Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு மாதங்களுக்கு முன்னர், உருவாகிய அரசமைப்பு, அரசியல் நெருக்கடிகளில், அரசமைப்பு நெருக்கடி பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அரசியல் நெருக்கடி தொடருகிறது. இதனால் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் மறக்கப்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகள், தற்போது நிலவி வரும் அதிகாரப் போட்டி பற்றியே, கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே, அதிகாரப் போட்டி விடயத்தில், புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். எனவே, ஊடகங்களும் அவற்றைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது.
ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்தார். அதிலிருந்து ஆரம்பித்த பிரதமர் பதவிக்கான சண்டை, கடந்த 16ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த நவம்பர் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். டிசெம்பர் 13ஆம் திகதி உயர்நீதிமன்றம்,“அது சட்டவிரோதமானது” எனத் தீர்ப்பளித்தது. அதையடுத்தது, 15ஆம் திகதி மஹிந்த, பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தார். 16ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகச் சத்தியப் பிரமானம் செய்துகொண்டார். அத்தோடு பிரதமர் பதவிக்கான சண்டை முடிவடைந்தது.
ஆனால், இப்போது புதிய பதவிச் சண்டையொன்று உருவாகி இருக்கிறது. கடந்த 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக, சபாநாயகர் கரு ஜயசூரிய அங்கிகரித்தார். அப்போது, “எவரும், இன்னமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கவில்லை.
எனவே, இன்னமும் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்கிறேன். மஹிந்தவை, எதிர்க்கட்சித் தலைவராக அங்கிகரித்தமையால், இப்போது சபையில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் கூறியதைடுத்தே, புதிய பதவிச் சண்டை உருவாகி இருக்கிறது.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எதிராக, மேலும் இரண்டு சட்டப் பிரச்சினைகளை முன்வைத்துள்ளது.
முதலாவதாக, மஹிந்தவும் அவரது அணியின் வேறு சிலரும், கடந்த மாதம் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றமையால், அவர் எதிர்க்கட்சித் தலைவராவது ஒரு புறமிருக்க, நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
இரண்டாவதாக, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக இருப்பதாக இருந்தால், அவர்களது தலைவரான ஜனாதிபதி, அமைச்சரவையின் தலைவராக இருக்க, அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது என்றும் சுமந்திரன் வாதிட்டார்.
சுமந்திரனின் இந்த வாதங்களால், மஹிந்த அணியினர் குழப்பமடைந்துள்ளனர். ‘நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தாம் தெரிவு செய்யப்படும் போது இருந்த கட்சியிலிருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால், அவர் தமது கட்சி அங்கத்துவத்தை இழக்கிறார். அதன்பின் ஒரு மாதத்தில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகிவிடும்’ என்று அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் மொட்டுக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று, ஒரு மாத காலம் முடிவடைந்ததன் பின்னரே, சுமந்திரன் இந்தக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
எனவே, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் தாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெறவில்லை என, இப்போது கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அப்போதைய தலைவரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் முதலில் மஹிந்தவும் பின்னர், மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவிடமும் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெறுவதை, முழு நாடே ஊடகங்கள் மூலம் கண்டது. அதன் பின்னர், பேராசிரியர் பீரிஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மஹிந்தவிடம் கையளித்தார். இது நாடே அறிந்த உண்மையாகும்.
ஆனால், இப்போது அவர்கள் எவ்வித வெட்கமுமின்றி, அதனை மறுக்கின்றனர். அதன் மூலம், முழு உலகத்தையே ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
மஹிந்தவின் சகோதரரும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளருமான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, “மஹிந்தவும் ஏனைய ஐ.ம.சு.மு எம்.பிக்களும் தமது கட்சியின் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ள போதிலும், அவர்களுக்கு இன்னமும் அது வழங்கப்படவில்லை” எனக் கூறியிருந்தார். நாடே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சம்பவத்தை, அவர்கள் இவ்வாறு மறுப்பதாக இருந்தால், அவர்கள் எந்தவொரு பொய்யையும் இலகுவாகச் சொல்லக் கூடியவர்கள் என்பது தெளிவாகிறது.
எனினும், சட்டப்படி அவர்கள் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளார்கள் என்று சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில், ஊடகங்களில் வெளியான செய்திகளை, அதற்கான ஆதாரமாகப் பாவிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயத்தில், உத்தியோகபூர்வ ஆவணங்களின் பிரதிகள் அவரிடம் இருந்தால், அவரால் அதை நிரூபிக்க முடியும்.
மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் இந்த விடயத்தில் குழப்பமடையத் தேவையில்லை என்றும் வாதிடலாம். ஏனெனில், ‘ஒருவர், தாம் தெரிவு செய்யப்படும் போது இருந்த கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகிவிடும்’ என்றே அரசமைப்புக் கூறுகிறது. ஒருவர், தாம் தெரிவு செய்யப்படும் போது, இருந்த கட்சி அல்லாத மற்றொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றால், அவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார் என அரசமைப்புக் கூறவில்லை.
அதாவது, ஒருவர் தாம் தெரிவு செய்யப்படும் போது, இருந்த கட்சியில் இருந்த வண்ணம், மற்றொரு கட்சியின் அங்கத்துவத்தையும் பெறுவதால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார் எனக் கூற முடியாது. ஒருவர், ஐ.ம.சு.முவின் உறுப்புக் கட்சியான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருக்கும் போதே, மற்றொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற முடியாது என, ஸ்ரீ ல.சு.க யாப்பு கூறுகிறது. மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அந்தச் சட்டத்தை மீறி இருக்கிறார்கள்.
ஆனால், அதன் காரணமாக மஹிந்தவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எதிராக ஸ்ரீ ல.சு.கவோ, ஐ.ம.சு.முவோ ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள், இன்னமும் ஐ.ம.சு.முவின் அங்கத்தவர்களாக இருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தாலும் அவர்களின் இடத்துக்கு, ஐ.ம.சு.முவின் உறுப்பினர்களே நியமிக்கப்படுவார்கள். அப்போதும் ஐ.ம.சு.முவே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை அதிகம் கொண்ட இரண்டாவது கட்சியாக இருக்கும். எனவே, அக்கட்சிக்கே எதிர்க்கட்சிப் பதவி வழங்க வேண்டியிருக்கும்.
சுமந்திரனின் இரண்டாவது வாதம், அதாவது ‘ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராவார்’ என, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் போது, அவரது கட்சி, எதிர்க்கட்சியாக முடியாது என்ற வாதம், அரசமைப்பிலுள்ள முரண்பாடொன்றையே எடுத்துக் காட்டுகிறது.
ஜனாதிபதியின் கட்சி, பொதுத் தேர்தலின் போது தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தப் பிரச்சினை எழுகிறது. இதற்கு முன்னரும் இந்த நிலைமை ஏற்பட்ட போதிலும், எவரும் அதைப் பொருட்படுத்தவில்லை.
முதன் முதலாக இந்த நிலைமை, 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகியது. அந்தத் தேர்தலின் போது, ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் சந்திரிகா குமாரதுங்க பிரதமரானார். ஜனாதிபதி, அமைச்சரவையின் தலைவராக இருக்கையில், அவரது கட்சியான ஐ.தே.கவைச் சேர்ந்த காமினி திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவரானார்.
2001ஆம் பொதுத் தேர்தலின் போது, ஐ.தே.க வெற்றி பெற்று, ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ரத்னசிறி விக்கிரமநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். ஜனாதிபதியின் கட்சியான ஐ.ம.சு.முவைச் சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவரானார்.
அது போன்றதொரு நிலைமையே, இப்போதும் உருவாகியிருக்கிறது. ஜனாதிபதியின் கட்சி, எதிர்க்கட்சியாகி உள்ளது. அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் இடமாக அமைச்சரவை இருக்கிறது. ஒரு வகையில் அமைச்சரவை தான் அரசாங்கமும் கூட. அந்த அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியின் கட்சி, எதிர்க்கட்சியாக இருப்பது தர்க்க ரீதியாகக் குழப்பமாகத் தான் தெரிகிறது. அது தார்மிக ரீதியாகவும் பொருத்தமாக இல்லை.
ஆனால், அமைச்சரவையின் தலைவரின் கட்சியை, ஆளும் கட்சியாக ஏற்றுக் கொண்டால், பெரும்பான்மை பலம் உள்ள கட்சி, எதிர்க்கட்சியாகிவிடும். அப்போது எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலைமை உருவாகும்.
இதே தார்மிகப் பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ஐ.ம.சு.மு, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகியதை அடுத்து, ஐ.தே.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
பின்னர், எழுந்த அரசியல், அரசமைப்பு நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில், தாம் ஐ.தே.கவை ஆதரிப்பதாகவும் எனவே, ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையிலேயே, நாடாளுமன்றக் கலைப்பு, சட்ட விரோதமானது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், ரணிலைப் பிரதமராக, ஜனாதிபதி நியமித்தார். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது அரசாங்கத்தின் அங்கமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
அதற்கு முன்னர், ஐ.ம.சு.மு அரசாங்கத்திலிருந்து விலகியவுடன், கூட்டமைப்பு, எதிர்க்கட்சியின் இரண்டாவது பெரிய கட்சி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அவ்வாறிருக்க, கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எந்த அடிப்படையில் எதிர்ப்பார்க்கின்றது?
தம்மை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்னமும், எவரும் விலக்கவில்லை என, சம்பந்தன் கூறுகிறார். ஒரு வாதத்துக்கு இது சரிதான். ஆனால், எதிர்க்கட்சியில் தமது கட்சியை விட, பெரிய கட்சியாக ஐ.ம.சு.மு இருக்கும் போது, தம்மை ஒருவரும் விலக்கவில்லை எனக் கூறிக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பது, என்ன நாகரிகம்? விலக்க முன், விலகுவது தான் நாகரிகம்.
தமது வாக்குப் பலத்தால், அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு, எதிர்க்கட்சியில் தமது கட்சியை விடப் பெரிய கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என்று கூறுவது என்ன நியாயம்?
இங்கு எழும் முக்கியமானதொரு கேள்வி என்வென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி எதற்கு என்பதேயாகும். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இருந்தது. அதன் மூலம் அக்கட்சி என்ன சாதித்தது என்பது கேள்விக்குறியே.
இப்போது, ஐ.தே. முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணயக் கைதியாக உள்ளதாக மஹிந்த கூறுகிறார். அவரது கூற்றின் இனவாத அர்த்தத்தை ஒதுக்கி, நடைமுறை நிலைமையைப் பார்த்தால், அது உண்மையே. அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தாம் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என, அண்மையில் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறியதிலிருந்து அது தெளிவாகிறது.
அரசாங்கத்தை பணயக் கைதியாக வைத்துக் கொள்வதன் மூலமாவது, தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள, ஐ.தே.க தலைவர்களை நிர்ப்பந்திக்க, கூட்டமைப்பால் முடியுமா? தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, கூட்டமைப்பு, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் என்று எதிர்ப்பார்க்க முடியுமா?
அதேவேளை, கடந்த மூன்றாண்டு காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சம்பந்தன் தேசிய பிரச்சினைகளைக் கையாளவில்லை. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மத்திய வங்கிப் பிணைமுறிப் பிரச்சினை, வரட்சி, வெள்ளம், மலையகத்தில் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள், குப்பைப் பிரச்சினை ஆகியவற்றின் போது, அவர் ஏதாவது கருத்து வெளியிட்டாரா?
எனவே, நாட்டு மக்கள் எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான தற்போதைய விவாதம் அர்த்தமற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
45 minute ago
3 hours ago