2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கசிந்துவரும் வியர்வைத் துளிகள் சிகரம் ஏற்றும்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வி. ஜெயகோபன் தக்சாளினி

(இராமநாதன் நுண்கலை பல்கலைக்கழகம்)

பரதநாட்டியமானது, தமிழ் மக்களின் கலாசாரச் சிறப்புப் பொருந்திய கலைவடிவம்  என்பதுடன், ஆணித்தரமான சாட்சிகள் நிறைந்த தெய்வீகக் கலையாகும். 

சிறு வயதில் இருந்தே, தன்னை அழகுபடுத்தி இரசிக்கும் பழக்கமும் கலாசார ஆடை, ஆபரணங்கள் மீது கொண்ட அதீத ஈடுபாடும் சிறிதளவு இறைபக்தியும், ஒருவரை பரதம் பால் ஈர்ப்படையச் செய்யவல்லன. 

ஒருவருடைய வாழ்வில்,  பரதக் கலை மீது பற்றும் ஈடுபாடும் ஏற்படுமாயின் அவர், இறைவனுக்குத் தான் நன்றி கூற வேண்டும். ஏனெனின் அவ்வளவு சிறப்பு பொருந்தியதும் சக்தி நிறைந்ததுமான இக்கலை, மற்றையவரின் மன நிலையை மாற்றக்கூடிய வல்லமை பொருந்தியதாகும்.

பரதம் கற்கும் மாணவர்கள், பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுத் தேர்ச்சி பெற முடியாது; பல்வேறு இலக்கியம், இதிகாசங்கள், புராணங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றையும் தேடி அறிய வேண்டும். அப்போதுதான் பரதநாட்டியத்தில் முழுமையான தேர்ச்சி அடையலாம்.

இலங்கையில், பரதநாட்டியத்துறை சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், உலக நாடுகளில் எங்கும் இல்லாமல், இலங்கையில் மட்டும் பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் ஒரு பாடமாக உட்புகுத்தப்பட்டமையும், வருடங்களில் அழகியல் போட்டிகள், தமிழ் மொழி தினப் போட்டிகள் வைத்து, அதற்கு பல்கலைக்கழகம் சென்றாலும் புள்ளி வழங்கக்கூடிய சான்றிதழ் வழங்கப்படுவதும், வட இலங்கை சங்கீத சபை பரீட்சை போன்று பல பரீட்சைகள் நடத்தப்படுவதும் காரணமாகும்.

மேலும், தற்காலத்தில் ஊடகங்களிலும் பரதநாட்டிய கலைஞர்களை ஊக்கப்படுத்துவதும் மிக முக்கியமான விடயமாக அமைகின்றது. இதனால்,  இலைமறை காய்களாக இருக்கும் பல கலைஞர்கள் வெளி உலகில் பிரகாசிக்கின்றார்கள். உலகநாடுகளின் பல பாகங்களில் இருந்தும் அவர்களுக்குத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, தமது திறமைகளை வௌிப்படுத்தும் வகையில் ஒரு தளத்தை இந்தப் பரதநாட்டியக் கலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது திண்ணம்.

கணிதம், விஞ்ஞானம் உட்பட ஏனைய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கற்கும் மாணவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், பரதநாட்டியம் பயிலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்   கிடைக்கின்றன. காரணம், இலங்கை உட்பட உலக நாடுகளில் பரதநாட்டியக் கலைக்கு, பெரும் வரவேற்பும்  மதிப்பும் இருப்பதாலாகும்.

பெருமளவான பெற்றோர் மத்தியில், பரதநாட்டியத்தின் சிறப்பு  விளங்காமல் இருக்கிறது என்பது கசப்பான உண்மையாகும். ஏனைய பாடங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், பரதக் கலைக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு, சிறிய உதாரணம், பரத நாட்டிய வகுப்பும் பிற பாட வகுப்பும் ஒரே நேரத்தில் என்றால், அதிகளவு முக்கியத்துவம் நடன வகுப்புக்குக் கொடுக்கப்படுவதில்லை.

இது இலங்கை பூராகவும் காணப்படும் பிரச்சினையாகும். இதைப் பெற்றோர் ஒழுங்கான முறையில் அமைத்துத் தருவார்கள் என்றால், மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் பரதநாட்டியத்தில் இன்னும் சிறந்து விளங்க வாய்ப்பாக இருக்கும்.

வளர்ந்து வரும் மாணவ சமுதாயமும் பரதநாட்டிய பாடத்தின் தார்ப்பரியத்தை அறிந்து, அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும். எப்பொழுதும் கலையை நாம் அர்ப்பணிப்போடும் நிறைவான மனநிலையுடனும் கற்றால், அது எம்மை ஓர் உயரிய இடத்தில் கொண்டு சென்று வைக்கும் என்பது, காலத்தால் அழிக்க முடியாத உண்மையாகும்.

நடனப் பயிற்சியின்போது, கசிந்துவரும் ஒவ்வொரு வியர்வைத் துளியும் எம்மைச் சிகரமேற்றும் என்பதை நாட்டியம் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

 இடறி விழுந்த ஒவ்வொரு பொழுதிலும், இமயமளவு அனுபவங்கள் கிடைக்கப்பெறும். எனவே, இனி வரும் சமுதாயம், ஏற்படும் தோல்விகளைப் படிக்கற்களாக மாற்றி, வெற்றி பெறவேண்டும்.

இக்கட்டுரையாசிரியரான என்னுடைய வாழ்க்கையில், பரதநாட்டியம் பல மாற்றங்களை ஏற்படுத்தி, நன்மை அளித்து இருக்கிறது. பத்து ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன். அதற்குக் காரணம், சற்று முந்திய காலத்தில், நிலவிய நடன ஆசிரியர்கள் தட்டுப்பாடும், பாடசாலைகளில் நடன ஆசிரிய இடமாற்றமும் ஆகும். இருந்தும் எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள், எந்த விதத்திலும் தேடிக்கற்பதற்குத் தடை விதிக்கவில்லை.

அதனால், பல விதமான அபிநய முறைகள், தாளப்பிடிப்புகள் என்பவற்றை அறிய வாய்ப்பாக இருந்தது. எங்கு சென்றும் கற்கலாம்;  யார் எழுதிய புத்தகங்களைப் படிக்கலாம் என்று ஊக்கப்படுத்தியதும் நான், பல்கலைக்கழகம் செல்ல உதவியாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில், சந்தித்த ஆசிரியர்கள்  எனக்குக் கிடைத்த பெரும் வரம் என்றுதான் கூற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு அவர்களின் ஆசிரியர்களால் கிடைக்குமா என்பது தெரியாது.

ஆனால், கிடைத்தால் அது பெரும் பேறு; இன்னும் நன்மை பகிர்க்கும். பரதக்கலை, மனதில் குழப்பம் இல்லாமல் ஓர் அமைதியான மாற்றத்தையும் பெருமை, பொறாமை அற்ற எண்ணத்தையும் மற்றவர்களை மதித்து நடக்கும் மனநிலையையும் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தையும்  குருபக்தி எனும் சிறந்த பண்பையும் பொறுமை என்கின்ற மிகப்பெரிய பொக்கிஷத்தையும் தந்து இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தமிழ் மரபு தோன்றிய காலத்தில் இருந்து, பரதக்கலையானது எம்முடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு, புராதன மன்னர்களின் வரலாற்று சான்றுகளும் மூத்த நடனக் கலைஞர்களின் வழிகாட்டல்களும் பேருதவியாக இருக்கும்.

இத்தகைய சிறப்புகளும் பேறுகளும் நிறைந்த பரதக்கலையை, பேணிப் பாதுகாத்து, எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் சென்று, அழியவிடாது, பாதுகாத்து நிற்க வேண்டும் என்பது, தற்கால கலைஞர்கள் ஒவ்வொருவரின் மாபெரும் கடமையாகும். அத்துடன், சபையில் ஒவ்வொருவரின் கைதட்டலுமே மேலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும்! இதை ஊக்குவிப்பது, பெற்றோரினதும் பொது மக்களினதும் கடமை ஆகும்.

எனவே, கலையைச் சிறப்பிக்க, அனைத்து நடன கலைஞர்களுக்கு இடையிலும் போட்டி பொறாமை இன்றி, ஒற்றுமையுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X