Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
கே. சஞ்சயன் / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் நான்கு வாரங்கள் மாத்திரமே உள்ள நிலையில், கடந்த 11ஆம் திகதி, காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கு நடந்த தேர்தலின் முடிவுகளை முன்வைத்து, பல்வேறு கோணங்களில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனை முன்வைத்து, இன்னும் நான்கு வாரங்களில் நடக்கப் போகின்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவைக் கணிக்கின்ற போக்கு பரவலாகத் தென்படுகிறது.
எம்பிலிப்பிட்டியவில், பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கான முதல் வேட்டு தீர்க்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
அவரது கட்சியினர், இதனைப் பெரிய வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். இதே போக்கிலேயே ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அமையும் என்றும், அவர்கள் வாக்காளர்களை நம்ப வைக்க முனைகிறார்கள்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களோ, இதனைத் தமக்கான தோல்வியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ”நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் தான் கவனம் செலுத்தினோம்; பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்தவில்லை” என்று ‘சப்பை’ நியாயம் சொல்கிறார்கள்.
எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையும் சரி, அதனை உள்ளடக்கிய பெந்தர- எல்பிட்டிய தேர்தல் தொகுதியும் சரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது.
பெரும்பாலான தேர்தல்களில் ஐ.தே.கவுக்கு அங்கு வாக்குகள் மிகக் குறைந்தளவிலேயே கிடைத்து வந்தன.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த, எந்தவொரு தேர்தலிலும் பெந்தர-எல்பிட்டிய தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறவில்லை.
இங்கு, ஐ.தே.கவை விட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து வந்தன. வாக்கு வித்தியாசம், ஐ.தே.கவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக இருந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
அவ்வாறான ஓர் இடத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சக்தியை உறிஞ்சி வளர்ந்த பொதுஜன பெரமுன கட்சி பெற்றிருக்கின்ற, 56.31 சதவீத வாக்குகளையோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கின்ற 12.7 சதவீதமான வாக்குகளையோ மிகையான கணிப்புக்குட்படுத்த முடியாது.
இரண்டு கட்சிகளும் இணைந்து, கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்தி இருக்கின்ற சூழலில், இவற்றுக்கு 69 சதவீதமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது உண்மையான தரவு.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கிடைத்த சராசரி வாக்குகள், 56 சதவீதமாகும். ஆனால், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கும், கிடைத்துள்ள வாக்குகள் 69 சதவீதமாகும்.
எனவே, இரண்டு கட்சிகளுக்குமான ஆதரவு, 13 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்றொரு கணக்குப் போடப்படுகிறது.
அதேவழியில், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில், ஐ.தே.கவுக்குச் சராசரியாக, 32 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 24.3 சதவீத வாக்குகளே கிடைத்திருக்கின்றன. எனவே 7.7 சதவீத வாக்குகளை ஐ.தே.க இழந்திருக்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில், பொதுஜன பெரமுனவும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஈடுபட்டிருக்கின்றன.
ஆனால், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் ஒற்றை முடிவை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த நாட்டினதும், முடிவு அவ்வாறாகவே இருக்கும் என்று கணிக்க முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ என்று கூறப்பட்டாலும், தேர்தல்களில் அவ்வாறான கணிப்பைச் செய்ய முடியாது.
தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணிக்கின்ற போது, பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கட்சிக்கு, குறிப்பிட்ட தொகுதியில் இருந்து வருகின்ற பாரம்பரியமான செல்வாக்கு, அதில் முக்கியமானது. இது தவிர, குறித்த தொகுதியின் இனப்பரம்பலும் கூட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.
இதுபோன்ற காரணிகள் சமநிலையில் இருக்கின்ற தொகுதி, பிரதேச சபை ஆகியவற்றுக்கு நடக்கின்ற ஒரு தேர்தலின் முடிவைக் கொண்டு வேண்டுமானால், ஒட்டுமொத்த முடிவையும் கணிக்க முடியும்.
அவ்வாறில்லாத ஒரு தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குச் செய்யப்படும் கணிப்புகள், தவறான பெறுபேற்றைத் தான் தரும்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு, 2006ஆம் ஆண்டில் இருந்து, நடந்த தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை எடுத்துக் கொண்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும், பொதுஜன பெரமுனவினதும் ஆதிக்கம் வலுப்பெற்று வந்திருக்கிறது என்பது கண்கூடு.
2006 ஆம் ஆண்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் காரணத்தால், ஜாதிக சங்வர்தன பெரமுனவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவளித்து, அக்கட்சி 12,954 வாக்குகளைப் பெற்றது.
2011ஆம் ஆண்டில், உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 19,954 வாக்குகளைப் பெற்றிருந்தது.
2019ஆம் ஆண்டில், பொதுஜன பெரமுன தனித்து, 23,372 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனியாக, 5,273 வாக்குகளையும் பெற்றிருக்கிறது.
இது 2011ஆம் ஆண்டில் கிடைத்த வாக்குகளை விட, இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து எட்டாயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன.
ஆனால், ஐ.தே.கவைப் பொறுத்தவரையில் 2006ஆம் ஆண்டில் இருந்து எல்பிட்டிய பிரதேச சபையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறது.
அங்கு, ஐ.தே.கவுக்கு 2006ஆம் ஆண்டில், 10,308 வாக்குகள் கிடைத்தன, 2011ஆம் ஆண்டில் அது 10,427 ஆகச் சற்று அதிகரித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில், அது 10,113 ஆகச் சற்றுக் குறைந்திருக்கிறது.
இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், 2006ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், இங்கு ஐ.தே.கவுக்கு பெரிய வீழ்ச்சியோ பெரிய வளர்ச்சியோ இருக்கவில்லை என்பது தௌிவாகின்றது.
‘நாமும் இருக்கிறோம்’ என்ற நிலையில் தான், எல்பிட்டிய பிரதேச சபையில் ஐ.தே.க இருந்து வந்திருக்கிறது. தேசிய அரசியலில் ஐ.தே.க ஆட்சியைப் பிடித்த காலத்தில் கூட, எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அது செல்வாக்குப் பெறவில்லை.
எனவே, அங்கு ஐ.தே.க படுதோல்வி கண்டுவிட்டது என்ற கணிப்புத் தவறானது.
எல்பிட்டியவில், பொதுஜன பெரமுன வளர்ந்திருக்கிறது. அதற்கு, அதன் மூல வேரான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கு உதவியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து, எல்பிட்டிய பிரதேச சபையை, ஒத்த இனப்பரம்பல் தான் நாடு முழுவதும் இருக்கிறது என்றில்லை. இது கிட்டத்தட்ட, முழு அளவில் சிங்கள வாக்காளர்களை மாத்திரம் கொண்ட ஒரு பிரதேச சபையாகும்.
ஆனால், நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்கள் 74 சதவீதம் மட்டும் தான். இலங்கைத் தமிழர்கள் 11 சதவீதமும், முஸ்லிம்கள் ஒன்பது சதவீதமும், மலையகத் தமிழர்கள் நான்கு சதவீதமும் இருக்கிறார்கள்.
எல்பிட்டிய போன்ற தனிச் சிங்கள வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் தெற்கில் உள்ளது போலவே, தனித் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் வடக்கில் இருக்கின்றன. அதுபோலவே, தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தனியே உள்ள தொகுதிகளும் இருக்கின்றன. மூவினங்களும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய தொகுதிகளும் இருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக்குக் கிடைத்த 69 சதவீத வாக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் அப்படியே நாடு முழுவதும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், அது படுபாதாளத்தில் தான் தள்ளி விடும்.
மிகையான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பல வேளைகளில் தேர்தல்களிலும் போர் முனைகளிலும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.
அதுபோலவே, ஐ.தே.கவும் எல்பிட்டிய தேர்தல் முடிவைச் சாதாரணமாக எடைபோட முடியாது. அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்குள்ள இடம் தான் என, அலட்சியமாக இருந்தால், அவர்களும் மண் கௌவும் நிலையே ஏற்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சவாலான விடயம். அதனைச் சுலபமாகப் பெற்று விடப் போகிறோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கு, எல்பிட்டிய தேர்தல் முடிவை, பொதுஜன பெரமுன பயன்படுத்தப் பார்க்கிறது.
‘தாங்கள் ஓர் அசைக்க முடியாத பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறோம்’ என்று காட்டுவதன் மூலம், தமக்கு எதிரான வாக்குகள், ஐ.தே.கவுக்குச் செல்வதைத் தடுக்கவும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்று கொள்ளச் செய்வதற்கும் முயற்சிக்கிறது.
ஆனால், எல்பிட்டிய தேர்தலை முன்வைத்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்த எந்தச் சரியான முடிவுக்கும் வர முடியாது. அதனை, ‘ஒரு பானை சோற்றுக்கான பதமாக’ எடுத்துக் கொள்ளவும் முடியாது, என்பதுதான் உண்மை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago