Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 ஜனவரி 01 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 125)
அமிர்தலிங்கத்தை அதிர்ச்சிக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கும்வாறாக, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்திருந்த அனெக்ஷர் (பின்னிணைப்பு) ‘பி’யும் இணைக்கப்பட்டிருந்தது. இது, டெல்லியில் இணங்கியவற்றிலிருந்து வேறுபட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கியிருந்தது.
தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்து, நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்தான் தாம் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவோம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் திட்டவட்டமான முடிவு.
இதனை இந்தியாவிடமும் ஊடகங்களிடமும் அவற்றினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும் அமிர்தலிங்கம், பலமுறைகள் தொடர்ந்து எடுத்துரைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அனெக்ஷர் ‘பி’யின் முதலாவது விடயமாக, ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்று ஜே.ஆர் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தமையைப் பெரும் சதியாக அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பார்த்தனர்.
ஏற்கெனவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்பதை ஜே.ஆர் முன்னிலைப்படுத்தியதானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களோடு, தமிழ் அரசியல் தலைமைகளை முரண்பட வைக்கும் நடவடிக்கையாகவே அமிர்தலிங்கம் பார்த்தார். அதனை கோபால்சாமி பார்த்தசாரதியிடம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், சர்வஜன வாக்கெடுப்பின்றி, உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பிராந்திய சபைகளாக இணைய, ஜே.ஆர் டெல்லியில் சம்மதித்திருந்த போதும், அனெக்ஷர் ‘பி’யில், சர்வசன வாக்கெடுப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தாம் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டதாக அமிர்தலிங்கம் உணர்ந்திருக்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பார்த்தசாரதி, அமிர்தலிங்கம் குழுவினரை அவசர உயர்மட்டச் சந்திப்புக்காக டெல்லிக்கு வரவழைத்தார்.
இந்திரா - அமீர் மீண்டும் சந்திப்பு
1983 டிசெம்பர் 30ஆம் திகதி, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் டெல்லி சென்றடைந்தனர். அங்கு, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் மற்றும் கோபால்சாமி பார்த்தசாரதி ஆகியோரைச் சந்தித்து, ஜே.ஆரின் ஏமாற்றுத் தந்திரம் பற்றித் தமது விசனத்தை வௌிப்படுத்தினர்.
இந்த விடயம், இந்திரா காந்திக்கும் பெரும் விசனத்தையும் அதிருப்தியையும் எற்படுத்தியிருந்தது. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு மாறாக, ஜே.ஆர் செயற்பட்டதை, தனக்கு ஜே.ஆர் அளித்த வாக்குறுதியிலிருந்து மீறியதாகவே இந்திரா காந்தி பார்த்திருக்க வேண்டும்.
அமிர்தலிங்கத்திடம், “நீங்கள் கவலைப் படாதீர்கள். நான் இதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்ன இந்திரா, 1983 டிசெம்பர் 30ஆம் திகதி மாலையே, ஜே.ஆரைத் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்திரா - ஜே.ஆர் மீண்டும் தொலைபேசி உரையாடல்
ஜே.ஆரிடம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும் தமிழ் மக்களினதும் மனநிலையை எடுத்துரைத்த இந்திரா காந்தி, எழுந்திருக்கக்கூடிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது பற்றி ஜே.ஆரிடம் பேசினார்.
தன்னுடைய அமைச்சர்களோடு, இது பற்றிப் பேசிவிட்டு அறியத்தருவதாகச் சொன்ன ஜே.ஆர், தன்னுடைய அமைச்சர்களோடு பேசிவிட்டு, பார்த்தசாரதி மீண்டும் இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்த, பச்சைச் சமிக்ஞை காட்டினார்.
டெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அமிர்தலிங்கம், ஜே.ஆர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டார் என்று குற்றஞ்சுமத்தினார்.
மேலும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்று எட்டப்படும் வரை, தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கைவிடாது என்பதே, தமது உறுதியான நிலைப்பாடு என்பதையும் வலியுறுத்தினார்.
இந்திய உபாயம்
இதேவேளை, 1983 டிசெம்பர் 31ஆம் திகதி, இலங்கை விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட கூட்டமொன்றை இந்திரா காந்தி நடாத்தினார். வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ரா, கோபால்சாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கைக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தி, இலங்கை தொடர்பான ‘இரட்டைப்படை நடவடிக்கை’யை முன்னெடுப்பது பற்றிய முடிவை முடுக்கிவிட்டார்.
முதலாவதாக, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் செயற்பாட்டை வௌிவிவகார அமைச்சு கொண்டு நடத்த வேண்டும் என்றும், பின்புலத்தில் இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, ஆயுத ரீதியாகப் பலப்படுத்தும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதென, தனது நூலொன்றில் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.
ஜே. ஆரின் உறுதியற்ற நிலை
இந்திரா காந்தியுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அனெக்ஷர் ‘பி’யில் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் நடவடிக்கையை ஜே.ஆர் முன்னெடுத்தார்.
அனெக்ஷர் ‘பி’ முன்மொழிவுகள், அரசாங்கத்தின் முன்மொழிவுகளாகவே ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் 30 மாலை, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தினூடாக, அதன் செயலாளர் நாயகம் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்ஹ வௌியிட்ட ஊடக அறிக்கையில், அனெக்ஷர் ‘பி’யில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவுகள் அல்ல என்றும் சர்வகட்சி மாநாடு இறுதியாகத் தீர்மானிக்கும் முன்மொழிவுகளையே சகல கட்சிகளும் பின்னர் அரசாங்கமும் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த விடயத்தில், அர்ப்பணிப்புடனான செயற்பாட்டுக்கு ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை, தனது அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைக்க ஜே.ஆர் தயக்கம் காட்டியமைக்குக் காரணம், பௌத்த அமைப்புகளிடமிருந்து உண்டான எதிர்ப்பு.
சர்வகட்சி மாநாட்டில், பதிவுசெய்யப்பட்ட சகல கட்சிகளை மட்டுமல்லாது, பௌத்த பிக்குகளையும் பௌத்த அமைப்புகளையும் ஜே.ஆர் உள்ளிணைத்திருந்தார்.
டெல்லி இணக்கப்பாட்டை, அரசாங்கத்தின் முன்மொழிவாக முன்வைப்பதற்கு, பௌத்த அமைப்புகளின் இணக்கம் இருக்கவில்லை என்பதை ஜே.ஆர் அறிந்ததும், ஜே.ஆர் இலாவகமாக அதைத் தவிர்த்து, அனெக்ஷர்‘பி’யை முன்வைத்தார்.
அதற்கு, இந்தியாவிடமிருந்து எதிர்ப்பு வந்ததும், அனெக்ஷர் ‘பி’யிலிருந்து தன்னையும் தனது அரசாங்கத்தையும் அந்நியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.
அனெக்ஷர் ‘பி’ ஆனது, அரசாங்கத்தினதோ, எந்தவொரு கட்சியினதோ முன்மொழிவு இல்லாவிட்டால், அது யாருடைய ஆவணம், சர்வ கட்சி மாநாட்டு அழைப்பிதழோடு அது ஏன் இணைக்கப்பட்டிருந்தது போன்ற கேள்விகள் எழுவது நியாயம்.
அதற்கு அது, சர்வகட்சி மாநாட்டுச் செயலகத்தின் ஆவணம் என்ற பதில் முன்வைக்கப்பட்டது. ஜே.ஆர் அரசாங்கமானது, இந்த விடயத்தில் பட்டவர்த்தனமாக, எதுவித அர்ப்பணிப்புமின்றிச் செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
இது மட்டுமல்ல, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்த விடயத்திலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க கேட்டுக் கொண்டதன்படியே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைத்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விசனமுறச் செய்தது. நடத்துவது தானாக இருந்தாலும், நடப்பவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்க ஜே.ஆர் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்தார்.
இந்த இடத்தில் ஜே.ஆர், தனது சிங்கள பௌத்த வாக்குவங்கி பற்றி அச்சம் கொண்டிருந்தார். அதனால்தான் அவர்கள் இணங்காத ஒரு தீர்வைத்தர அவர் முன்வரவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். இது யதார்த்தத்துக்கு முரணான வாதம்.
ஜே.ஆரின் பல முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பிரபல்யமாக இருக்கவில்லை. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும் அதனடிப்படையிலான தனியார் மயமாக்கலுக்கும் கூட கடும் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறியும் ஜே.ஆர்தான் எண்ணியதைச் செய்து முடித்தார்.
ஆகவே, இனப்பிரச்சினை விவகாரத்தில், ஜே.ஆரினால் தனது வாக்கு வங்கியையும் அழுத்தக் குழுக்களையும் தாண்டிச் செயற்பட முடியாது என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது.
இங்கு பிரச்சினை ஜே.ஆரின் நிலைப்பாட்டில்தான் இருந்தது. இந்திய மற்றும் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு ஜே.ஆர் சம்மதித்தாரேயன்றி, அவரது விருப்பும் எண்ணமும் அதுசார்ந்து இருந்ததாகத் தெரியவில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஜே.ஆர் தனது இராணுவ உறவுகளை அதிகரித்துக் கொண்டு வந்தார்.
ஆகவே, அவரது எண்ணம் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளில்தான் இருந்தது என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாடு
இதனிடையே டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சென்னையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன் ஒரு சந்திப்பை நடத்த விரும்பினார். சர்வகட்சி மாநாட்டில், தாம் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்வதே குறித்த சந்திப்பை நடத்துவதற்கான அமிர்தலிங்கத்தின் நோக்கமாக இருந்தது.
ஆனால், குறித்த அழைப்புக்குத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமக்குச் சம்மதமில்லை என்ற செய்தியை சில தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அமிர்தலிங்கத்துக்கு அனுப்பி வைத்தன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோருக்கிடையேயான முறுகல் தொடர்ந்து கொண்டிருந்தது.
மீண்டும் இலங்கை வந்தார் பார்த்தசாரதி
1984 ஜனவரி மூன்றாம் திகதி, கோபால்சாமி பார்த்தசாரதி, இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்த பார்த்தசாரதி, இம்முறை கடுந்தொனிப் போக்கை கையாண்டார். டெல்லியில், பார்த்தசாரதியோடு ஏற்பட்ட உடன்பாட்டை ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க வேண்டும் என்பது பார்த்தசாரதியின் வேண்டுகோளாக இருந்தது. மேலும், தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பு உறுதியாகும்வரை, தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடப்போவதில்லை; இணைந்த வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கான சுயாட்சிக் கட்டமைப்புத்தான் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதை இம்முறை பார்த்தசாரதி, சற்றே கடுந்தொனியில் ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார்.
இந்தியாவுடன் முரண்படும் அரசியல் வலு, ஜே.ஆருக்கு இல்லை
ஜே.ஆர் தனது உற்ற நண்பனாகக் கருதிய அமெரிக்கா கூட, இந்தியாவுடன் முரண்பட வேண்டாம் என்றே ஜே.ஆருக்கு ஆலோசனை கூறியிருந்த நிலையில், பார்த்தசாரதியோடு டெல்லியில் இணங்கிய விடயங்களை, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் இணைந்த, அனெக்ஷர் ‘சி’யாக அனைவருக்கும் அனுப்பி வைக்க ஜே.ஆர் சம்மதித்தார்.
அனெக்ஷர் ‘சி’ உடன்பாடு ஏற்பட்டதும் தமிழ் நாட்டிலிருந்த அமிர்தலிங்கத்தைத் தொடர்பு கொண்ட பார்த்தசாரதி, அவர்களை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள உடனடியாக இலங்கை செல்லுமாறு அறிவுறுத்தினார்.
மீண்டும் இலங்கை வந்த அமீர் குழுவினர்
1984 ஜனவரி நான்காம் திகதி, ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர், அமிர்தலிங்கம் குழு மீண்டும் இலங்கை வந்தது.
இலங்கை வந்தடைந்த அமிர்தலிங்கம் குழுவினர், அதியுச்ச இராணுவப் பாதுகாப்போடு, கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்தியாவின் அழுத்தம், அமிர்தலிங்கத்தை சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கச் செய்திருந்தாலும், அவருக்கும் நடப்பவைகள் பற்றி நிறைய அதிருப்திகள் இருந்தன.
ஜே.ஆரின் நேர்மையீனம் பற்றி ஏற்கெனவே அனுபவத்தில் அறிந்திருந்தபோதும், மீண்டும் அது கண்முன்னால் நடப்பதைத் தெரிந்துகொண்டும், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய சூழல் அமிர்தலிங்கத்துக்குச் சிக்கலாகவே இருந்தது.
அனெக்ஷர் ‘சி’ விவகாரம், ஜே.ஆரிடம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான நல்லெண்ணம் இருக்கவில்லை என்பதையே காட்டியிருந்தது.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் இதையே அமிர்தலிங்கத்திடம் வலியுறுத்திக் கூறியிருந்தன. இந்தநிலையில் இந்தியாவின் செல்வாக்கும் அழுத்தமும்தான் அமிர்தலிங்கம் கொண்டுள்ள ஒரே பெரும் நம்பிக்கையாக இருந்தது.
அனெக்ஷர் ‘சி’யோடு இந்தப் பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணியபோது, அனெக்ஷர் ‘சி’ வேறொரு பிரச்சினையை உருவாக்கியது.
( அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago