2025 ஜூலை 19, சனிக்கிழமை

அரசியல் புலமையாளர்களுடன் அகதியின் புலம்பல்

காரை துர்க்கா   / 2018 ஜனவரி 16 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்துள்ள புது வருடம், வழமை போன்றே சாந்தி, சமாதானம், நல்வாழ்வை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே நாட்களை நகர்த்துகின்றோம்.   

எதிர்வரும் பெப்ரவரி பத்தாம் திகதி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன், நீங்களும் பத்தாகச் சிதறிவிட்டீர்கள். நீங்கள் பலதிக்காகவும் சில்லறைத்தனமாகவும் சிதறுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, தமிழர்கள் மத்தியில் முன்னரே நிலவியது. ‘இந்தச் சிதறல்கள் எல்லாம் மக்களுக்காகவே’ என மட்டும் தயவு கூர்ந்து கூறவேண்டாம்.  

தன்னலம் பொருட்படுத்தாது, மக்களுக்காகவே முழுமையாகத் தன்னை அர்ப்பணிப்பவரே, ஆற்றல் உள்ள அரசியல்வாதிகள் ஆவர். தியாகம், அர்ப்பணிப்பு, சீரானதூரநோக்குச் சிந்தனை, ஒழுக்கம், பட்டறிவு, பகுத்தறிவு எனப் பல தனிச் சிறப்புகளை உடையவர்களே, மக்கள் பணியில் உயர்ந்து நிற்பார்கள்.    

ஆனால், இவ்வாறான ஜனநாயகப் பண்புகளுடன் ஒரு சிலரே பணியாற்றுகின்றனர். இவ்வாறான கொள்கைப் பிடிப்புடன், மிகச் சிலரே மக்களை நேசிக்கின்றனர்.  

தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், பிரதான கட்சிகளோ அல்லது சுயேட்சைக் குழுக்களோ தமது கொள்கைத் திட்டங்களையோ அல்லது செயற்பாட்டு முன்மொழிவுகளையோ இதுவரை தெளிவாகக் தெரிவித்ததாகத் தெரியவில்லை.    

ஆனால், மறுவளமாக, எப்படிக் கதிரையைப் பிடிக்கலாம் என்றே, பலர் சதா சிந்தித்த வண்ணம் உள்ளனர். 

யாருடன் கூட்டுச் சேரலாம்; யாருடன் கூட்டுச் சேரக் கூடாது; யாரது கூட்டை உடைக்கலாம்; கூட்டுச் சேர்வதால் யாருக்கு இலாபம்; கூட்டை உடைப்பதால் யாருக்கு இலாபம் என்றவாறாக, அருவெறுப்பான அரசியல் களம் உள்ளது.  

இதன் மூலம், தங்களது தொடர்ச்சியான அரசியல் இருப்புக்கான ஆதாயம் தேடுவதற்கான, இலாப நட்டக் கணக்கிலேயே இரவு பகல் எனக் காலத்தை ஓட்டுகின்றனர்.   

ஒரு கட்சியில், வேட்பாளருக்கான சந்தர்ப்பம் கிடைக்காதவிடத்து மறு கட்சியிடம் ஓடுகின்றனர். அதிலும், இடம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் மூன்றாவது கட்சியிடம் சரணடைகின்றனர். இங்கு கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்? கடும் காற்றில் பஞ்சு பறப்பது போன்றதே.  

அதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செல்ல வேண்டிய ஒருவர், தனியார் பஸ்ஸைத் தவற விட்டால், அரசாங்க பஸ்ஸில் பயனிப்பது போலவே நடப்புக்கள் நடந்தேறுகின்றன. அதாவது, செல்ல வேண்டிய இடம் வவுனியா. அதுபோலவே, கைப்பற்ற நினைப்பது தனக்கான ஆசனம். உண்மையான கண்ணியம் என்பது, முதலில் தன்னைப் பற்றித் தான் அறிந்து கொள்வது ஆகும்.   

சாதாரணமாக ஒருவர், ஒரு துறையில் களம் இறங்குது எனத் தீர்மானித்தால், அது சார்ந்த பாண்டித்தியம் அவசியம் தேவையானது. அப்படியிருந்தாலேயே அத்துறையில் அவர்(ள்) பிரகாசிக்கலாம்.   

ஆனால், தற்போதைய தமிழர் அரசியல் களத்தில், உள்ளே நுழைய வேண்டியவர்கள் வெளியில் இருக்க, வெளியில் இருக்க வேண்டியவர்கள் உள்ளே இருப்பதால், தமிழ் மக்களுக்கு உள்ளும் புறமுமாக ஆயிரமாயிரம் பிரச்சினைகள்.  

உதாரணமாக, தற்போதைய வட்டாரத் தேர்தல் முறை தொடர்பில், கணிசமான மக்களுக்குப் பூரண விளக்கமின்மை காணப்படுகின்றது. ஆனால், கவலையான விடயம் என்னவென்றால், சில வேட்பாளர்களுக்கு மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் விளக்கம் அளிப்பதற்கு ஏற்ற விடயஞானம் இல்லாமல் இருப்பதாகும்.   

தமிழ்க் கட்சிகளும் இன்று, பலவாறாக உருக்குலைந்து, உடைந்து இல்லாமல் போய் விட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பிற்பட்ட அண்மைக் காலத்தில், பலவித அரசியல் கூட்டுகள் தோற்றம் பெற்றன. அவற்றின் பெயர்கள் எதுவெனக் கூடக் கண்டறிய முடியாமல், சாதாரண பொது மக்கள், பெரும் குழப்பத்தில் உள்ளனர்.   
அரசியல் வேண்டப்படாதது;  அரசியல்வாதிகள் வேண்டப்படாதவர்கள் என மனதில் எண்ணப்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு விட்டன. பொதுவாகத் தமிழ் மக்களுக்கு, அரசியல் என்பது வேப்பங்காயாக கசக்க ஆரம்பித்து விட்டது.   

அரசியல் என்றால் பெரும் ஆபத்து மிக்கது; குறுக்கு வழியில் செல்லும் பாதைகள் மற்றும் நெழிவு சுழிகள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். கழுத்தறுப்புகள் குழிபறிப்புகள் பற்றிய பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பொய் சுத்துமாத்துக் கதைகள் கதைக்க வேண்டும். வெட்டி ஓடுதல், வெறித்தனமாக ஓடுதல் எனப் பல ஓட்டங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.   

மொத்தத்தில் கண்ணியமான கனவான் அரசியல் நடாத்த முடியாது என கனவான்கள் ஒருமித்து ஒழித்து, ஒதுங்கி விடுகின்றனர். இதனால், ஒதுங்க வேண்டியவர்கள், வெளி அரங்குக்கு வருகின்றனர்.   

தூக்க கலக்க நிலையில் உள்ள சாரதியிடம் பயணிகளுடன் பஸ்ஸை ஒப்படைத்து ஓட்டுமாறு கொடுத்த மாதிரியான விளைவு ஏற்படுகின்றது. இவ்வாறாகப் பொறுப்பேற்ற சாரதிகளும், தம்மைத் தாமே புலமைமிக்கவர்கள், வல்லவர்கள்,  வினைத்திறன் வாய்ந்தவர்கள் என நினைத்து ஆசனத்தில் (?) உட்காருகின்றனர்.   

ஆகவே, விபத்துகளும் அழிவுகளும் மட்டுமே விளைவுகள். இவ்வாறானவர்களே தொடரும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சாரதிகளாகப் பணியாற்றப் போகின்றார்கள்.   

உண்மையில், தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம், நமது பிரதேசங்களில் ஒவ்வொரு துறையிலும் அத்துறை சார்ந்த வல்லுநர்களின் பற்றாக்குறை என்பது, தீ என எரியும் பிரச்சினை எனலாம். 

இவைகள் பற்றிய பற்றாக்குறைகள் எமக்கு எற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாகப் பலரும் பதறுகின்றார்கள். வேகமாகத் தீர்வுகள் நடவடிக்கைகள் எடுக்கும்படி துடிக்கின்றனர்.   

ஆனால், தமிழர் அரசியல் களத்தில் பாரிய பற்றாக்குறையாகவுள்ள அரசியல் இராஜதந்திரிகளது, அரசியல் அறிஞர்களது, அரசியல் மதியுரைஞர்களது வெற்றிடங்கள் தொடர்பில் யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. ஏதோ சம்பந்தமில்லாத சம்பவமாக, இலகுவாகக் கடந்து செல்கின்றார்கள்.  

மறுவளமாக உண்மையில், அரசியலே எம்மை ஆள்கின்றது; அதுவே எம்மை ஆளப் போகின்றது. அது மட்டுமல்ல, எமது பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம், சமூகக் கட்டுமானங்கள் என மொத்தத்தில் வளமான வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றது;ஆட்சி செய்யப் போகின்றது.  

இவ்வாறாக எல்லாம் வல்ல வல்லமை பொருந்திய அரசியலை, மூச்சாகவும் வீச்சாகவும் பேச்சாகவும் முன்கொண்டு செல்ல, முற்போக்கான தூரநோக்குள்ள ஞானம் உடைய, புலமையாளர்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றனர்.   

இதேபோலவே, அரசியலில் விருப்பம் அற்று, வெறுப்புக் கொண்டு சில மக்களும் வாக்களிப்பதில்லை என ஒதுங்கிக் கொள்கின்றனர்.  

சில தினங்களுக்க முன்னர், நேர்மையான சமூக சேவை சிந்தனையுடைய ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் அரச சேவையில் பணியாற்றியபோது, அரசியலை அலாதியாக விரும்புவார்.   

அதில், அவர் அதிக ஈடுபாடும் கொண்டவர். பத்திரிகை படிப்பதில் குறிப்பாக, அரசியல் பத்திகளை வாசிப்பதில் நீண்ட நேரத்தைச் செலவிடும் ஒருவர். ஓய்வுக்குப் பின்னர் அரசியல்வாதியாக சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடன், காலத்தைக் கடத்தியவர்.   

அவரைக் கண்டவுடன், “தற்போது உள்ளூராட்சித் தேர்தலில், எந்தக் கட்சியில் போட்டியிடுகின்றீர்கள்” என ஆர்வத்துடன் கேட்டேன். 

அவர் சொன்ன பதில், “எப்போது தேர்தல்; எந்தத் தேர்தல்; ஏன் தேர்தல்” என கேள்விகள் கேட்டு, மேலும் தொடர்ந்தார். “தற்போது பத்திரிகை வாசிப்பதில்லை. அரசியல் அசிங்கம்; எல்லாம் வெறுத்துப் போச்சுது. ஒட்டுமொத்தத்தில் பலர் விழுந்த சாக்கடையில் நான் விழ விரும்பவில்லை; தயார் இல்லை” என்றார்.  

இவ்வாறான நேர்மையாகச் சேவையாற்றும் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மக்கள் இழந்து விட்டனரே, என எனக்குள் ஆழ்ந்த கவலை. ஆனால், அவர் சொன்னது போல, அவரும் பாவம் தானே; அதுவும் அழுகிய சாக்கடை தானே என, என் மனதைத் தேற்றிக் கொண்டேன்.  

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட நீண்ட காலமாக, அரசியல் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான அறுவடையை அளிக்கவில்லை.   

ஞானம் விவேகமற்ற தமிழ் அரசியல்வாதிகளின் கைக்குள் அகப்பட்டு, தமிழ் மக்களது வாழ்வு பரிதாபகரமான நிலையில் உள்ளது.   

கடந்த வாரம் எனது நண்பர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. மதிய உணவுக்குப் பின்னர், அவரது வீட்டு முற்றத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கதிரைகளை, ஆண்கள் சிலர் நிரப்பியிருந்தனர். இளைஞர்கள் தொடக்கம் முதியோர்கள் வரை சபையை அலங்கரித்தனர்.   

விரும்பியோ விரும்பாமலோ, அரசியல் அதற்குள் எம்மை அறியாமலே அரங்கேறிக் கொண்டது; தொற்றிக் கொண்டது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான கதைகள் அலசப்பட்டன.  

ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். சிறி லங்கா ஆட்சியாளர்கள், புலிகள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக பலமாக இருந்த படியாலேயே பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள்; சற்றும் விருப்பின்றி சம தரப்பாக ஏற்றுக் கொண்டார்கள். அப்படியிருந்த போதும் தமிழ் மக்களது உரிமைகளை வழங்க மறுத்து விட்டார்கள்.   

ஆனால், இப்போது வீடு, சைக்கிள், உதயசூரியன் மற்றும் பல சுயேச்சைக் குழுக்கள் எனப் பலவாறாக எங்களுக்குள் பிரிந்துதான், எங்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரப்போகின்றார்களாம் என்றார் அதற்குள் ஒரு பெரியவர். மிகவும் அமைதியாக.   

அனைவரும் அது சரி எனத் தலை அசைத்தோம். அதற்குப் பிறகு விடயத் தலைப்பை மாற்றினோம்; வேறு வழியின்றி.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X