2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இனத்துவத்தின் வெற்றியும் ஜனநாயகத்தின் தோல்வியும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜூலை 09 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் போராட்டம் என்பது, அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை எனக் கூறலாம். இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று, விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது.   

ஆனால், விடுதலை என்பதன் அர்த்தம், அச்சொட்டாகத் தீர்மானிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே, விடுதலையின் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. இது அனைத்து வகையான விடுதலைப் போராட்டங்களுக்கும் பொருந்தும்.   

ஜூலை மாதம் நான்காம் திகதி, அமெரிக்கா தனது சுதந்திரப் பிரகடனத்தின் 244ஆவது ஆண்டு நிறைவைப் கொண்டாடியது. இந்தச் சுதந்திரப் பிரகடனத்தின் நினைவுகள், முன்னெப்போதையும் விட இப்போதோ, அமெரிக்கர்களுக்குத் தேவைப்படுகிறது.   

ஒருபுறம், அமெரிக்காவெங்கும் ‘Black Lives Matter’ போராட்டங்களால் தகித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், கொவிட்-19 நோய்த்தொற்றின் தீவிரத்தால் தத்தளிக்கிறது. இவை இரண்டும் இணைந்து, உலக அரசியலில் இனத்துவத்தை விளங்குவதன் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளன.   

இன்று 244 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சுதந்திரப் பிரகடனத்தை வாசிக்கும் ஒருவருக்கு ஏற்படும் எண்ண ஓட்டம், எதுவாக இருக்கும் என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி.   

குறிப்பாக, மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிராக, அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்படும் கருத்துகள், இன்று எவ்வாறு பொருள் கொள்ளப்படும்? முக்கியமாக, அப்பிரகடனத்தில் மன்னருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு தொடர்கின்றன.   

‘ஏராளமான இராணுவப் படைகளை எங்களுக்குள் நிலைநிறுத்தியுள்ளார்; அவர் எங்களுடைய கடலைக் கொள்ளையிடுகிறார்; கடற்கரையோரப் பகுதிகளை அழித்துவிட்டார்; எங்களுடைய நகரங்களைத் தீயிட்டுக் கொழுத்தினார்; எங்கள் மக்களுடைய வாழ்வை அழித்துவிட்டார். இப்பொழுதும் அவர், ஏராளமான வெளிநாட்டுக் கூலிப் படைகளைக் கொண்டுவந்து, இறப்பு, பேரழிவு, கொடுங்கோன்மை போன்ற செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்; இவை அனைத்துமே, காட்டுமிராண்டிக் காலத்தில்கூட, இணையாகக் காணமுடியாத, நாகரிகமடைந்த ஓரு நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு முற்றிலும் தகுதியற்ற செயல்களாகும்”.   

கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, உலகில் ஒடுக்கப்பட்ட மக்களும் அமெரிக்காவால் சீரிழிக்கப்பட்ட தேசங்களும் இதே குற்றப்பத்திரத்தை அமெரிக்கா மீது, இன்று வாசிக்கின்றன. இதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

ஒடுக்கப்பட்ட தேசிய இனம், இன்னும் மோசமாக ஒடுக்கும் தேசிய இனமாக, எவ்வாறு உருவெடுத்தது என்பது கவனிப்புக்குரியது.   

தேசிய இனமும் தேசமும், மனிதரின் சமூக அடையாளங்கள். அவை, வரலாற்றால் உருவானவை. அவ்வாறே அவை, வரலாற்றுப் போக்கில் மாறக்கூடியவை. அவற்றுக்கு ஒரு நிரந்தர இயல்பும் இல்லை. அவை, எப்போது முக்கியத்தும் பெறுகின்றன என ஆராய்ந்தால், அவற்றுடன் சேர்ந்த வர்க்க நலன்களை அடையாளம் காணலாம்.  

தேசத்தினதோ, தேசிய இனத்தினதோ பெயரில் இன்னொரு தேசத்தையோ, தேசிய இனத்தையோ ஒடுக்குவதை நியாயப்படுத்தத் தேசிய உணர்வு, தேசப்பற்று, தேசிய நலன் போன்ற கருத்துகள் பயன்படுகின்றன. ஆழ நோக்கின், அங்கு ஓர் அதிகார வர்க்க நலன் சார்ந்த சிந்தனையின் ஆதிக்கத்தைக் காணலாம்.  

 இது கொலனிய யுகத்தில் காணப்பட்டது; நவகொலனிய யுகத்திலும் காணப்படுகிறது. கொலனியமும் ஏகாதிபத்தியமும் மட்டுமன்றி, மூன்றாமுலக நாடுகளின் அதிகார வர்க்கங்களும் இவ்வாறு தேசிய நலன்களை வற்புறுத்தக் காணலாம்.   

இத்தகைய தேசியவாதத்தின் பின்னாலுள்ள அதிகார வர்க்கங்கள், தாம் பிற தேசங்களை ஆக்கிரமிப்பதையும் அடக்குவதையும் சுரண்டுவதையும் ஏற்புடையனவாக்க, தமது சமூகத்தின் பெரும்பான்மையை மகிழ்விக்க வேண்டும். இதற்கு இனப்பகை வசதியான கருவியாக உள்ளது.   

மேலாதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக, விடுதலைக்காகப் போராடும் தேசியம், அந்த நோக்கங்களுக்கு உட்பட்டு முற்போக்கானது. எனினும், விடுதலைக்காகப் போராடும் தேசிய இயக்கங்கள் யாவுமே, முற்போக்கான உலக நோக்குடையனவல்ல.   

அவற்றிடையே, பலவாறான வர்க்க நிலைப்பாடுகளும் அரசியல் சிந்தனைகளும் இயங்குகின்றன. பழைமைவாதம், அடிப்படையான சமூக அமைப்பைப் பேணும் நோக்கு என்பனவற்றுடன், பிற தேசிய இனங்களையும் தேசங்களையும் இழிவாகவும் பகையாகவும் நோக்கும் தன்மையையும் பல தேசிய விடுதலை இயக்கங்களுக்குள் காண்கிறோம்.  

இவற்றுக்கு மாறாக, மனித சமத்துவத்தையும் சமூக நீதியையும் வேண்டும் போக்குகளையும் அதே இயக்கங்களுக்குள் காணுகிறோம். 

தேசியத்தின் தன்மையும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தன்மையும், ஆதிக்கம் செலுத்தும் வர்க்கப் பார்வை மீதும் வர்க்க நலன்கள் மீதுமே தங்கியுள்ளன.  

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் முன்வைத்த அதே குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா மீது, அமெரிக்காவின் கறுப்பின மக்கள் இன்று முன்வைக்கிறார்கள். அமெரிக்க நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களில் தொடங்கி, பல்வேறு உரிமைப் போராட்டங்களூடாக வளர்ந்து, அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி, சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாக இன்னும் தொடர்கிறது.   

அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும் அமெரிக்கா ஒரு வல்லரசாகத் தொடரும்வரை ஒழியப்போவதில்லை. நீக்ரோ மக்களினதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழிபேசும் லத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர்.   

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லறைச் சீர்திருத்தங்கள், பிரச்சினையின் ஆணி வேரைத் தொடத் தவறிவிட்டன. எனவே, அவர்களது இனவிடுதலைப் போராட்டம் தொடர்கிறது. இதன் இன்னொரு வடிவமே, இப்போது நடைபெறுகின்ற Black Lives Matter போராட்டங்கள் ஆகும்.   

உலக அரசியல் அரங்கில், இனத்துவம் முக்கியமான வகிபாகத்தை உடையது. தேச அரசுகளின் உருவாக்கமும் அதைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டங்களும் கொலனியாதிக்கம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதன் ஏகபோகம் என்பனவும் இனத்துவத்தின் இருப்பையும் நிலைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.   

உலகின் முக்கியமான ஒரு பேசுபொருளான இனத்துவம், இன்றுவரை பேசப்படாமல் ஒதுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உலக அரசியலின், வேறுபட்ட நிலைப்பாடுகளும் சித்தாந்த நெருக்கடிகளும் இனத்துவத்தை, அரங்கின் மய்யத்துக்கு வராமல் தடுத்து வைத்திருந்தன.   

இப்போது நிலைமை மாறுகிறது. இந்த மாற்றம் நிரந்தரமானதா அல்லது, தற்காலிகமானதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.   

இனத்துவம் இப்போது பேசுபொருளாகி உள்ளது; இது பயனுள்ளது. கடந்த ஒன்றரை நூற்றாண்டுகால வரலாற்றில், கொலனித்துவம் ஏற்படுத்திய நெருக்கடி, புதியதும் ஆழமானதும் ஆகும். இதன் தொடர்ச்சியே இப்போது வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறுகிறது. ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்கான வலிய கருவியாக, இனத்துவம் பயன்பட்டு வந்துள்ளது.   

இவ்விடத்தில் ‘எனக்கொரு கனவுண்டு’ (I have a dream) எனும், மார்ட்டின் லூதர் கிங்கின் பிரபலமான உரை, நினைவுக்கு வருவது தவிர்க்கவியலாது. இவ்விடத்தில், இந்த உரையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி, அருந்ததி ராய் எழுப்பிய சில கேள்விகளை இங்கு நினைவுபடுத்தல் தகும்:   

“அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால், இன்னமும் ஒவ்வொரு அமெரிக்கனின் உள்ளத்திலும் உன்னதமான அமெரிக்கர்களின் அலங்காரப்பீட அடுக்கிலும் தனக்கான அசைக்க முடியாத இடத்தில் ஆறுதலாக அமர்ந்திருக்க விரும்பியிருப்பாரா? அல்லது, தனது பீடத்திலிருந்து கீழிறங்கி, வெற்றுப் புகழாரங்களை உதறித் தள்ளிவிட்டு தன் மக்களை, மீண்டும் பேரணியில் திரட்ட வீதிக்கு வந்திருப்பாரா”?   

இன்று இனத்துவம் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது வெறுமனே சில அற்பச் சலுகைகளுடன் முடிந்துவிடும் விடயமல்ல என்பதை அனைவரும் உணரல் வேண்டும். 
அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் அதைத் தொடர்ந்த அமெரிக்காவின் நடத்தையும் இன்று கூர்மையடைந்திருக்கின்ற நீக்ரோ அமெரிக்கர்களின் உரிமைக்கான போராட்டங்களும் சொல்லும் செய்தி ஒன்றுண்டு.   

இனங்களுக்கிடையிலும் இனப் பிரிவுகளுக்கிடையிலும் நல்லுறவு வளர்த்தல், ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது என்ற உண்மை, உரத்துச் சொல்லப்படல் வேண்டும். ஓர் இனத்தவர், மற்ற இனத்தவர்களுக்குரிய குறிப்பான பிரச்சினைகளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறுவதும் பிரச்சினைகளைத் தம் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, மற்றவர்களது கண்ணோட்டத்திலும் காண முயல்வதும் மக்களிடையே இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைத்து, சினேக இயல்பை வலுவூட்ட உதவும்.  

இவ்விடத்தில், இலங்கையை மய்யப்படுத்தி, பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட முன்வைத்துள்ள கருத்து கவனிக்கத்தக்கது:   

‘இனத்துவமும் ஜனநாயகமும் நமது சமூகத்துக்கு நவீனத்துவம் கொண்டுவந்த இரு அதிமுக்கிய அரசியற் கற்பனைகளாம். இனத்துவம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் சில சமூகங்கள் ஒவ்வொன்றும், தன்னை ஓர் அரசியல் சமூகமாகவும் அரசியல் பொதுக் கூட்டாகவும் கருதுவதற்கான சிந்தனைச் சட்டகத்தைத் தந்துள்ளது. 

ஜனநாயகம், உரிமையுடைய ஒரு தனிமனிதனாகவும் கண்ணியமாயும் சமத்துவமாயும் நடத்தப்பெறும் உரித்துடையனவனாயும் அரசாங்கத்துடன் ஒவ்வொரு குடிமகனும் தன்னை உறவுபடுத்த இயலுமாக்கியுள்ளது. 

இவை எவ்வாறும் நவீனத்துவத்தின் அற்பச் சாதனைகளல்ல. இவ்விரண்டும் இலங்கையின் குடிமக்கள் யாவரதும் அரசியல் சுயத்தின் மூலங்கள். இனத்துவத்தின் மூலம், நமது குடிமக்கள் தம்மை முதற்கண் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் இத்தியாதி பண்பாட்டு-அரசியல் சமூகங்களைச் சார்ந்தோராகத் தம்மை விளங்குகின்றனர்.

குடிமக்களின் இனத்துவ, அரசியல் அடையாளங்கள் கடந்த சமத்துவத்தை வசதிப்படுத்தும் ஜனநாயகம் உறுதியளிக்கப்பட்டிருந்தும் இனத்துவ அடையாளத்தையடுத்தே அதனில் பெரிதான தேச-அரசு அடையாளம் ‘இலங்கையர்த் தன்மை’  வருகிறது. வலிய பல காரணங்களால், குழு அடையாளத்தின் இனத்துவக் கற்பிதம் தேச-அரசு என்ற அடையாளக் கற்பிதத்தை மேவியுள்ளது.

ஜனநாயகத்தின் தனிமனித, எதிர்மறையான உரிமைகள் பற்றிய கதையாடல், குழுக் களின் இக்கட்டுகளையோ சனத் திரள்களின் விமோசனம் பற்றிய பார்வைகளையோ ஒலிப்பித்தற்கான வெளிப்பாட்டு மொழியைத் தரவில்லை. இச் சூழலிலேயே சிங்கள, தமிழ் பின்னர் முஸ்லிம் இனத்துவத் தேசிய அடையாளங்கள், நவீன இலங்கையின் அதி வலிய அரசியல் இயக்க ஆற்றலாக விருத்திபெற்றன. மூன்று தசாப்தங்களாக நடந்த நீடித்த உள்நாட்டுப் போரை முன்னே உந்தியது இனத்துவத் தேசிய சித்தாந்தங்களேயன்றிச் ஜனநாயக இலட்சியங்களல்ல என நாம் உணரும் போது, அது மேலும் அச்சமூட்டுகிறது

இனத்துவத்தின் வெற்றி நமது ஜனநாயகத்தின் தோல்வியாகியது. இச் செயற்பாங்கை மறுதலையாக்கி, இனத்துவத்தினதும் இனத்துவத் தேசியவாதங்களினதும் பிரிவுசார்ந்த, குறுகிய நோக்குடைய, விலக்கி நிற்கும் உறுதிமொழியை மழுங்கடிக்கும் ஆற்றலுடையதோர் அரசியல் சக்தியாக, ஜனநாயகத்தை மீளக் கொணர்வதே உள்நாட்டுப் போருக்குப் பிந்திய இலங்கையின் சவால்.’  

நிறைவாக, எங்கே அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இது மனித வரலாறு கூறும் உண்மை. மனித இனத்தின் விமோசனம் மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும்.

மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும் அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்புக்குள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான். இது கறுப்பின அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல; இலங்கையர்களுக்கும் பொருந்தும். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X