2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காணாமற்போகும் காணாமற்போனோருக்கான பொறிமுறைகள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூலை 06 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்துக்கு, கடந்த மாதம் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கடந்த வருடம் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்த போதிலும், இந்தத் திருத்தத்துக்கு எவ்வித எதிர்ப்புமின்றி, அது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது, காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி, காணாமற்போனோர்களின் உறவினர்கள் வடக்கில் நடத்திவரும் போராட்டங்கள் மூன்றரை மாதங்களைத் தாண்டியிருந்தன. 

அவற்றில், கிளிநொச்சியில் நடைபெறும் போராட்டம், 120 நாட்களையும் வவுனியாவில் நடைபெறும் போராட்டம் 115 நாட்களையும் முல்லைத்தீவில் நடைபெறும் போராட்டம் 104 நாட்களையும் மருதங்கேணியில் நடைபெறும் போராட்டம் 97 நாட்களையும் அப்போது, கடந்து இருந்ததாகத் தமிழ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எந்த மொழி ஊடகமாயினும் பிரசுரிப்பதற்காகச் செய்திகளைத் தெரிவு செய்யும்போது, கடைப்பிடிக்கப்படும், வெளியே சொல்லாத ஒரு கொள்கை இருக்கிறது. தமது வாசகர்களை அல்லது நேயர்களை அதிருப்தியுறச் செய்யும் அல்லது அவர்கள் விரும்பாத செய்திகளைப் பிரசுரிக்காமல் இருப்பது அல்லது பெயருக்கு மட்டும் பிரசுரிப்பது அதுவாகும். 

எனவே, வடக்கில் இவ்வளவு நீண்ட காலமாக நடைபெறும் இந்தப் போராட்டங்களைப் பற்றி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. அந்த ஊடகங்கள் இந்த விடயத்தில் உணர்வற்றவைபோல் தான் நடந்து கொள்கின்றன.

போர்க் காலத்தில் ஊடகங்களின் இந்தப் போக்கு மிகவும் தெளிவாகப் புலப்பட்டிருந்தது. வடக்கில் குண்டு வெடிப்புகளால் ஏற்படும் பாரிய அனர்த்தங்களைப் பற்றி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பெயரளவில் அல்லது திரிபுபடுத்தியே செய்திகளை வெளியிட்டன. 

அதேபோல், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் தெற்கில் பஸ்களிலும் ரயில்களிலும் குண்டு வெடிக்கச் செய்து, சாதாரண மக்கள் கொல்லப்பட்டபோதும், கிராமங்களில் மக்களைப் படுகொலை செய்தபோதும் தமிழ் ஊடகங்களும் பெயரளவிலேயே அச்சம்பவங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டன. 

எனவே, சிங்கள மக்களின் பிரச்சினைகளைப்பற்றி, தமிழ் மக்கள் சரியாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. அதேபோல், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவல நிலைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சிங்கள மக்களுக்கும் குறைவாகவே இருந்தது.

எனவேதான் தனிநாட்டைக் கோரவோ அல்லது தனி நிர்வாக அலகைக் கோரவோ சிங்கள மக்களுக்கு இல்லாத, ஆனால், தமிழ் மக்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சினைகள் யாவை எனச் சிங்களவர்கள் கேட்கிறார்கள். அதேபோல், தம்மை நம்பி, தமக்கு பிரதேச சுயாட்சியை வழங்க, சிங்களத் தலைவர்கள் ஏன் தயங்குகிறார்கள் எனத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.

வடக்கில் நடைபெற்றுவரும் தற்போதைய போராட்டங்கள் அவ்வாறு சிங்கள மக்களின் கவனத்தை ஈர்க்காவிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுள்ளது. 

எனவேதான், அவர் அண்மையில் மேற்கொண்ட வடபகுதிக்கான விஜயத்தின் போது, காணாமற்போனோர்களின் உறவினர்களையும் சந்தித்தார். ஜூன் மாதம் 12 ஆம் திகதி, அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோர்களின் சில உறவினர்களைச் சந்தித்தார்.

அந்தக் கூட்டத்தின்போது, காணாமற்போனோர்களின் உறவினர்கள் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் போரோடு தொடர்புள்ள விடயங்களுக்காக அப்படையினராலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான ஐந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்தனர். 

அவ்வாறு கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த சகலரினதும் பெயர்கள் அடங்கிய பட்டியலொன்றை வெளியிட வேண்டும். பகிரங்கமாகவும் இரகசியமாகவும் நடாத்தப்பட்டு வரும் சகல தடுப்பு நிலையங்களின் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்; அவற்றின் நோக்கத்தை வெளியிட வேண்டும்; அவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கைகளாகும். 

இந்தக் கோரிக்கைகளில் மனிதநேயத் தன்மையோடு ஒருவித அரசியல் சாயலும் காணப்பட்டாலும் அவை நியாயமற்றவை என எவராலும் கூற முடியாது. முன்னைய அரசாங்கமும் தற்போதையஅரசாங்கமும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தோர் விடயத்தில் சட்டபூர்வமாக மட்டும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறமுடியாது. 

ஜனாதிபதியும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது எனக் கூறவில்லை. அதற்காக அவசரமாக எதையும் செய்வதாகவும் கூறவில்லை. தேசிய பாதுகாப்புச் சபை கொழும்பில் கூடும்போது, அதில் கலந்து கொள்ளவரும், உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் விவரங்களை வெளியிடப் பணிப்புரை விடுப்பதாகவே அவர் கூறியிருந்தார். 

ஆனால், அதுவும் பயனுள்ள விடயம் தான். கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை, அரசாங்கம் வெளியிடுமேயானால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய, அது உதவும். அதேவேளை, சரணடைந்ததாகவும் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படும் சகலரும் அரசாங்கத்தின் கைதிகளின் பட்டியலில் இல்லாதிருந்தால் ஏனையோர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராயவும் அது உதவும்.

தமது உறவினர்கள் சில தடுப்பு முகாம்களில் இருப்பதாக இந்தக் கூட்டத்தின் போது, காணாமற்போனோர்களின் சில உறவினர்கள் ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அவ்வாறான தகவல்கள் இருப்பதாயின் அந்த உறவினர்களோடு பொலிஸாரை அந்தத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பத் தாம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் தமிழ்ப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அவ்வாறு தமது உறவினர்களை பொலிஸாரின் உதவியுடன் குறிப்பிட்ட தடுப்பு முகாம்களில் தேட எவரும் முன்வந்ததாகத் தகவல்கள் இல்லை.

ஜனாதிபதி இந்த விடயத்தில் காணாமற்போனோர்களின் உறவினர்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், அவர்கள் அவரைப் பூரணமாக நம்பியதாகத் தெரியவில்லை. தமிழ் ஊடகங்களுக்கு அவர்கள் அதற்குப் பின்னர் தெரிவித்த கருத்துகளின் மூலம், அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

முன்னைய அரசாங்கமும் இந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் அதன் பின்னர், அவர்கள் மேற்கொண்ட இழுத்தடிப்புகளும் அதற்குக் காரணமாகலாம்.

இந்த விடயத்தில், அரசாங்கம் பாரியதோர் நெருக்கடியில் சிக்கியிருப்பதையும் மறுக்க முடியாது. போர்க் காலத்திலும் தென்பகுதிக் கிளர்ச்சிக் காலங்களிலும் சட்ட விரோதமான கொலை, ஆட்கடத்தல், சித்திரவதை, தடுத்துவைத்தல் ஆகியவற்றில் ஆயுதப் படைகள், பொலிஸார், மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆகிய அனைவரும் ஈடுபட்ட போதிலும், ஆயுதப் படையினர் மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

எனவே, காணாமற்போனோர் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதாக இருந்தால், பெருமளவிலான ஆயுதப் படை வீரர்கள் விசாரிக்கப்படுவர். இதன்மூலம் அரசாங்கம் ஆயுதப் படையினரின் கோபத்துக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. இவ்வாறுதான், தென்பகுதித் தலைவர்கள் சிந்திக்கின்றனர். 

சிங்களவரான ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவை கடத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை அதற்குச் சிறந்த உதாரணமாகும். அவரைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நீதிபதி இராணுவத் தளபதியிடம் உதவி கோரியிருந்தார். அது கிடைக்காமல் போகவே, இராணுவத் தளபதியைக் கைது செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை செய்ய நேரிட்டது. 

எனவே, ஆயிரக் கணக்கான தமிழர்கள் காணாமற்போனமை தொடர்பாக, விசாரணை செய்யும்போது ஆயுதப் படையினரிடமிருந்து எவ்வாறான எதிர்ப்பு வரலாம் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

போரின்போது, கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோரின் எண்ணிக்கை பெரும் சர்ச்சையாகவே இருக்கிறது. சிலர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 என்னும்போது, வேறுசிலர் ஐந்து இலட்சம் என்கிறார்கள். அரசாங்கம், இறுதிப் போரின்போது 7,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.

ஐ.நா செயலாளர் நாயகம் 2010 ஆம் ஆண்டு நியமித்த தருஸ்மான் குழு 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிறது. உள்ளூர் தமிழ்த் தலைவர்கள் 75,000 என்கிறார்கள். தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
காணாமற்போனவர்களின் எண்ணிக்கையும் இவ்வாறு பல்வேறு விதமாக அவரவர் விரும்பியவாறு முன்வைக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர்கள் பற்றி நம்பகமானதும் விஞ்ஞான பூர்வமானதுமான ஆய்வொன்றை அரசாங்மோ அல்லது வேறு எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனமோ மேற்கொள்ளாததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தமிழ்க் கட்சிகளாவது அவ்வாறானதோர் ஆய்வை நடத்த வேண்டும் என நினைத்ததாகத் தெரியவில்லை.

விந்தையான நிலைமை என்னவென்றால், போரின்போது, கூடுதலாகத் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதைக் காண தமிழர் விரும்புவதும் தமிழர்கள் குறைவாக கொல்லப்பட்டுள்ளதைக் காண சிங்களவர்கள் விரும்புவதுமாகும். அந்த அளவுக்கு அவலங்கள் அரசியலாக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் காணாமற்போனோரின் பிரச்சினை, 1971 ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சிக் காலத்திலிருந்து சந்தித்து வருகிறது. 1980களின் ஆரம்பத்திலிருந்து தமிழர்களும் காணாமல் போயுள்ளனர். ஆனால், 1980 களின் இறுதியிலிருந்தே அது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. 

எனவே, காணாமற்போனோர்களைக் கண்டு பிடிப்பதற்காகவென அவ்வப்போது இருந்த ஜனாதிபதிகள் ஆணைக்குழுக்களை நியமித்து இருக்கிறார்கள். அவ்வாறான முதலாவது ஆணைக்குழுவை 1992 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நியமித்தார்.

தென்பகுதியில் காணாமற்போனோர்கள் தொடர்பாகவே அது நியமிக்கப்பட்டது. அதையடுத்து 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேசிய ஆணைக்குழுவொன்றையும் மூன்று பிராந்திய ஆணைக்குழுக்களையும் நியமித்தார். அவையும் தென்பகுதியில் காணாமற்போனோர்கள் சம்பந்தமாகவே நியமிக்கப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் எவ்வித பயனையும் அளிக்காது மாயமாய் மறைந்துவிட்டன.

எனவேதான், சர்வதேச நெருக்குதல்கள் மோலோங்கும் போதெல்லாம் இலங்கை அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமிப்பதாகவும் அவை இறுதியில் எவ்வித பயனையும் அளிப்பதில்லை எனவும் ‘ஹியுமன் ரைட்ஸ் வொச்’ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறியிருக்கின்றன.

காணாமற்போனோர்களுக்காகத் தற்போது வடக்கில் நடைபெற்றுவரும் போராட்டம் அவ்வாறான முதலாவது போராட்டம் அல்ல. அடிக்கடி இந்த விடயத்துக்காக வடக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் ஊடகங்களும் தொடர்ந்தும் காணாமற்போனோர்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வந்துள்ளன. சரணடைந்த பின் காணாமற்போன புலிகளின் தலைவர்களைப் பற்றிய செய்திகளும் அவற்றில் அடங்கியிருந்தன. எனவே, இந்தப் போராட்டங்களும் ஊடகங்களும் அந்தப் பிரச்சினை மறைக்கப்பட்டு போகாமல் பார்த்துக் கொண்டுள்ளன. 

மறுபுறத்தில், எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அரசாங்கம் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கவே முயற்சித்துள்ளது. எனவே, அரச படைகள் மட்டுமே போரின்போதும் கடத்தல்களிலும் காணாமலாக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றதோர் எண்ணம் சர்வதேச ரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவோ என்னவோ இது வரை போரின்போது, மனித உரிமை மீறிய, போரிட்ட இரு சாராரையும் பற்றிக் கருத்து வெளியிட்டு வந்த ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் கடைசியாக வெளியிட்ட அவரது அறிக்கையில் அது தொடர்பாக அரச படைகளை மட்டுமே குறைகூறியிருக்கிறார்.

அரசாங்கத்தின் இழுத்தடிப்பு இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் காரணமாகவே அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவ முன்வந்தது. அவ்வாறு இணக்கம் தெரிவித்து, ஒரு வருடத்துக்குப் பின்னர்தான், அந்த அலுவலகம் தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கும் சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், அதாவது கடந்த மாதம் அதற்குத் திருத்தம் ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் அந்த அலுவலகம் நிறுவப்படவில்லை.

அது நிறுவப்பட்டாலும் ஆக, வெறுமனே தகவல் திரட்டும் நிறுவனமாகவே இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அந்த அலுவலகம் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நிறுவனம் அல்லவென அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

எனவே, இது எந்தளவு பயனுள்ள காரியம் என்பதை அதன் நடைமுறையிலேயே பார்க்க வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X