2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

ஈழப் போரும் இந்தியாவும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 மே 14 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 143)

கெரில்லாப் போர்  

இலங்கையின் போராட்ட வரலாற்றை அணுகுபவர்கள், ‘ஈழப்போரின்’ மொத்தக் காலகட்டமாக 1983 முதல் 2009 வரையான 26 வருடங்களை வரையறுப்பது வழமை.  

 மேலும், இந்த ஈழப்போரை காலத்தின் அடிப்படையில் நான்காக வகுப்பர். அதில், முதலாவது ஈழப்போர் என்று 1983 முதல் 1987 வரையான காலப்பகுதி வரையறுக்கப்படுகிறது. அதாவது, 1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்தான இந்திய அமைதிப்படை வருகையின் காலம் வரை, முதலாவது ஈழப்போராகக் கருதப்படுகிறது.  

 1983 ‘கறுப்பு ஜூலை’ முதல், முதலாவது ஈழப்போர் ஆரம்பம் என்று வகுக்கப்படினும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லா முறைத் தாக்ககுதல்களில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. 

கெரில்லா போர் முறை என்பது, பாரம்பரிய போர் உத்திகளுக்கு மாறான, பாரம்பரிய இராணுவமல்லாத போராளிகளால் முன்னெடுக்கப்படும் போர் முறையாகும்.   

புரட்சிகள், கிளர்ச்சிகளின் போது, ஆயுதம் ஏந்திய சிவிலியன்கள் அல்லது போராளிகள், தம்மைவிடப் பலமான எதிரியைப் பாரம்பரிய யுத்த நியதிகளுக்கு முரணான வகையில், எதிர்கொள்ளும் போர் உத்தியே கெரில்லாப் போர் எனலாம்.  

 கியூபப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளில், கெரில்லாப் போர் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, சே குவேரா, தாம் கையாண்ட கெரில்லாப் போர் முறை, கெரில்லாப் போர் உத்திகள் என்பன பற்றி ‘கெரில்லாப் போர்முறை’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்.  

 வியட்நாம் போரின் போது, பாரம்பரிய போர்முறையில் தேர்ந்த அமெரிக்க இராணுவத்தை, வியட்நாமின் கம்யூனிஸப் படைகள், கெரில்லாப் போர் முறையில் எதிர்கொண்டு, வெற்றி கண்டிருந்தன.   

இந்தக் கெரில்லாப் போர்முறையையே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் கையாண்டு கொண்டிருந்தன. அதிலும், தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் பாணியிலான கெரில்லாத் தாக்குதல்கள், 1984இல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) உட்பட, இன்னபல பிற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தன.   

இவை தாக்குதல் நடத்திவிட்டு, மறைந்துவிடும் கெரில்லாப் போர் முறையையே பின்பற்றியதாக, ஈழப் போரை ஆராய்ந்த போரியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் 26 வருடங்களில், பல குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஒரு குழுவினுடையதாக மாறியிருந்தது. முதலாவது ஈழப்போர், கெரில்லாப் போராக ஆரம்பித்திருந்தாலும், அடுத்தடுத்த போர்கள், பெருமளவுக்குப் பாரம்பரிய போர் முறைக்கு மாறியிருந்தன.   

ஆனால் இந்த மாற்றம், 1984இலேயே ஆரம்பித்துவிட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். நிலப்பரப்பை ஆளுகைக்கு உட்படுத்தும் ஓர் உள்நாட்டுப் போரின் குறிக்கோளை, நீடித்து நிலைக்கத்தக்க வகையில் அடையப்பெற வேண்டுமானால், அது தாக்குதல் நடத்திவிட்டு மறைந்துவிடும் கெரில்லாப் போர் உத்தியால் சாத்தியமில்லை.   

ஆனால், ஒரு பாரம்பரிய இராணுவத்துக்கு எதிராக, பாரம்பரிய முப்படைகளுக்கு எதிராகப் போராளிகளாக மாறிய சிவிலியன்கள், உடனடியாகப் பாரம்பரிய போரொன்றை முன்னெடுப்பது என்பது சாத்தியமே இல்லை.   

முதலில் ஆட்சேர்ப்பு, ஆயுதம், போர்ப்பயிற்சி என்பன அதற்கு அடிப்படை. இவற்றை ஆரம்பத்தில் வழங்கி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வளர்த்தது இந்தியாதான் என்று, ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், அன்றைய இந்திய அரசியலில் பங்கு வகித்தவர்கள் எனப் பலரும் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

 சர்வ நிச்சயமாக, இலங்கைக்குள் தனித்த தமிழீழம் ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை. அது இந்தியாவுக்கு, மேலும் ஆபத்தாகவே அமையும். அப்படியானால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஊக்கமளித்ததில் இந்தியாவின் நோக்கம் என்ன?  

உள்நாட்டுச் சீர்குலைப்பு  

1947 முதல் 1991 வரை, இடம்பெற்ற பனிப்போரில் கையாளப்பட்ட உத்திகளிலொன்று உள்நாட்டுச் சீர்குலைப்பு (internal destabilisation) எனலாம். 

பனிப்போரின் பின்னர், இதன் பயன்பாடு இன்னும் அதிகமானது. உலக அளவில், வல்லரசுகளின் போட்டியால் சீர்குலைக்கப்பட்ட நாடுகளுக்கு, ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய உதாரணமாகும்.   

இலங்கையில் ஆட்சியிலுள்ள அரசாங்கமானது, இந்தியச் சார்புடையதாக இருக்க வேண்டியது, இந்தியாவுக்கு  மிக முக்கியமானதாகும். இதற்கு இலங்கையின் பூகோள அமைவிடமே பிரதான காரணமாகும். இந்திய நலன்களுக்கு மாறுபாடான, வல்லரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வருவது, இந்திய நலன்களுக்கு ஆபத்தானது.  

 ஆகவே, சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா உந்துசக்தியளித்த முஜாஹிதீன்கள் போல, அமெரிக்கச் சார்புடையதாக மாறியிருந்த இலங்கையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியா உந்துசக்தியளித்தது.  

இதற்கு அர்த்தம், இலங்கையில் இனப்பிரச்சினையை உருவாக்கியது இந்தியா என்பதல்ல; மாறாக, இலங்கையில் உருவாகியிருந்த இனப்பிரச்சினையையும் அதற்கெதிராகத் தமிழ் இளைஞர்களிடம் பெருவாரியாக எழுந்திருந்த கோபத்தையும் எதிர்ப்பையும் இந்தியா, தனது நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய உத்தியை நாம் அவதானிக்கலாம்.  

 ஆனால், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, இந்த உத்தியில் ஏற்பட்டிருந்த பெருஞ்சிக்கல், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியலாகும். 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்திய மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல், ஒரு புறம் இயங்கிக் கொண்டிருக்கையில், மறுபுறத்தில், தமிழ் நாட்டு அரசியலின் நிகழ்ச்சி நிரலிலும், ஈழத்தமிழர் போராட்டம் முக்கிய இடம்பெறத் தொடங்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் மு. கருணாநிதி ஆவார்.  

தமிழ்நாட்டு அரசியல்  

மீண்டும், தமிழ் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.  

தமிழர்களின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதில், ஈழத்தமிழர்கள் பிரச்சினை முக்கியமானதொன்று என்று கருதிய கருணாநிதி, ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்து, எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கத்துக்கும், மத்திய அரசாங்கத்துக்கும்  அழுத்தம் கொடுத்ததோடு, தன்னுடைய அரசியல் நிலையையும் மேம்படுத்திக் கொண்டார்.   

இது, எம்.ஜி.ஆரையும் தமிழீழ போராட்டத்தின்பால் கவனம் கொள்ளச் செய்தது எனலாம். 
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் பலரும், தமிழ்நாட்டிலேயே இருந்த நிலையில், 1984 ஏப்ரல் மாதத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்திக்க விரும்பிய தமிழக முதலமைச்சர் 

எம்.ஜி.ஆர், அந்தச் சந்திப்புக்கான அழைப்பை, உளவுப்பிரிவினூடாகக் குறித்த இயக்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.   

இதேநிலையில், குறித்த தலைவர்களை எம்.ஜி.ஆர் சந்திக்கவிருந்த தினத்துக்கு ஒருநாள் முன்பாக, அதே தலைமைகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான அழைப்பை, கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். டெலோவின் சிறி சபாரட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பத்மநாபா மற்றும் ஈரோஸின் பாலகுமாரன் ஆகியோர், கருணாநிதியைச் சந்தித்திருந்தனர்.  

 புளொட்டின் உமா மகேஸ்வரனும், விடுதலைப் புலிகளின் பிரபாகரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரபாகரனின் நிலைப்பாடு பற்றி, ‘விடுதலை’ என்ற தனது நூலில் அன்ரன் பாலசிங்கம், ‘கருணாநிதி- எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு இடையிலான அரசியல் மோதலில், தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள, பிரபாகரன் விரும்பவில்லை’. அத்துடன், எம்.ஜி.ஆரின் கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் இருக்கவே, முடிவுசெய்யப்பட்டிருந்தது என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  

 கருணாநிதி உடனான சந்திப்பு, ஊடகங்களில் வௌிவந்திருந்த நிலையில், தான் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பை எம்.ஜி.ஆர் உடனடியாக இரத்துச் செய்திருந்தார். தன்னுடைய திட்டத்தை மறுசீரமைத்த எம்.ஜி.ஆர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்திக்க முடிவெடுத்தார்.  அதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரைச் சந்திப்பது, எம்.ஜி.ஆரின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

எம்.ஜி.ஆரின் சந்திப்புக்கான அழைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து நீங்கள் செயற்பட வேண்டுமானால், தமிழக முதல்வரைப் பகைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்ற எச்சரிக்கையுடனேயே வழங்கப்பட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

முதற்கட்டச் சந்திப்பில், பிரபாகரன் கலந்துகொள்ளவில்லை என்றும், ஆனால் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டார்கள் என்றும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.  

 இந்தச் சந்திப்பின்போது, அன்ரன் பாலசிங்கத்தால் பயற்சி மற்றும் ஆயுதக் கொள்வனவுக்காக இரண்டு கோடி நிதியுதவி எம்.ஜி.ஆரிடம் கோரப்பட்டது. மறுவார்த்தையின்றி, “நாளை இரவு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி,எம்.ஜி.ஆர் அந்த நிதியுதவியைச் செய்ததாக அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.   

எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் போராட்டத்துக்கு நிதியுதவி செய்ததாக, 2009இன் பின்னர் கைதான கே.பத்மநாதன் என்கிற ‘கே.பி’ கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இங்கு எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகள் அமைப்போடு கொண்டிருந்த அபிமானம் பற்றி, எம்.ஜி.ஆர் குறித்துத் தன்னுடைய நூலில் கருத்துரைக்கும் அத்தர் சந்த், ‘புலிகள் மீதான எம்.ஜி.ஆரின் அபிமானம், தத்துவார்த்தமானது என்பதைவிட, அரசியல் தந்திரோபாயம் சார்ந்தது’ என்கிறார்.  

அவர் மேலும், தமிழக அரசியல் கட்சிகள், ஈழப்போராட்டத்தைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இருதரப்பினதும் செல்லக் குழந்தையாக டெலோ இயக்கமே இருந்தது என்றும், டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகளும் பெரும் வைரிகளாக இருந்தன என்றும், 

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆற்றல் வளத்தை, எம்.ஜி.ஆர் அறிந்துகொண்டிருந்தார் என்றும், மேலும், விடுதலைப் புலிகள், கருணாநிதியோடு நெருங்கிய உறவைக்  கொண்டிருக்காமையும் எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளைப் பெருமளவுக்கு ஆதரிக்கக் காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.   

இலங்கையின் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தொடர்பில், இந்தியாவுக்கு  இருந்த பெரும் சிக்கலும் இதுதான். மத்திய அரசாங்கத்தின் செல்லக் குழந்தையாக ஓர் ஆயுதக் குழு இருந்தது; தமிழகத்தின் ஆளும் கட்சியின் ஆதரவு, இன்னொரு குழுவுக்கு இருந்தது; தமிழகத்தின் எதிர்க்கட்சியின் ஆதரவு இன்னொரு குழுவுக்கு இருந்தது. ஆயினும் சிலர், எம்.ஜி.ஆரின் ஊடாக, மத்திய அரசாங்கமே காய்நகர்த்தியது என்றும் கருத்துரைப்பர்.  

 எது எவ்வாறாயினும், இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில், இந்தியா வெறும் பங்குதாரி மட்டுமல்ல; ஒருவகையில் அதன் சூத்திரதாரியும் கூட என்பதுதான் வரலாற்று உண்மை.   

புதிய தலைமை  

ஆயுதப் போர் என்ற கிரகணம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியலை விழுங்கியிருந்தது. உள்ளூரிலும், வௌிநாட்டிலும், இந்தியாவிலும் அவர்கள் முக்கியத்துவம் இழந்து போயிருந்தார்கள்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால், அரசபடைகள், பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரித்த அளவில் முன்னெடுக்கப்படத் தொடங்கின. அரச படைகளின் பதில்தாக்குதல் நடவடிக்கைகளும் கடுமையாகத் தொடங்கின.  

 தாக்குதல் நடவடிக்கைகள், போர் வரலாறு என்பவற்றை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்பதை, வரலாற்று ரீதியில் அடையாளம் காண்பதே இதன் இலக்கு. அரச படைகளின் பதில்தாக்குதல்கள், அப்பாவித் தமிழ் மக்களைக் கடுமையாகப் பாதித்தன என்பது, மறுக்க முடியாத ஒன்று. அது தமிழ் மக்களை, மேலும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பால், சாய்வடையச் செய்தது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், “எங்கட பெடியள்” என்பது, “எங்கள் தலைவர்கள்” ஆகத் தொடங்கிய காலகட்டம் இது.   

மறுபுறத்தில், ஜனாதிபதி ஜே.ஆர் அமைத்த சர்வகட்சி மாநாடு, தீர்வுக்கான தேடலை இழுத்தடித்துக் கொண்டேயிருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .