2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் சித்தாந்தங்களை முறியடித்த மனிதம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது இன்னமும் கடினமாக இருக்கிறது. பொலிஸார் கூறுவதுதான் உண்மையா, அல்லது தமிழ் ஊடகங்கள் கூற விரும்புவதுதான் உண்மையா? அல்லது சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேக நபர் கூறுவது தான் உண்மையா என்பது நாளடைவில்தான் தெரிய வரும்.  

உண்மை எதுவாக இருப்பினும் அதையும் அரசியலாக்கி, ஆதாயம் பெற, வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள் முயற்சிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.   

எனவே, அரசியல்வாதிகள் சம்பவத்தைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களின் பிரகாரம் வியாக்கியானம் செய்ய முயற்சி செய்வதையும் அவதானிக்க முடிகிறது.  

இதன் காரணமாகத் தெற்கிலும் வடக்கிலும் உள்ள அரசியல்வாதிகள், ஒன்றிணைந்த எதிரணியினர் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இச்சம்பவம் தொடர்பாக அளித்த விளக்கத்தை எதிர்த்து, அவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவதையும் அவதானிக்க முடிகிறது.   

அவர்களது நோக்கத்துக்கு மாறாக இருந்தாலும் நீதிபதி இளஞ்செழியனும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் விளக்கம் பொறுப்பற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இச்சம்பவமானது, நீதிபதிக்கு எதிரானதோ அல்லது முன் கூட்டியே திட்டமிடப்பட்டதோ அல்லவென்றும் இது குடிபோதையில் ஒருவர் செய்த குழப்பச் செயல் என்ற கருத்துப்படவுமே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிட்டு இருக்கிறார்.   

இதைப் பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் அரசமைப்புத்துறை அமைச்சரும் தற்போது ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற கட்சியின் தலைவருமாக இருக்கும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், “பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அரசாங்கத்திலுள்ள தமது எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.   

ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷ அணியில் முக்கியஸ்தராகவிருக்கும் பீரிஸூக்கு, இச்சம்பவத்தை, தமிழீழ விடுதலை புலிகளோடு தொடர்புபடுத்திக் காட்டும் தேவை இருக்கிறது. அதன் மூலம், புலி மீண்டும் வருகிறது என்ற அச்சத்தை, சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி, அதன் மூலம் தமிழ் எதிர்ப்பையும் தூண்டி, அரசியல் இலாபம் அடைவதே அவரது நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவானதாகும்.   

இது, அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்லாது, பொதுவாக மஹிந்த அணியின் கருத்தாகவும் இருக்கிறது. 

2003 ஆம் ஆண்டு, புலிகள் சமர்ப்பித்த, வடக்கு, கிழக்கு பகுதி மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான வரைவுத் திட்டமான ‘இடைக்கால சுயாட்சி அதிகார சபை’ (Interim Self Governing Authority- ISGA) என்ற திட்டத்தின் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, பீரிஸ் அப்போது தயாராக இருந்தார் என்பது, இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அப்போதைய அரசாங்கம், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பீரிஸின் தலைமையில் குழுவொன்றை அமைத்து இருந்தது. அன்று புலிகளின் அந்தத் திட்டத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் சிறு விடயமாக எடுத்துக் காட்டிய பீரிஸ், இன்று, என்ன நடந்தது என்று இன்னமும் தெளிவில்லாத ஒரு சம்பவத்தைப் பாவித்து, இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தூண்ட முயற்சிக்கிறார்.  

அதேவேளை, இது ஒரு திட்டமிடப்பட்ட செயலல்ல என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியமை, அவசரப்பட்டுத் தெரிவித்த கருத்தாகும் என, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார். உண்மைதான்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சம்பவத்தைப் பற்றிய விசாரணையின் ஆரம்பத்திலேயே, இது திட்டமிடப்பட்ட சம்பவமல்ல எனக் கூறியிருந்தார். அந்த வகையில் அது அவசரப்பட்டுத் தெரிவித்த கருத்தாகும்.   

ஆனால், இது திட்டமிடப்பட்ட செயல் எனக் கூறுவோரும், அவ்வாறே அவசரப்பட்டுத்தான் கருத்து வெளியிடுகிறார்கள்.சந்தேக நபர் கைது செய்யப்படும் வரை, இது நீதிபதி மீதான தாக்குதல் எனக் கூறி, நாளொன்றுக்குப் பத்து பதினைந்து செய்திகளை வெளியிட்டு வந்த ஊடகங்களும் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியோரும் சந்தேக நபர் சரணடைந்து, தாம் குடிபோதையில், தமது மைத்துநர் விட்ட சவாலொன்றுக்காக, இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறியபின், எதுவுமே நடக்காததைப் போல் அனைத்தையும் மறந்துவிட்டனர்.  

இச்சம்பவத்தைப் பல்வேறு தரப்பினரும் பலவேறு விதமாக விவரித்துள்ளனர். நீதிபதியின் வாகனம், சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வரும்போது, அங்கு சண்டையொன்றின் காரணமாக, சன நெரிசல் காணப்பட்டதாவும் எனவே, நீதிபதியின் மெய்ப் பாதுகாவலர் சரத் ஹேமசந்திர, மக்களை வீதியிலிருந்து அகற்ற மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வரவே, சந்தேக நபர் அவரது கைத்துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டதாகவே, பொலிஸார் உள்ளிட்ட பலர் கூறுகின்றனர்.  

ஆனால், படித்தவரும் குற்றச் செயல்கள் தொடர்பாகச் சாட்சியமளிப்பது எவ்வாறு என்பதை நன்றாக அறிந்திருக்கும் நீதிபதி, ஊடகங்களுக்குத் தெரிவித்த விளக்கம் சற்று வித்தியாசமாக இருந்தது.   

சந்தேக நபர், யாழ்ப்பாணப் பொலிஸில் சரணடைந்தபின், பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம், பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் விளக்கத்தை ஒத்து இருந்தது.   

அதாவது, இது திட்டமிடப்பட்ட செயலல்ல என்றும் தற்செயலானது என்றுமே அவர் கூறியிருக்கிறார். தாம் அந்த இடத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் அப்போது, தமது மைத்துநர் அங்கு வந்த பொலிஸ் அதிகாரியைக் காட்டி, அந்தப் பொலிஸ்காரனை உன்னால் சுட முடியுமா எனச் சவால் விட்டதாகவும் அதன்படி, குடிபோதையில், தாம் பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியை கையில் எடுத்தவுடன், அது வெடித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.   

 பின்னர் நீதிபதியின் மற்றைய மெய்ப்பாதுகாவலர் தம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே, தாமும் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியதாகவும் சந்தேக நபர் மேலும் கூறியிருக்கிறார்.   

அதையடுத்தும் நீதிபதி மீதான தாக்குதல் என்றே அந்தச் சம்பவத்தை வர்ணித்த தமிழ் ஊடகங்கள், ஓரிரு நாளில் அந்த விடயத்தையே கைவிட்டுவிட்டன. அதுவரை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தத் ‘தாக்குதலுக்கு’ எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தவர்களும் திடீரென போராடங்களைக் கைவிட்டு விட்டனர்.   

அதேபோல், மஹிந்தா அணியினரும் ‘புலி வருகிறது’ என்ற தமது கோஷத்தை ஏறத்தாள நிறுத்திக் கொண்டுள்ளனர். அதாவது, அனைவரும் இது தற்செயலான சம்பவம் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் போலும்.  

ஆயினும், இதற்கு முன்னரும், வடக்கில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போது, அவற்றைப் பாவித்து புலிப் பீதியைத் தூண்டி, அரசியல் இலாபம் தேட, மஹிந்த அணியினர் முயற்சித்தமை, வாசகர்களுக்கு நினைவிருக்கும்.   

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து, தற்கொலை அங்கியொன்று கைப்பற்றப்பட்டது. வீட்டில் தங்கியிருந்தவரின் மனைவியே அதைப் பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, அவ்வீட்டில் தங்கியிருந்த புலிகளின் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அந்தனி படைப் பிரிவின் முன்னாள் தளபதி நகுலன் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.  

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், புலிகள் புத்துயிரூட்டப்பட்டுள்ளதாகக் கூற, மஹிந்த அணியினர், இச்சம்பவத்தைப் பாவித்தனர். இச்சம்பவத்தைப் பற்றிய விசாரணையின் விவரங்களும் அதன் பின்னர் வெளிவரவில்லை; புலிக் கதையும் மறைந்துவிட்டது.   

ஆனால், மீண்டும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், அடையாளம் தெரியாதவர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகினர். 

மீண்டும் மஹிந்த அணியினர் ‘புலி வருகிறது’ எனக் கூச்சலிட ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களில் அவர்களே அதை மறந்துவிட்டனர். இவ்வாறுதான், நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய அவர்களது விழிப்புணர்வும் தேசப்பற்றும் இருக்கிறது.  

இவ்வாரம், மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதுவும் அவர்களுக்கு ஓரிரு நாட்களுக்குத் தீனி போடும்.   
அரசியல்வாதிகள் இவ்வாறான சம்பவங்களால் அரசியல் இலாபம் தேடும்போது, நீதிபதி இளஞ்செழியன், இனத்துவ அரசியலினால் மறைக்கப்பட்டுள்ள மனிதம் பற்றிய உயர் பாடமொன்றை வடக்கிலும் தெற்கிலும் சாதாரண மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.  

17 ஆண்டுகளாகத் தமக்கு மெய்ப் பாதுகாவலராக இருந்த சிங்களவரான சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர, தமக்குப் பாதுகாப்பு வழங்கும் போதே, கொல்லப்பட்டதைக் கண்ட அவர், நெகிழ்ந்து போனார். ஹேமசந்திரவின் மனைவி, மரண விசாரணைக்காக வந்த போது, அவர் தாம் நீதிபதி என்பதையும் பொருட்படுத்தாது, அப்பெண்ணின் முன் மண்டியிட்டு, சிரம் தாழ்த்தி, கதறி அழுதார்.  

பூதவுடல் ஹேமசந்திரவின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், அவர் பொலிஸ் அதிகாரியின் இரு பிள்ளைகளைக் கட்டித் தழுவி அழுதார். இறுதிக் கிரியைகளின் போதும் அப்பிள்ளைகளைத் தாம் தத்தெடுப்பதாகக் கூறினார்.  

அவர் ஹேமசந்திரவின் மனைவி முன் கதறி அழுத காட்சி, பலரை மாற்றிவிட்டதுபோலும்; முதன் முறையாக ஒரு பொலிஸ்காரருக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் விளக்கேற்றப்பட்டு, அஞ்சலிசெலுத்தப்பட்டமை இதற்கு உதாரணமாகும்.  

சிங்கள மெய்ப் பாதுகாவலர் ஒருவருக்காக, தமிழர் ஒருவர், இவ்வளவு உருக்கமான முறையில் நன்றிக்கடன் செலுத்தும் மற்றொரு சம்பவம், இதற்கு ஏழாண்டுகளுக்கு முன்னரும் நடந்தது. அந்த உணர்வுபூர்வமான நன்றிக் கடனைச் செலுத்தியவர் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசியாவார்.  

1976 ஆம் ஆண்டு, தனித் தமிழ் நாட்டுக்கான வட்டுக்கோட்டைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, சுமார் ஒரு வருடத்தில் அப்பிரேரணையை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ‘தந்தை செல்வா’ எனப் பொதுவாகத் தமிழர்கள் அனைவராலும் அன்பாய் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலமானார். அதையடுத்து, அக்கட்சியின் தலைவராக அ. அமிர்தலிங்கமே நியமிக்கப்பட்டார்.   

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்ற நிலையில், 22 ஆசனங்களைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், எதிர்க் கட்சித் தலைவரானார்.   

அவர், அந்தப் பதவியையும் தமிழ் ஈழ பிரசாரத்தைச் சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்ல உபயோகித்தார். அக்காலத்தில் மங்கையர்க்கரசி தமிழீழ பிரசார மேடைகளில் முக்கிய பேச்சாளராக இருந்தார்.   
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தச் செயற்பாடுகள் மூலமாக வடக்கில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உத்வேகமே, பின்னர் அக்கூட்டணியினாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, அந்த இளைஞர்கள் தள்ளப்பட்டு தமிழீழத்துக்கான ஆயுதப் போராக வெடித்தது.   

பிரிவினைக்கு எதிராகச் சத்தியப் பிரமாணம் செய்ய மாட்டோம் எனத் தமது நாடாளுமன்ற ஆசனங்களைத் துறந்து, 1983 ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்குச் சென்ற அமிர்தலிங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள், 1989 ஆம் ஆண்டு மீண்டும் நாடு திரும்பிய போது, அவர்கள் ஆரம்பித்த போராட்டத்தை ஆயுதங்களுடன் முன்னெடுத்துச் சென்ற புலிகளால், அவர்கள் துரோகிகளாகவே மதிக்கப்பட்டனர்.  

போதாக் குறைக்கு அவர்கள்தாம் நிராகரித்த அச்சத்தியப் பிரமானத்தோடே, மீண்டும் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அதேஆண்டு, ஜூலை 13 ஆம் திகதி அ. அமிர்தலிங்கம், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
வி. யோகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் 
எம். சிவசிதம்பரம் ஆகியோர் கொழும்பில் வைத்துப் புலிகளால் சுடப்பட்டனர். அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சிவசிதம்பரம் படுகாயமடைந்தார்.  

பேச்சுவார்த்தைக்கென கொழும்பு, புல்லர்ஸ் வீதியில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களின் விடுதிக்கு வந்த மூன்று புலி உறுப்பினர்கள், அவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த போது, அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலர் டி.எ. நிஸ்ஸங்க, அவர்களை எதிர்த்து போராடினார்.   

நிஸங்க, தமது உயிரைப் பற்றியோ, புலிகள், பின்னர் தம்மையும் தமது குடும்பத்தையும் பழிவாங்கக் கூடும் என்பதைப் பற்றியோ, சிந்திக்காமல் தம்மிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளாலும் சுட்டு, மூன்று புலி உறுப்பினர்களையும் கொன்றார்.  

புலிகளைச் சுட்டவர் யார் என்பது இரகசியமாகவே இருந்தது. 21 ஆண்டுகளுக்குப் பின்னர், போர் முடிவடைந்ததன் பின்னர், 2010 ஆம் ஆண்டு, திருமதி அமிர்தலிங்கம் தமது மகன் டொக்டர் பகீரதன் அமிர்தலிங்கத்துடன் கொழும்புக்கு வந்தார்.    அங்கிருந்து கேகாலை, அம்பன்பிட்டியிலுள்ள நிஸ்ஸங்கவின் வீட்டைத் தேடிச் சென்றனர். 

நிஸ்ஸங்கவை சந்தித்தவுடன், ஒரு பிள்ளையைக் கட்டித் தழுவுவதைப்போல், அவரைக் கட்டித் தழுவிய திருமதி அமிர்தலிங்கம், கதறி அழுததாக அந்நாட்களில் சகல பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியிருந்தது. 

எந்தப் பொலிஸ்காரர்களைக் கூட்டணித் தலைவர்கள், எமன்களாகச் சித்தரித்தார்களோ அவர்களில் ஒருவரை, அத்தலைவர்களில் ஒருவரே, இவ்வாறு தேடிச் சென்று, கட்டித் தழுவிக் கதறி அழுவதுதான் இங்குள்ள சிறப்பம்சம். 

அரசியல் சித்தாந்தங்களால் குறிப்பாக, இனத்துவ அரசியல் சித்தாந்தங்களால் இதுபோன்ற சம்பவங்களை விவரிப்பது கடினம். ஏனெனில், இங்கு மனிதம் சித்தாந்தங்களை முறியடித்துள்ளது.

சுனாமியின் போதும் இதை வடக்கு, கிழக்கு மக்கள் கண்டார்கள். ஒரு சாராரை ஒரு சாரார் கொன்று குவிக்கக் காத்திருந்த அரசாங்கப் படைகளும் புலிகளும் ஒருவருக்கொருவர் அப்போது உதவிக் கொண்டனர். 

புலிகள் ஆழிப் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டபோது, படையினரும் படையினர் அடித்துச் செல்லப்பட்டபோது, புலிகளும் ஒருவரை ஒருவர் காப்பாற்றினர்.   

கலாநிதி அண்டன் பாலசிங்கமும் பின்னர் ஒரு நாள் இதைச் சுட்டிக் காட்டி, “சிந்திக்க வேண்டும்” என்றார். 

எவ்வளவு சிந்தித்தாலும் அரசியல் சித்தாந்தங்களால் அவற்றை விவரிக்க முடியாது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X