2025 மே 01, வியாழக்கிழமை

அனுரவின் அரசாங்கமும் சிறுபான்மையினரும்

Mayu   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எம்மால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இல்லாதொழிக்கப்படும் என  ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா தெரிவித்த கருத்தினால் எழுந்துள்ள கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களுக்குள் சிக்குண்ட அநுர அரசு ரில்வின் சில்வாவின் கருத்து திரிவுபடுத்தப்பட்டு விட்டதாக மறுப்பு வெளியிட்டாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க மாட்டோம்  என இன்றுவரை எந்த உத்தரவாதத்தையும் தமிழ் தரப்புக்களுக்கு வழங்கவில்லை.

ரில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில்  ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளித்த ஜே .வி.பி., நாட்டில் சமாதானம் உறுதிப்படுத்தப்படும் வகையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வகையிலும் புதியதொரு தீர்வுத்திட்டம் தற்போது தேவைப்படுகின்றது. புதிய தீர்வு திட்டம் வரும் வரையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்யமாட்டோம் எனக் கூறியுள்ளது.

ஏனெனில்,  ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த ஜே.வி.பி.பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கூறுகையில், “மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், அமைச்சரவையில் கூட முன்வைக்காதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பலவந்தமாக கைச்சாத்திட்டமையினாலேயே அதனை நாங்கள் எதிர்க்கின்றோம். அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கத்தின் ஒன்று தான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம்  கொண்டு வரப்பட்டு சுமார்  37 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. இன்றும் 13ஆவது திருத்தம் குறித்து முரண்பாடான கருத்துக்களே நாட்டில் உள்ளன. எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் வெற்றியளிக்காத விடயம் என்பது நிரூபணமாகியுள்ளது.

ஆகவே, நாட்டின் சமாதானம் உறுதிப்படுத்தப்படும் வகையிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வகையிலும் புதியதொரு தீர்வுத் திட்டம் தற்போது தேவைப்படுகின்றது. புதிய தீர்வு திட்டம் வரும் வரையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய இயலாது. ஏனெனில், ஏதேனும் ஒரு தீர்வு திட்டம் கிடைத்திருக்குமாயின், அது மாகாண சபை ஊடாகவே கிடைத்துள்ளது என தமிழ் மக்கள் நம்புகின்றனர். ஆகவே மாற்றுத் திட்டமின்றி மாகாண சபை முறைமையை இரத்து செய்வது என்பது முறையற்றதாகும்.

நாட்டில் மாகாண சபை முறைமை தோல்வியடைந்த விடயமென்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும் அனைத்து இன மக்களும்ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வு திட்டம் முன்வைக்கப்படும் வரை மாகாண சபை முறையை இரத்து செய்ய மாட்டோம். புதிய அரசியலமைப்பு ஊடாக சிறந்த தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மாகாண சபை முறைமைக்குமான தேவை நாட்டில் இருக்காது’’ என்று கூறியுள்ளார்.

இதன்போது அவரிடம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மாகாண சபை முறைமை இரத்தாகும் என்றா கூறுகின்றீர்கள்  என கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆம். அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால்,மாகாண சபை முறைமைக்கோ அல்லது 13ஆவது அரசியலமைப்பிற்குமான தேவைப்பாடு நாட்டில் இருக்காது. அது நாட்டிற்கு தேவையும் படாது.

மாகாண சபை முறைமை என்பது, எந்த பலனும் அற்ற, நாட்டில் தோல்வியடைந்த ஒரு விடயமாகும். எனவே, புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்காது மாகாண சபை முறைமையை இரத்து செய்ய மாட்டோம்” என கூறியுள்ளார். 

எனவே, புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம் என சில உப்புசப்பற்ற விடயங்களை  உள்ளடக்கிவிட்டு 13ஆவது அரசியலைப்புத் திருத்தத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில்தான் ஜே.வி.பி. உள்ளது

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலின் போது, அதில் வேட்பாளராகக் களமிறங்கியவரும் தற்போதைய ஜனாதிபதியும்  ஜே.வி.பி.யின் தலைவருமான அனுரகுமார, ஜனாதிபதி தேர்தலுக்கு யாழுக்குச் சென்று இலங்கை தமிழரசுக் கட்சியை சந்தித்தபோது, “இனப் பிரச்சினைக்குத் தீர்வு  காண்பதற்கு சகல தரப்பினருடனும் பேசி ஒரு புதிய அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஜே.வி.பி. அரசாங்கம் முயற்சிக்கும். தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பாகப் பலமான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை நாம்  முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன், மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு நாம்  இணங்கியுள்ளோம்” என்று உறுதியளித்திருந்தார்.  

ஆனால், தற்போது  ரில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் அனுர அரசு மீது தமிழ் மக்களுக்கு கடும் அதிருப்தியும் விசனமும் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்கள் அண்மையில் ஜனாதிபதி அனுரவை சந்தித்துப் பேசியபோது, கூட, ரில்வின் சில்வாவின் கருத்து தொடர்பிலான விளக்கத்தையோ, 13ஆவது அரசியலமைத் திருத்தம் ஒழிக்கப்படாது என்ற உத்தரவாதத்தையோ ஜனாதிபதி அனுரகுமார வழங்கவில்லை.

தமிழ்மக்களுக்கான தீர்வு தொடர்பில் புதிய  அரசியலமைப்பில்தான் தீர்மானிக்க முடியும். அவ்வாறான தீர்வுகள் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை, பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

அவசரப்பட்டு இதில் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில், காணாமல் போனோர் அலுவலகத்தின் மூலம் கவனம் செலுத்தப்படும்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படுவதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும். நாம் இப்போதுதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளோம்.

எனவே, எதனையும் படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்றே  ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாம்  ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின்போது, 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையில் இருக்கும். மாகாணசபை முறையில் எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்படவோ  அதிகரிக்கப்படவோ மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, ரில்வின் சில்லா சொன்ன கருத்திற்கும் ஜனாதிபதி சொல்லும் கருத்திற்கும் இடையிலான முரண்பாடு இருக்கின்றது எனினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சொல்லும் கருத்து உண்மையான கருத்தாகும் என தமிழரசுக்  கட்சியின்  ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான  ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னரே சிறிநேசன்  இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

சந்திப்பு நடந்தவுடன் இலங்கை தமிழரசுக் கட்சியினர் கூறியதாவது, 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்றே கூறியிருந்தனர். எனவே, தற்போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள கட்சியின்  ஊடக  பேச்சாளரான சிறிநேசன் எம்.பி., அனுரகுமார அரசை விமர்சனங்களிலிருந்து பாதுகாக்க முற்படுகின்றாரா? அல்லது தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாற்றில் இல்லாதவாறு தமிழ்  மக்களின் ஆதரவைப் பெற்று வடக்கில்  5 ஆசனங்களையும் கைப்பற்றிவிட்டே தமிழ் மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தை, இனவாதத்தை அனுரகுமார அரசு முன்னெடுக்கவுள்ளது.

இதன்மூலம் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கையும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்த அனுரகுமார அரசினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு, கிழக்கில் சிங்களத் திணிப்புக்களையும் அனுரகுமார அரசு முன்னெடுத்துள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இன்னும் பலமிழக்கச் செய்யும் வகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள அனுரகுமார அரசு அதன் முதல் கட்டமாக வடக்கு-கிழக்கில் சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்களாகச் சிங்களவர்களை நியமித்துள்ளது.  

பி.எஸ்.என்.விமலரட்ண என்பவர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி.நிசங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம்.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த  2ஆம் திகதிமுதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு  வந்துள்ளன. அது மட்டுமன்றி, கிழக்கு மாகாண பதில் கல்வி பணிப்பாளராக எஸ்.ஆர்.ஹெசந்தி என்ற சிங்களப்பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கிழக்கு மாகாணத்தில் மேற்படி பதவிக்கு நியமனம் பெறும் முதல் சிங்கள இனத்தைச் சேர்ந்தவராக உள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத் தேர்தலிலும் தனக்கும் தனது கட்சிக்கும்  பெருவாரியாக வாக்களித்து வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த தமிழ் மக்களுக்கு அனுரகுமார அரசு காட்டிய நன்றிக்கடன் இந்த தமிழின விரோத நடவடிக்கைகள்தான்.

அனுரகுமார அரசின் தமிழின விரோத ஆட்டம் தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளதால் இனிவரும் நாட்களில் இன்னும் பல அதிர்ச்சிகளைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய நிலைமை பிரகாசமாகவே உள்ளது.  

12.12.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .