Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 மே 07 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 142)
இந்திராவுக்கு ‘செக்’ வைத்த ஜே.ஆர்
இலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளித்துவருகிறது என்ற குற்றச்சாட்டை, ஜே.ஆர் அரசாங்கம் மிக நீண்டகாலமாக முன்வைத்து வந்தது.
இதை, இந்தியா ஆரம்பத்தில் வெளிப்படையாக மறுத்து வந்தாலும், பிற்காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காது மௌனம் காத்தது.
ஆயினும், பிரதமர் பிரேமதாஸ, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர், தொடர்ந்து பகிரங்கமாக, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக, இலங்கை வந்திருந்த வேர்னன் வோல்டர்ஸ், இலங்கை - அமெரிக்க, இலங்கை - இஸ்ரேல் உறவுகளைப் பலப்படுத்தும் கைங்கரியங்கள் சிலவற்றை முன்னெடுத்திருந்தார்.
இராணுவ, உளவு உதவிகள் அதில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வோல்டர்ஸின் இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவில் அமைந்திருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கான பயிற்சி முகாம்கள் பற்றிய செய்மதிப் பட ஆதாரங்கள் பற்றி, இலங்கைக்கு அறியத்தந்ததுடன், இந்தியாவுக்கு இதுபற்றித் தெரிவித்திருந்தார்.
இதைப் பற்றிக் குறிப்பிட்ட லலித் அத்துலத்முதலி, “இந்தியாவிலுள்ள முகாம்கள் பற்றி, தம்மிடம் தெளிவான செய்மதிப்பட ஆதாரங்கள் உள்ளதாக வோல்டேர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் டெல்லி சென்று, தம்மிடமுள்ள ஆதாரங்கள் பற்றிச் சொன்னதுடன், இனி முகாம்கள் இருப்பதை மறுப்பதை, டெல்லி நிறுத்துவது நல்லது என்று புரிய வைத்தார். அமெரிக்காவிடமுள்ள செய்மதிப் புகைப்படங்கள் வெளியிடப்படலாம். அதன் பின்னர் இந்தியா, முகாம்கள் இருப்பதை மறுதலிப்பதை நிறுத்திக் கொள்ளும்” என்றார்.
அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, முன்பை விட இந்திராவைப் பலமாக எதிர்கொண்டதற்கு, இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக அமைந்தன.
ஜே.ஆர், நேரடியாகவே முகாம்கள் பற்றி, இந்திராவிடம் குறிப்பிட்டார். உடனடியாக அதை மறுத்திருந்த இந்திரா, “அவை ஆயுதப் பயிற்சி முகாம்கள் அல்ல; மாறாக 30,000 க்கும் அதிகமாகத் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்க வைக்க அமைக்கப்பட்ட முகாம்கள்” என்று பதிலளித்தார்.
“இந்த முகாம்கள் பற்றி உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்” என்று சொன்ன ஜே.ஆர், தன்னிடமிருந்த ஆதாரங்களை, இந்திரா முன், எடுத்து வைத்தார். வரைபடங்கள் உள்ளிட்ட பலதகவல்கள் அடங்கிய அந்த ஆவணங்களில், முகாம்கள் அமைந்துள்ள இடங்கள், அவற்றின் பெயர்கள், அங்கு பயற்சிபெறும், அந்த முகாமைப் பயன்படுத்தும் ஆயுதக் குழுவின் பெயர், அங்கு பயிற்சி பெறும் நபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர், தராதரம் என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதிலுள்ள தகவல்கள், இந்திரா காந்திக்கு அதிர்ச்சியைத் தந்திருக்காது; ஆனால், எப்படி இந்தத் தகவல்கள், இலங்கைக்குக் கிடைத்தன என்பது, இந்திரா காந்தியை நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.
இந்திராகாந்திக்கு, கிட்டத்தட்ட இந்த ஆதாரங்களின் மூலம், ‘செக்’ வைத்ததாகத்தான் ஜே.ஆர் எண்ணியிருக்க வேண்டும். ஜே.ஆரோடு, டெல்லி சென்றிருந்த லலித் அத்துலத்முதலி, “பயங்கரவாதத்தை எவ்வளவுதூரம் நாம் இல்லாதொழிக்கிறோமோ, அவ்வளவுதூரம் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும்” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா அடைக்கலமும் பயிற்சியும் அளிப்பதென்பதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் முகாம்கள், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்தன என்பதும் பகிரங்கமான இரகசியமாகிவிட்டன.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆயுதக் குழுக்கள் பயங்கரவாதிகள்; ஆகவே இந்தியா, பயங்கரவாதத்தைப் போஷித்து, ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை இலங்கை முன்வைத்தது. இந்த அரசியல் காய்நகர்த்தல், ஜே.ஆர் அரசாங்கத்தின் ‘பயங்கரவாத ஒழிப்பு’ நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக அமைந்ததுடன், அரசியல் தீர்வொன்றுக்கான இந்திய அழுத்தத்தைச் சமன்செய்யத்தக்கதொரு வாய்ப்பாகவும் அமைந்தது.
இந்தியாவுக்கு இது பெரும் இராஜதந்திரச் சிக்கலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், 1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, சென்னை விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு, இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீனம்பாக்கம் விமானநிலையக் குண்டுவெடிப்பு
1984 ஓகஸ்ட் இரண்டாம் திகதி, இரவு 10.50 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்தில், குண்டொன்று வெடித்ததில் 30 பேர் பலியானதுடன், ஏறத்தாழ 25 பேரளவில் படுகாயமடைந்திருந்தனர்.
இந்தியாவின் முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையமொன்றில், இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பு, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தச் சம்பவத்தின் விசாரணையின் பின்னர், தெரியவந்த விடயங்கள், இந்தியாவுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்தன.
குறித்த தினம் இரவு 8.10 மணிக்கு, எயார் லங்கா விமானமொன்று, சென்னையிலிருந்து, கொழும்பு செல்லத் தயாராக இருந்தது. குறித்த விமானத்தில் பயணிக்க, கதிரேசன் என்றொரு நபர் விமானப் பயணச்சீட்டைக் கொள்வனவு செய்திருந்தார். விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரின் உதவியோடு, இரண்டு பயணப் பொதிகளை, ‘செக் இன்’ செய்திருந்தாலும், குறித்த பயணத்தில் அந்நபர் பயணிக்கவில்லை.
சில குழப்பங்களின் காரணமாக, இலங்கை செல்லவிருந்த விமானத்துக்குச் செல்ல வேண்டிய அந்தப் பொதிகள், இலண்டன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானப் பொதிகளோடு தொடுக்கப்பட்டுவிட்டன. ஆயினும், குறித்த பொதியின் மீது, அதன் அளவு காரணமாகச் சந்தேகம் கொண்ட சுங்கஅதிகாரிகள், குறித்த பொதியின் ஆய்வுக்காக, பொதிக்குரிய நபரை அழைத்திருந்தனர். பொதிகளுக்குரிய நபர், சுங்கப் பொதி ஆய்வுக்குச் சமுகம்தராததால், குறித்த பொதிகள் சுங்கத்துறையால் தடுத்துவைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், இலங்கை செல்லவிருந்த எயார் லங்கா விமானம், 8.15 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது.
குறித்த பொதிகள், திட்டமிட்டபடி கொழும்பு சென்ற விமானத்தில் செல்லாததை அறிந்துகொண்ட குறித்த நபர், விமானநிலையத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்று, வேறோர் இடத்திலிருந்து தொலைபேசி மூலம், விமானநிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குறித்த பொதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக அறிவித்திருந்தார்.
சுங்கத்திடமிருந்த குறித்த பொதிகளைச் சுவீகரிக்க, பொலிஸார் முயன்றபோது, முதலில் சுங்க அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். குறித்த நபர் அல்லது அவரின் சகாக்கள், மீண்டும் இருமுறை தொலைபேசி அழைப்பின் மூலம் எச்சரித்திருந்தனர்.
மூன்றாவது அழைப்பின் பின்னர்தான், சுங்க அதிகாரி, குறித்த பயணப் பொதியை பொலிஸாரிடம் கையளிக்கச் சம்மதித்திருந்தார். ஆனால், இதற்கிடையில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலான நேரம் கழிந்திருந்தது. ஏறத்தாழ 10.50 அளவில், குறித்த பொதிகளிலிருந்த குண்டுகள் வெடித்து, 30 பேரைப் பலிகொண்டன.
இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்குச் சென்னை விமானநிலையம் முற்றாக மூடப்பட்டதுடன், மறுநாள், மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர், சென்னை விரைந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க, சிவில் விமானத்துறை இயக்குநர் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவொன்றையும் அமைத்தார்.
மறுபுறத்தில், தமிழ்நாடு அரசாங்கம், தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநர் மோகன்தாஸ் தலைமையில், ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.
பின்னணியில் யார்?
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்த தமிழக முதலமைச்சர்
எம்.ஜி. இராமச்சந்திரன், இதைக் “கொடியவர்களின் செயல்” என்றார்.
இந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் வெங்கடராமன், “நாம் இந்த விடயத்தில் திறந்த மனதோடு உள்ளோம்” என்றார். அதாவது, எந்த முன்முடிவுகளோடும் தமிழக அரசு இதை அணுகவில்லை என்பதே, தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இந்தச் சம்பவம் தொடர்பிலான தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.
நடந்த சம்பவத்தின் சிக்கல் தன்மையை உணர்ந்துகொண்ட, தமிழகத்திலிருந்த சில இலங்கைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், குறித்த குண்டுவெடிப்பானது, இஸ்ரேல் உளவுத்துறையின் சதித்திட்டமாகும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்கள்.
ஆனால், விசாரணைகளின் போது, குறித்த தாக்குதலின் பின்னணியில், ‘தமிழீழ இராணுவம்’ என்ற சிறியதொரு தமிழ் இளைஞர் ஆயுதக்குழு இருந்தமை தெரியவந்தது. இந்தக் குழுவின் தலைவராக ‘பனாகொட மகேஸ்வரன்’ என்ற நபர் அறியப்பட்டிருந்தார். பனாகொட இராணுவ முகாமில், தடுப்புக் காவலிலிருந்து தப்பித்தவர்களுள் இந்த நபரும் ஒருவர். விசாரணைகளைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட கதிரேசன் உள்ளிட்ட, 10 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
குறித்த சம்பவம் பற்றி, பின்னாளில் குறிப்பிட்ட அன்றைய தமிழ்நாடு பொலிஸ்துறை இயக்குநராக இருந்த மோகன்தாஸ், “சதித்திட்டம் தீட்டியவர்களின் இலக்கானது, சென்னை விமானநிலையம் அல்ல; மாறாகக் கொழும்பு விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்வதுதான் அவர்களது எண்ணமாக இருந்தது.
கொழும்பு செல்லும் எயார் லங்கா விமானத்தில், குண்டுப் பொதிகளை அனுப்பி வைக்க முயன்றதும், குண்டின் நேரத்தை, அந்த விமானம் கொழும்பை அடையும் நேரத்துக்கு ஏற்றாற் போல தயார் செய்ததும் இதை உறுதி செய்தன” என்றார்.
இந்தியாவின் சங்கடம்
தன்னுடைய நாட்டினது, முக்கிய நகரொன்றின் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடித்தமை ஒரு பிரச்சினையென்றால், அதன் விசாரணைகள், குறித்த குண்டுவெடிப்பானது, இலங்கையைக் குறியாக வைத்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்றால் முன்னெடுக்கப்பட்டது என்ற உண்மையை, வெளிக் கொண்டு வருவதானது, இந்தியாவுக்கு இன்னொரு பெரும் பிரச்சினையை உருவாக்கியது.
தாம் தொடர்ந்து மறுத்து வருகின்ற ஒரு விடயமானது, தம்முடைய விசாரணைகளினூடாக வெளிவருவது என்பது இந்தியாவுக்கு மிக சங்கடமானதொன்றாகும்.
இதனால், விசாரணை அதிகாரியாக இருந்த மோகன்தாஸ், உடனடியாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரைச் சந்தித்த மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், “இலங்கைத் தமிழ் ஆயுதக்குழுவினரைப் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாம் விமானநிலையக் குண்டுவெடிப்பு வழக்கை, இதேவழியில் தொடர்ந்து விசாரித்தால், அது இலங்கை அரசாங்கத்துக்குத்தான் சாதகமாக அமையும். இந்தியாவில், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் பயிற்சி முகாம்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டை, டெல்லி தொடர்ந்து உத்தியோகபூர்வமாக மறுத்து வருகிற நிலையில், அதை நிரூபிப்பதாக அமைந்துவிடும். மேலும், இது தமிழகத்திலுள்ள தீவிரவாதத் தமிழ் அமைப்புகள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தமிழகத்தையும் சேர்த்த பெரிய தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது” என்று தெரிவித்ததாக மோகன்தாஸ் கூறியிருந்தார். அத்துடன் தனது நூலொன்றிலும் இதைப் பதிவுசெய்துள்ளார்.
தனக்கேற்பட்டிருந்த சங்கடமான சூழலை, இந்தியா முழுமையாக உணர்ந்தே இருந்தது என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சம்பவம், ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமது நிலைப்பாட்டைச் சத்தமாக வலியுறுத்தும் சந்தர்ப்பத்தைத் தந்திருந்தது.
இந்தியாவின் அழுத்தத்தை, இதன் மூலம் ஓரளவுக்குச் சமன் செய்ய முடியும் என்று, ஜே.ஆர் கணக்கிட்டிருக்கக் கூடும். சர்வகட்சி மாநாடு, ஜே.ஆரின் இரண்டு அவைகொண்ட சட்டவாக்க சபை பற்றிய முன்மொழிவை ஆராய்ந்துகொண்டிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இதை நிராகரித்திருந்த நிலையில், தன்னுடைய முன்மொழிவைப் பெரும்பாலும் தன்னுடைய கட்சியினரே ஆராயும் ஒரு காலவிரய நடவடிக்கையாகவே, இது கடந்துகொண்டிருந்தது.
இதேவேளை, இலங்கையில் செயற்பட்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் பல்வேறு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியிருந்தன.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago