்கள். நாடு எம் கண்களுக்குத் தெரியாமல் மெதுமெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. தேசியவாதக் கூச்சலின் இரைச்சலில் அனல்மின்நிலையத்திற்கு எதிரான குரல்கள் அடங்கிவிடும் ஆபத்தை நாம் எதிர்நோக்கி உள்ளோம். இது மிகவும் ஆபத்தானது.
அனல் மின்நிலையத்தை அமைக்க அனுமதித்தால் அதன் துர்விளைவுகளை பல்வேறு தலைமுறைகளுக்கு நாம் சந்திக்க வேண்டி வரும்.
நாங்கள் கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். எல்லா வகையிலும் கந்தக காற்றை சுவாசிக்கும் ஒரு சந்ததியை உருவாக்கியே தீருவேன் என்று நம் அரசியல்வாதிகள் கங்கணம் கட்டி விட்ட நிலையில் அதற்கு எதிராக போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி இல்லை.
அனல் மின் நிலையத்திற்கு எதிரான மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை பரந்துபட்ட ஐக்கியத்தின் அடிப்படையில் கட்டமைக்க வேண்டியது இன்றைய அவசரத் தேவை யாகிறது.
ஒன்றுபோய் நான்கு வந்தது டும் டும் டும்
திரவப்பெற்றோலியம் போய் கரி வந்தது டும் டும் டும்
எது போய் எதுவருமோ டும் டும் டும்
நானறியேன் யாரறிவார் டும் டும் டும்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
56 minute ago