Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மே 23 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத் தேர்தல் வரலாற்றில் மூன்றாவது முறையாக, ஆட்சியிலிருந்த கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. 2011இல் ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மீண்டும் இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பெற்ற இந்த வெற்றியை, அ.தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். ஆறாவது முறையாக, தமிழக முதல்வராகிறார் ஜெயலலிதா. தனித்துப் போட்டியிட்டு, 40.80 சதவீத வாக்குகளையும் 134 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர், இன்று (23ஆம் திகதியன்று), முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.
ஆட்சியிலிருந்த கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இதற்கு முன்னர் இருமுறை நடைபெற்றிருக்கிறது. முதலில், 1950-60களில், அடுத்தடுத்து இருமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. அடுத்து, 1970-80களில், எம்.ஜி.ஆர் தலைமை தாங்கிய அ.தி.மு.க, மூன்றுமுறை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று முறை, தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. 'தி.மு.கவுக்கு 13 ஆண்டுகாலம் வனவாசம்' என்றெல்லாம் அப்போது தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க அவ்வாறு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
ஆறு கூட்டணிகள் களத்தில் நின்றன. ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோரே அந்த ஐவர். இந்தத் தேர்தலில் பிரசார யுத்தம், தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் மட்டும் நடைபெற்றது. அதனால் அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான வாக்குகள் தி.மு.கவுக்குப் பெருமளவில் போனாலும், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள வாக்குகள் அ.தி.மு.கவுக்குப் போய் விட்டன.
தேர்தல் களத்தில் 8 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, தனது வாக்கு வங்கியை ஒட்டு மொத்தமாக அ.தி.மு.கவிடம் இழந்திருக்கிறது. அக்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நின்ற விஜயகாந்த், தனது கட்டுப் பணத்தை இழந்திருப்பது, அக்கட்சிக்குப் பெருத்த சோதனையாக அமைந்து விட்டது. இதனால் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தே.மு.தி.க அடங்கிய அணிக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடைசிவரைக்கும் அவர்கள் இணைந்தது 'மக்கள் நலக் கூட்டணியா' அல்லது 'விஜயகாந்த் கூட்டணியா' என்பது, தெளிவாகாமல் போனது.
1991இல், பாட்டாளி மக்கள் கட்சி பெற்ற வாக்கு வங்கி, 5.89 சதவீதம். இப்போது, 5.3 சதவீதம். இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டுத் தோற்ற முன்னாள் அமைச்சர் பன்ருட்டி ராமச்சந்திரன்தான், 1991இல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் சென்றவர். இம்முறை, தான் எம்.பியாக உள்ள தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியால் வெற்றி பெற முடியவில்லை. முதல்வர் வேட்பாளரான அவர் வெல்ல முடியாமல் போனமை, அக்கட்சிக்கு எதிர்காலத் தலைவலி.
பாரதிய ஜனதா கட்சிக்கு 'அ.தி.மு.க' மீது கோபமா, பாசமா என்பது, கடைசி வரை மக்களுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. சில மத்திய அமைச்சர்கள், அ.தி.மு.க மீது கோபமாகப் பேசினர். வேறு பல மத்திய அமைச்சர்கள் பாசமாகப் பேசினர். பிரசாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியோ, பட்டும் படாமலும் அ.தி.மு.கவை விமர்சித்து விட்டு விடைபெற்றார். இதனால் தமிழகத்தில், பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தவர்கள் கூட, அ.தி.மு.கவுக்கே வாக்களித்தனர். இதனால், மத்திய அமைச்சர்கள் படையெடுத்தும் தேசிய கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு, தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.கவால், ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. 'மாநில அரசியலா' அல்லது 'மத்தியில் ஆட்சிக்கு ஆதரவு தரும் அ.தி.மு.கவா' என்ற கேள்விக்கு, 'மாநில அரசியல்' பற்றி இப்போது கவலைப்படவில்லை என்ற முடிவை பா.ஜ.க எடுத்து விட்டதாகத் தெரிகிறது. அதன் விளைவு பிரதமர் மோடி தலைமையில் வலுவாக உள்ள பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அவருடைய 'தீவிர அரசியலுக்கு' தமிழக மக்கள் செவி சாய்க்கவில்லை.
தி.மு.கவைப் பொறுத்தமட்டில், கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்த 55 தொகுதிகளில் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் 8 எம்.எல்.ஏக்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 எம்.எல்.ஏ. தி.மு.க, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 179 தொகுதிகளில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு 39.70 சதவீத வாக்கு கிடைத்திருக்கின்றன. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி இரண்டுமே ஒரு எம்.எல்.ஏ கூடப் பெறவில்லை.
தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம், அதற்கு முன்பு அவர் நடத்திய 'நமக்கு நாமே' பயணம் தி.மு.கவுக்குக் கை கொடுத்துள்ளது. சென்ற தேர்தலில், 23 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தி.மு.க, இம்முறை 89 எம்.எல்.ஏ-க்களாக எண்ணிக்கையில் உயர்ந்திருக்கிறது. சில தொகுதிகளில் நிறுத்தப்பட்ட செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது, தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிரசாரத்தில் ஏர்செல் மேக்ஸி ஊழலில் சிக்கிய தயாநிதி மாறன் கூடவே பயணித்தமை, 92 வயது முதல்வர் வேட்பாளராக கருணாநிதியை முன்னிறுத்தியது எல்லாமே தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
அக்கட்சிக்குள் அ.தி.மு.கவில் உள்ளது போன்ற 'மிலிட்டெரி கட்டுப்பாடு' இல்லாததும் தேர்தல் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம். மக்கள் நலக்கூட்டணி சிதைந்த பின்னர், தி.மு.கவுக்கு வாக்களிக்கலாம் என்ற நினைத்த வாக்காளர்களுக்கு 92 வயதான கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற கேள்வி பிறந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜெயலலிதாவை முதல்வராகத் தெரிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்ததும் தி.மு.க தோல்விக்கு இன்னொரு காரணம்.
தி.மு.கவுக்கு ஒரேயொரு ஆறுதல் பரிசு. அ.தி.மு.கவை விட, அந்தக் கூட்டணி 1 சதவீத வாக்குகள்தான் குறைவு. அதே போல் அ.தி.மு.கவை விட, 441,000 லட்சம் வாக்குகள் மட்டுமே தி.மு.க குறைவாக பெற்றிருக்கிறது. 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.கவுக்கும், 98 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணிக்கும் இவ்வளவுதான் வாக்கு வித்தியாசம். தி.மு.க கூட்டணி பெற்ற வாக்குகள் 1 கோடியே 71 லட்சம்.
செம்பரம்பாக்கம் வெள்ளப் பிரச்சினை, எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஊழல் பிரச்சினை, செயல்படாத அரசாங்கம் என்று, அனைத்துக் கட்சிகளும் செய்த பிரசாரம் அனைத்தையும் முறியடித்து, அ.தி.மு.க 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது என்பதற்கு மிக முக்கிய காரணம் ஆறு முனைப் போட்டி. இதனால் தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமையவில்லை. தனியாகக் களம் கண்டு, 1 கோடியே 76 லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் யுக்தியில் தி.மு.கவை விட அ.தி.மு.கவுக்கே அனுபவம் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியிருக்கிறது.
'மாற்றம்' ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் முடிவு, தமிழகத்தில் இரு கட்சி அரசியலுக்கான மீண்டுமொரு தொடக்கமாக அமைந்து விட்டது. 'மாற்றம்' வேண்டும் என்று களத்துக்கு வந்தவர்கள், இனி எழுந்திருக்க முடியாத அளவுக்குத் தோல்வியைச் சந்தித்து விட்டார்கள். தமிழக அரசியல் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளுக்குள்தான் என்பதை தமிழக மக்கள் தெளிவாக்கி விட்டனர்.
2006ஆம் ஆண்டு, தமிழக சட்டமன்றத்தில், முதன் முதலாக அதிக எம்.எல்.ஏ.க்களுடன் (61 பேர்) எதிர்கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் சாதனையை தி.மு.க முறியடித்துள்ளது. 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சியாகியுள்ள தி.மு.க, தனிப் பெரும்பான்மையுடைய எதிர்க்கட்சி. போட்டியான, வலுவான எதிர்கட்சி என்ற வகையில் தமிழக சட்டமன்ற ஜனநாயகத்துக்குப் புதிய தொடக்கம் உருவாகியிருக்கிறது. இனி இரு திராவிட கட்சிகளும் எப்படி இங்கிருந்து நகர்ந்து செல்லப் போகின்றன, அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதை அடிப்படையாக வைத்து அடுத்த அரசியல் நிகழ்வுகள் அடங்கிய அத்தியாயம் தொடங்கும்.
ஆனால், 'குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்' என்று ஜெயலலிதாவும், 'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்' என்று ஸ்டாலினும் கூறியிருப்பதைப் பார்த்தால், மீண்டும் இரு திராவிட கட்சிகளின் யுத்தமே, தமிழக அரசியலில் முன்னணி வகிக்கும் என்றே தெரிகிறது. அகில இந்திய அளவில் 32 வருடங்களுக்கு பின்னர் வித்தியாசமான ஒரு தேர்தல் முடிவை தமிழக மக்கள் அளித்திருக்கிறார்கள். ஆனால், வாக்காளர்களுக்கு தாராளமாக நடைபெற்ற பண விநியோகத்தைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறி விட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago