Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருந்த கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்ததன் பயனாக, ஆளும் கட்சிகளாகவே சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்திருந்த கட்சிகள் உட்பட ஏனைய அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளாகிப் போயிருக்கின்றன.
கடந்த வாரத்திலிருந்து மின்சாரப் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாகத் தலைதூக்கியிருக்கிறது. யூ.எஸ். எயிட் நிதி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
இந்த வரவு-செலவுத் திட்டம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலைக் கொடுத்தாக வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் முக்கியமாக அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருள்களின் விலைக்குறைப்பு, மின்சார விலைக்குறைப்பு என்பனவும் அவற்றில் சிலவாகும். இது பொதுவானதாக இருந்தாலும்,
தமிழர்களைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பு உருவாக்கமும்
நீண்டகால இனப் பிரச்சினைக்கான
தீர்வுமே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த வாரத்தில் தமிழ் சிவில் சமூக அமையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றுகூட, இந்த எதிர்பார்ப்பு சார்ந்ததாக அமைந்திருந்தது. அரசியல் கூட்டுகளுக்கான, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை நோக்கியதான நகர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளிவந்திருக்கிறது,
தேர்தல் கால கூட்டிணைவுகளுக்கு அப்பால், தமிழர் தேசம் முகங்கொடுக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிக முக்கியமானதாகும் என்ற கோரிக்கையைத் தமிழ் சிவில் சமூக அமையம் முன்வைத்திருக்கிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள், பாராளுமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் கருத்தொருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். அப்பொழுது நிலைப்பாடானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலும், தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை மற்றும் வட, கிழக்கு தாயகம் அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு ஆகிய விடயங்களில் விட்டுக்கொடுப்பின்றியும் அமையவேண்டும் என்று கோரியிருக்கின்றது.
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அறிவித்திருக்கிறது. அது இந்த ஆட்சி நிறைவுக்குள் முடிவடையுமா? என்பது கேள்வியாக இருந்தாலும், வெளிப்பூச்சுக்கு வேலைகள் நடைபெறுகின்றன என்றே கொள்ளவேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையில் அரசுக்கெதிரான நிலைப்பாட்டில் இதுவரையில் ஒற்றுமையான பொது நிலைப்பாட்டுக்கு யாரும் வந்து விடவில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த வாக்குகளையும் ஆசனங்களையும் வைத்துக் கொண்டு தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றது. அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஒற்றுமைக்கு அழைத்திருக்கிறது. அதே நேரம் தமிழரசுக் கட்சியின் வழக்கு விடயம் காரணமாகத் தலைவர் இன்னமும் தெரிவாகா நிலையொன்று காணப்படுகின்றமையானது இதனை மேலும் சிக்கல்படுத்தியிருக்கிறது. ஆனாலும் கீழே விழுந்தும் மண்ணொட்டாத பேச்சுக்களும் இல்லாமலில்லை.
காலங்காலமாக நடைபெற்றுவருகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சிகள் பரிகசிக்கப்படுவது வழமையாக இருந்தாலும், நடைபெறும் ஒற்றுமைக்கான முயற்சிகள் நிறுத்தப்படவில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டுகளும் குலைவுகளும், விமர்சிப்புக்களும் குறையவுமில்லை. என்றாலும், தற்போது நடைபெற்று வருகின்ற முயற்சியை முக்கியமானதாகப் பார்க்கவேண்டும்.
2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர் என்று சொல்வதற்கு யாரும் தயாரில்லை. அதே நேரத்தில், இதில் முழுக்க முழுக்க கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கமும், கிழக்குப் பத்திரிகையாளர்களும் மும்முரமாக ஈடுபட்டனர் என்பதனையும் பலரும் மறைக்க முனைகின்றனர். ஆரம்பத்தில்
ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளே இணைந்திருந்தன. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. இருந்தாலும், அக்கட்சியின் விலகலையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னம் மீண்டும் தூசி தட்டி தேர்தலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை மறந்து விட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி தாய்க் கட்சி தந்தைக் கட்சிக் கதைகளை இப்போதும் அளந்துவருகிறது.
2009 யுத்த மௌனிப்புக்குப் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தற்போதுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விலகச் செய்யப்பட்டது. பின்னர் ஈ;.பி.ஆர்.எல்.எவ். விலகிக் கொண்டது. அதன் பின்னர்தான் கடந்த உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த இலங்கைத் தமிரசுக் கட்சி விலகிக் கொண்டது. இருந்தாலும், ஏனைய கட்சிகள் விலகிக் கொண்டதாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியே காண்பித்திருந்தது. இதில் உள்ள ஒருவித மாயை என்பதனை புரிந்து கொள்ளாத தமிழ் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சிகள் பூரணம் பெறுமா என்பது கேள்விக்குரியதாகின்றது. காலங்காலமாக நடைபெற்றுவந்திருக்கின்ற கூட்டுக்கள் தனிப்பட்ட பல காரணங்களினால் இல்லாமல் போயிருக்கின்றன. அதற்குப் பங்காளிகளை இகழ்ச்சியாக கையாள்வதும் காரணமாகும். அது தவிர, தனிப்பட்ட நலன்களும் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இருப்பினும் அது வரலாற்றில் நிரந்தரமானவையாக இருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதனால்தான் பிரித்தாளும் தந்திரங்களும் கையாளப்பட்டிருந்தன
அதன் விளைவு பல இந்த நிலையில்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு தொடர்பில் கொண்டிருக்கின்ற தமிழர்கள் சார்ந்த கடந்தகால நிலைப்பாடுகள், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு விடயங்களைத் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தில் கொள்வது அவசியம் என்பது முக்கியம் பெறுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இசைவுடன் கொண்டு வரப்பட்டவைகள் அல்ல. இருந்தாலும், இந்த அரசாங்கம் வடக்குக் கிழக்கின் ஒரு தொகுதி மக்களின் ஆதரவுடன் பெற்றுக் கொண்ட ஆசனங்களையுடையதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்காகத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையாகக் கொள்ளப்படுமானால் வரலாற்றின் பெரும் கறையாகவே இருக்கும்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட, கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற முன்னாள் ஆயுத இயக்கங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள், கொலைகாரர்கள், கொடுமைக்காரர்கள் போன்ற பல அடைமொழிகளுக்குள் விமர்சிக்கப்பட்டன. அதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் காணப்படுகின்றன. இது வெளிப்படையாக அல்லாமல், தேசிய மக்கள் சக்தி மேற்கொண்ட மறைமுக நடவடிக்கைகளுக்கு ஒப்பான வகையில், தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்காது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமை தமிழ்த் தேசிய கருத்தியலைத் தமிழ் மக்கள் மறுதலித்ததனால்தான் என்று கொள்வதற்கு மாறாக தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட சலிப்பே காரணம் என்று வெறுமனே ஒதுக்கி விட முடியாதபடிக்கு அது இருந்து கொண்டுமிருக்கிறது,
எது எவ்வாறானாலும், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளே பாராளுமன்றத்தில் இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்குள் ஒரு உடன்பாட்டுக்கும் ஒருமிப்புக்கும் வரவேண்டியது அவசியமாகும். இருந்தாலும், ஒற்றுமையுடனான பயணத்தில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பங்கெடுக்கத் தயாராக உள்ளதாக அறிவித்து விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனையொத்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தனி வழியிலேயே இருந்து கொண்டிருக்கின்றது.
இந்தத் தனி வழியானது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் எந்தப்பயனையும் தந்து விடப் போவதில்லை. என்பதனை தமிழரசுக் கட்சி புரிந்துகொள்ள ஏன் கால தாமதமாகின்றது என்பது அவர்களின் கணிப்பீட்டு, மதிப்பீட்டுத் தவறையே காட்டுகின்றது.
அதே நேரத்தில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான அரசியலைச் செய்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இருப்பார்களானால், ஏன்? அவர்கள் சுயநலவாதிகளாகவும் தனிப்பட்ட விடயங்களுக்கானவர்களாகவுமே பார்க்கப்பட வேண்டும். எது எவ்வாறானாலும், நடைபெறுபவை நல்லவையாகவே இருக்க வேண்டும் என்று நம்புவோம்.
கடந்த கால அரசுகளுக்கு ஒப்பான நகர்வுகளுடன் செயற்படும் அரசே இருக்கையில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளின் ஒற்றுமை இன்மை மேலும் பாதகங்களையே ஏற்படுத்தும் என்பதும் புரிதலுடன் விளக்கிக்கொள்ளப்படுதலே இப்போதைக்கு முக்கியமானது.
28 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
1 hours ago
5 hours ago