Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மே 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ‘உயிர்த்த ஞாயிறு’ தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் பலியெடுக்கப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகாயப்படுத்தப்பட்ட கொடூரம் நடந்து எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியுடன்
5 வருடங்கள் நிறைவடையும் நிலையில்தான் கடந்த 31ஆம் திகதி ‘உயிர்த்த ஞாயிறு’ தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கொடூர தாக்குதல்கள் நடைபெறப்போகின்றனவென 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் துல்லியமான உளவுத் தகவல்கள் இலங்கை புலனாய்வுத்துறைக்குக் கிடைத்துள்ள போதும், அதனை வெளிப்படுத்தாது, அரசியல்வாதிகளை மட்டும் பாதுகாக்கும் அறிவித்தல்களை விடுத்துவிட்டு, புலனாய்வுத்துறை மௌனம் காத்த அதேவேளை, தமக்கு விடுக்கப்பட்ட தாக்குதல் அபாயம் குறித்த எச்சரிக்கையைப் பகிரங்கப்படுத்தாது, தமது பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டதுடன், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ அரசியல் வாதிகள் உட்பட எந்தவொரு அரசியல் வாதியும் தேவாலயங்களுக்குக் கூட செல்லாது தமதும் தமது நெருங்கிய உறவினர்களினதும் உயிர்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டு அப்பாவி மக்களுக்கும் இலங்கை அரசையும் பாதுகாப்புத்தரப்பினரையும் நம்பி வந்த வெளிநாட்டவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்த நாளாகவும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ‘உயிர்த்த ஞாயிறு’ தினம் உள்ளது.
சம்பவம் ஒன்று நடந்தால் அந்தப் பழியை, குற்றச்சாட்டை அப்போது பிரதமராக விருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு மீது போடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவும் ஜனாதிபதியின் மீது போடுவதற்குப் பிரதமர் ரணிலும் ஜனாதிபதி, பிரதமர் தலைகள் மீது போடுவதற்குப் பொதுஜன பெரமுனவின் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் அரசியல் இலாபங்களுக்காகக் காத்திருந்ததாலேயே இந்த ‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன.
எவருமே மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஆகவே, தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் நோக்கமும் அதனைத் தடுக்காது விட்ட அரசியல்வாதிகளின் நோக்கமும் ஒன்றாகவே இருந்துள்ளது.
முஸ்லிம் பயங்கரவாதிகளின் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில், ஏற்கெனவே அந்தப் பாதாளத்துக்குள் விழுந்து கிடந்த அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தமது அசுத்தங்களை மறைத்துக் கொண்டு மேலெழுந்து வருவதற்கு இக்கொடூர தாக்குதல்களை தமக்கான ஒட்சிசனாகப் பயன்படுத்தி ஒரு தரப்பினர் ஆட்சியைப் பிடித்தனர்.
ஆட்சியிலிருந்தவர்கள் எதிர்கட்சியாகினர். இன்று வேறு ஒரு வகையிலான ஆட்சி இடம்பெறுகின்றபோதும், தற்போது வரை ஆட்சியிலிருப்பவர்களும் எதிர்க்கட்சிகளும் இந்த ‘உயிர்த்த ஞாயிறு’ தின கொடூரத்தை தமக்கான அரசியல் பிரசார ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியிலும் ஆட்சி ரீதியிலும் பல நெருக்கடிகள் உருவாகியிருப்பதைப்போலவே மக்கள் மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாத ஒரு பரிதாப நிலையே காணப்படுகின்றது. ஆனால், “இவை ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார்’’ என்ற கோஷத்தினால் 5 வருடங்களாக மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.
‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக்குக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழு நாட்டினாலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டதுடன் அதில் பல விடயங்கள் அம்பலமாகும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. எனினும் அறிக்கை வெளிவந்தவுடன் அதனைப் பகிரங்கப்படுத்த அரச தரப்பு பின்னடித்தது.
இதன்மூலம் அறிக்கை மீதான எதிர் பார்ப்பு மேலும் அதிகரித்ததுடன் அந்த அறிக்கையை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் அழுத்தங்களும் வலுத்தன. அறிக்கை தனக்குக் கையளிக்கப்பட்ட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியிலிறங்கி போராடுமளவுக்கும் நீதிகோரி சர்வதேசம் செல்வேன் என எச்சரிக்குமளவுக்கும் அரசு அந்த அறிக்கையை வைத்து படம் காட்டியது.
ஆனால், சில தாமதங்களின் பின்னர் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பகிரங்கப்படுத்தப்பட்டபோதுதான் அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பதனை வெளிக்காட்டாத அறிக்கை என்பது வெளிப்பட்டு முழு நாடும் அதிர்ச்சியடைந்தது.
அந்த அறிக்கையை வைத்தே பல மாதங்களைப் பரபரப்பாக்கி பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசும் எதிர்க்கட்சிகளும் காலத்தைக் கடத்தின.இடையிடையே கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் சூடான அறிக்கைகளை விட்டு பின்னர் அமைதியாகிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் அவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசுடன் நடத்திய பேச்சுக்கள், கொடுத்த மத ரீதியிலான அழுத்தங்களை அமைச்சர்கள் பாராளுமன்றத்திலேயே பகிரங்கப்படுத்தி கர்தினாலை மறைமுகமாக மிரட்டி அமைதியடைய வைத்தனர்.
பிரதான சூத்திரதாரிகளைக் கைது செய்யாமை, தாக்குதலுடன் தொடர்புபட்ட சிலரை விசாரணை அறிக்கையில் உள்வாங்காமை, சந்தேக நபர்களை வெளிநாடு தப்பிச் செல்ல அனுமதித்தமை, விசாரணைகளில் இழுத்தடிப்புக்கள், என அரசு காலத்தைக் கடத்துவதையே இலக்காகக் கொண்டிருந்தது.
‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் பகுதியினர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்பதினாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களின் தரப்பான முஸ்லிம்களும் சிறுபான்மையினத்தவர்கள் என்பதினாலுமே அரசு நீதியை வழங்காது கடந்த 5 வருடங்களாக ‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலை வைத்து அரசியல் செய்கின்றது.
இனி இந்த வருடம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதால் ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதல் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும். அதில் முதல் உயிர்ப்பிப்பாகவே தாக்குதல் நடந்தபோது ஜனாதிபதியாக இருந்தவரும் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 கோடி ரூபா வரையில் நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டவருமான மைத்திரி பால சிறிசேன ‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை தனக்குத் தெரியுமென 5 வருடங்களுக்குப் பின்னர் கூறி தேர்தல் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
அதனால் இப்போது நாட்டில் மீண்டும் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தேர்தல்கள் நடந்து முடியும் வரை மீண்டும் ‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பெரும் பிரசார ஆயுதமாக்கப்படுகின்றது.
இவ்வாறாக நீதி மறுக்கப்பட்டு ‘உயிர்த்த ஞாயிறு ‘ தாக்குதல் அரசியல் பிரசார ஆயுதமாக்கப்படுகின்ற நிலையில்தான் கடந்த 31ஆம் திகதி ஆறாத ரணத்துடன் கிறிஸ்தவ மக்களினால் ‘உயிர்த்த ஞாயிறு’ தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
‘உயிர்த்த ஞாயிறு’ தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பயங்கரவாதிகளின் நோக்கமும் அரசியல்வாதிகளின் நோக்கமும் ஒன்றாகவே இருந்துள்ளதனால் தான் தாக்குதல் நடந்து 5 வருடங்களாகும் நிலையிலும் தாக்குதல் சூத்திரதாரிகளும் சிக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த 5 வருடங்களாக இந்த தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களும் இத்தாக்குதல்களைப் பயன்படுத்தி அரசினால் அரசியல் இலாபம் கருதி நடத்தப்பட்ட வேட்டைகளினாலும் இனவாதிகளினால் நடத்தப்பட்ட இன, மத வெறித் தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.
04..04.2024
16 minute ago
24 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
40 minute ago
46 minute ago